Wednesday 18 January 2017

புலம்பெயர்ந்து வாழும் அடுத்த சந்ததித் தமிழருக்குத் தாய்மொழி அறிவு அவசியமா?




புலம்பெயர்ந்து வாழும் அடுத்த சந்ததித் தமிழருக்குத் தாய்மொழி அறிவு அவசியமானததா? என்ன அபத்தமான கேள்வி என்று எம்மில் பலர் நினைப்போம். வேறு சிலர் இந்த வினாவுக்கு வேறு விதமாக, அதாவது தமது பிள்ளைகளுக்குத் தமிழ்மொழி அறிவு அவசியமில்லை என்று பதில் அளிப்பார்கள். ஆங்கிலம் தலைமை மொழியாக இருக்கும் இந்த நாட்டில் தமிழைப் படிப்பதனால் என்ன ஆகப்போகிறது? அது பணம் ஈட்ட உதவுமா? என்பது இல்லை என்போர் கேட்கும் எதிர்க் கேள்விகள். பணம் மட்டுமா வாழ்க்கை? மனித வாழ்வுக்கு பல உயர்ந்த அர்த்தங்கள் உள்ளன. படிப்பதும் பணம் உழைப்பதும் மட்டும் வாழ்க்கை என்று நினைத்து நாம் வாழ நினைத்தால் மனித வாழ்வு அர்த்தமற்றுப் போகும். படிப்பதும் பணம் உழைப்பதும் மட்டும் வாழ்க்கை என்று எல்லோருமே நினைத்திருந்தால் உலகம் இவ்வளவு முன்னேற்றங்களைச் சாதிக்க முடிந்திருக்குமா? பெருந்தொகையானோர் தம் வாழ்வை அர்ப்பணித்து உலகத்தின் முன்னேற்றத்திற்கு உழைத்திருக்கிறார்கள். பலர் தமது சொகுசான வாழ்வைத் துறந்து உதவப் போனதால்தான் ஏழைகள், நோயுற்றவர்கள், யாருமற்ற ஏதிலிகள் இன்று ஓரளவில் வாழமுடிகிறது. எனவே, படிப்புக்கும் உழைப்புக்கும் அப்பால் வாழ்வுக்கு உயர்ந்த நோக்கங்கள், அர்த்தங்கள் உண்டு. அதில் எமக்கு நாமே செய்யும் மிக முக்கியமானதும் அடிப்படையானதும் அர்த்தபூர்வமானதுமான விடயம் என்னவெனின், யாரோ ஒருவராக, வேறு ஓர் இனத்தின் அடையாளத்துடன் வாழாது, நாம் நாமாக எமது அடையாளங்களுடன் வாழ்வதாகும். எமது அடையாளம் என்பதில் என்னென்ன அடங்கியுள்ளன? மிக அடிப்படையானது எமது மொழி. அடுத்தது எமது நாடு, எமது பண்பாடு மற்றும் பெறுமதிகள். உலகத்தின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் நாம் தலை நிமிர்ந்து வாழ, இவையே எம்மை அடையாளங் காட்டும் விடயங்கள். இவற்றை நாம் காற்றில் பறக்க விட்டோமானால் எவரும் விரும்பாத மனிதர்களாக வாழ நேரும்.
தாய்மொழி என்பது ஒருவருக்கு மிகவும் முக்கியமானதாகும். அது சந்ததி சந்ததியாகப் பல்வேறு அரிய கருத்துக்களை, வாழ்க்கை முறைகளைப், பெறுமதிகளைப் பண்பாட்டு அம்சங்களை, வரலாறுகளை, மரபுகளை, இலக்கியங்களைச் சேமித்து வைத்திருக்கிறது. நாம் எமது மொழியை அறியாது விடுவதன் மூலம் எமது சமுதாயம், எமது பாரம்பரியம், நீண்ட காலம் வளர்ந்து வந்த இலக்கியங்களின் வரலாறு குறித்த பல அரிய விடயங்களை அறியாது விட்டுவிடுகிறோம். எமது தமிழ்மொழி போல நீண்ட வரலாறும், அளப்பரிய இலக்கியச் செழுமையும் கொண்ட மொழிகள் இந்த உலகில் மிகச் சிலவே உள்ளன. சில மொழிகள் எழுத்து வழக்கற்று பேச்சு மொழியாகவே அமைந்திருப்பதால் அடுத்த சந்ததியினர் அதனைப் பேசாது விடும்போது, அதனைப் பேசும் இறுதி முதியவர் இறக்கும் போது, அம்மொழி அழிந்து போகிறது. இரண்டு வாரத்திற்கு ஒரு மொழி என்ற அளவில் இவை அழிந்து கொண்டு போகின்றன. இந்த மொழிகளைக் காப்பாற்றும் பணியில் Enduring Voices project எனப்படும் மொழியியலாளர்களைக் கொண்ட குழு முழுமூச்சாக ஈடுபட்டு வருகிறது. ஏன் இவ்வாறு மொழிகளை அழிந்துவிடாமல் காப்பாற்ற முயற்சிக்கிறார்கள்? எழுத்து இல்லாது பேச்சு மொழியாக மட்டும் உள்ளவை அழிந்து போனால் அந்த மொழி பேசுபவர்கள் வாய்மொழியாகச் சேமித்து வைத்த பெறுமதிமிக்க தகவல்களும் அவற்றுடன் அழிந்து போகும் என்பதாலேயே. அவுஸ்திரேலியாவிலுள்ள குயீஸ்லாந்து, வட மண்டலம், மேற்கு அவுஸ்திரேலியா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளிலேயே உள்ளூர் மொழிகள் அதிக அச்சுறுத்தலுக்குட்பட்டுள்ளன. இந்த பிரதேசங்களில் 153 வேறுபட்ட மொழிகள் பேசப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை அழியும் நிலையில் உள்ளன. இதற்குக் காரணம் அம்மொழி பேசுபவர்களது இளைய சந்ததியோர் ஆங்கிலத்தைப் பேசித் தமது மொழியைப் பேசாது விடுவதே. Enduring Voices project இன் மற்றொரு இயக்குனரும் Living Tongues Institute for Endangered Languages அமைப்பின் இயக்குனருமான Gregory Anderson என்பவர், தற்போது பிள்ளைகளும் ஒரு மொழியின் விதியைத் தீர்மானிக்கிறார்கள் என்றும், தொலைக்காட்சியிலும் பாடசாலையிலும் பேசப்படும் மொழிக்கு அவர்கள் முதன்மை கொடுத்துத் தமது தாய்மொழியைப் புறக்கணிப்பதன் மூலம் அந்த மொழிக்கு அழிவு ஏற்படுகிறது என்றும் குறிப்பிடுகிறார்.
ஒவ்வொருவரும் தமது தாய் மொழியைப் பேசவேண்டும் அதனைத் தொடர்ந்து பேண வேண்டும் என்ற எண்ணத்தினால் ஒவ்வொரு பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதியும் யுனெஸ்கோ, சர்வதேச தாய்மொழி நாள் அதாவது International Mother Language Day என்றொரு நாளைக் கொண்டாடுகிறது. 1999 ஆம் வருடம் நடைபெற்ற யுனெஸ்கோவின் பொது மகாநாட்டில் இவ்வாறு வருடம் தோறும் தாய்மொழி நாள் கொண்டாடப்படவேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது. 2000 ஆம் ஆண்டு பெப்ரவரி 21 ஆம் தேதி அதன் தலமையகத்தில் முதல் சர்வதேச தாய்மொழி நாள் கொண்டாடப்பட்டது. அந்த விழாவை ஆரம்பித்து வைத்த யுனெஸ்கோ என்ற அமைப்பின் இயக்குனர் நாயகம், தனது பேச்சின் போது பின்வருமாறு அழுத்தமாகக் கூறினார். மனித இனத்தின் பண்பாட்டுப் பாரம்பரியத்தில் ஒவ்வொருவருக்கும் தாய் மொழி என்பது மிக இன்றியமையாத பகுதியாகும். மனித படைப்பாற்றலின் குறைத்து மதிப்பிட முடியாத சிறப்பான வெளிப்பாடாகவும் இந்தத் தாய் மொழி அமைந்துள்ளது. இன்றைய உலகில் ஏறக்குறைய 7000 மொழிகள் பேசப்படுகின்றன. இந்த மொழிகள் சொல்லாடலுக்கான சாதனங்களை உருவாக்குவதில் மனித இனத்தின் வியத்தகு ஆற்றலுக்கான சான்றுகளாக விளங்குகின்றன. மனிதர் பிறந்த சமூகங்களின் ஆன்மாவைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகவும் இந்த மொழிகள் விளங்குகின்றன. பழைய காலம் முதல் பல மொழிகளைக் கற்கும் கல்வி முறையானது பண்பாட்டு வேறுபாடுகளைப் பாதுகாக்க மட்டுமல்ல, சர்வதேச புரிந்துணர்வையும் சகிப்புத்தன்மையையும், பரஸ்பர மரியாதையையும் ஏற்படுத்த வழியமைத்தது. யுனெஸ்கோவின் மொழிகளுக்கான நல்லெண்ண தூதுவர் இந்த முதல்நாள் விழாவில் கலந்து கொண்ட போது, மொழியானது அம்மொழி பேசுபவரின் பண்பாடு, அடையாளம் போன்றவற்றை வெளிப்படுத்துவதுடன், சிறந்த தொடர்பாடல் சாதனமாகவும் திகழ்கிறது என்பதையும், அவை மனித இனத்தின் மிகப் பெறுமதி வாய்ந்ததும் மென்மையானதுமான பொக்கிஷமாக இருக்கிறது என்பதையும் சுட்டிக் காட்டினார்.
புலம்பெயர்ந்து வாழும் பிள்ளைகள் தமது தாய்மொழியை மிக இளம் வயதில் கற்பது இலகுவானது என்பதை மீண்டும் மீண்டும் ஆய்வுகள் நிரூபித்து வந்துள்ளன. அதனால்தான் ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என நாம் ஒரு பழமொழி வைத்திருக்கிறோம்.  The Brain That Changes Itself என்ற Norman Doidge என்பவரது புதிய நூல் ஒன்று மூளை எவ்வாறு இயங்குகிறது என்பதை விளக்குகிறது. சிறு வயதில் ஒருவர் மொழிகளை இலகுவாகக் கற்றுக் கொள்வதைப் போல, வயது வந்த பின்னர் கற்க முடியாது. இதற்குக் காரணம் வயது முதிர, மூளை நெகிழ்ச்சியற்றுப் போவதென்பதல்ல. மொழி கற்றலுக்குரிய மூளைப்பகுதி ஒருவரின் அடிப்படை மொழியால் அதிகம் ஆக்கிரமிக்கப்படுவதே இதற்குக் காரணமாகும். இதனாலேயே இன்னொரு மொழியைக் கற்றல் என்பது கடினமாகிப் போகிறது. உதாரணமாக எமது மூளை தமிழ் மொழியாலே ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எமக்கு இன்னொரு புதிய மொழியைக் கற்றுக் கொள்வது என்பது சிரமமாக இருக்கும். இதற்கு மாறாக பிள்ளைகள் ஒரே நேரத்தில் இரண்டு அல்லது அதற்கும் கூடிய மொழிகளை இலகுவாகக் கற்றுக் கொள்ள முடியும். அவர்களது மூளையில் உள்ள மொழிக்குரிய பகுதி, அந்த மொழிகள் அனைத்துக்கும் இடம் கொடுத்து, அந்தந்த மொழிகளுக்குரிய ஒலி அமைப்புக்களையும் சொற்களுக்கான கருத்துக்களையும் பேணி வைத்திருக்கும் நூலகமாக விளங்குகிறது. எனவே ஆரம்ப வயதில் மொழிகளைக் கற்றல் என்பது மிக எளிதானது. இதனால் இளம் பிள்ளைகள் தமது மிக இளமை அல்லது குழந்தைப் பருவத்தில் தமக்கு இயல்பாக உள்ள மொழி கற்கும் திறமையால் குறைந்தது இரண்டு அல்லது மூன்று மொழிகளில் தொடர்பாடும் திறமையைப் பெற்றுக் கொள்கின்றனர்.
பிள்ளைகளுக்கு அவர்களது தாய்மொழியில் போதிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து நீண்ட காலமாக ஆசிரியர்கள் அறிந்திருந்தனர் என்கிறார் வாஷிங்டன் டி சியில் உள்ள Centre for Applied Linguistics இல் ஆலோசகராக இருக்கும் Nadine Dutcher என்பவர். பிள்ளைகள் தமது சொந்த மொழியில் அடிப்படைக் கல்வியைப் பெறுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து அதிகமான ஆய்வுகள் தெரிவித்துள்ளன. குறைந்தளவு பேர் பேசும் மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட மிகப் பெரும்பான்மையன மனிதர்கள் தமது மொழி பேசாத நாடுகளில் வாழ்வதால் அவர்களது பிள்ளைகள் தமது தாய்மொழியில் அடிப்படைக் கல்வியைப் பெறும் வாய்ப்பை இழந்துள்ளனர். நியூசிலாந்தில் தமது தாய்மொழியில் அடிப்படைக் கல்வியைப் பெறும் மயோரி பிள்ளைகள் ஆங்கிலத்தில் கல்வி கற்கும் மயோரிப் பிள்ளைகளை விட நன்கு கற்பதாக அண்மையில் செய்யப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
அமெரிக்காவில் வெஜீனியாவில் உள்ள ஜோர்ஜ் மேசன் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆய்வுப் பகுதி 15 மாநிலங்களில் உள்ள 23 ஆரம்பப் பாடசாலைகளின் பெறுபேறுகளை 1985 ஆம் ஆண்டிலிருந்து அவதானித்து வந்தது. இந்த பாடசாலைகளில் ஒரு பகுதி பாடத்திட்டம் பிற மொழி பேசும் பிள்ளைகளின் தாய்மொழியில் அளிக்கப்பட்டு வந்தது. பதினொரு வருட பாடசாலைக் கல்வியின் பின்னர், தாய்மொழியில் படிப்பதற்கும் பெறுபேறுகளுக்கும் நேரடித் தொடர்பு இருந்தது அவதானிக்கப்பட்டது. இருமொழிக் கல்வி பெற்றவர்களே உயர்தரக் கல்லூரியில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றனர். தாய்மொழியில் கற்றல் என்பது அறிவாற்றலும் உணர்வுப் பெறுமதியும் கொண்டது. அந்த கல்வியைப் பெறும் போது சிறுபான்மையினர் தாம் மாரியாதைப்படுத்தப்பட்டதாக உணர்கின்றனர் என்கிறார் Dutcher. வெளிநாடுகளில் வாழும் வேற்றினப் பிள்ளைகள் தமது தாய்மொழிக்கு பதிலாக வேறு மொழியில் அதாவது அவரவர் வாழும் நாட்டுக்குரிய மொழியில் கல்வியைப் பெறும் போது இருவித தவறான செய்திகளைப் பெறுகிறார்கள். ஒன்று தாம் அறிவில் முன்னேற வேண்டுமாயின் அது தாய் மொழியைப் பயன்படுத்துவதால் வராது என்பது. மற்றது தாய்மொழியால் எதுவித பயனுமில்லை என்பது என்கிறார் ஐக்கிய ராச்சியத்தில் கல்வி மேம்பாட்டுத் துறை வல்லுனரான Clinton Robinson. சில செல்வந்த நாடுகள் தாய்மொழிக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து தமது மொழிக் கொள்கையை மாற்றி வருகின்றன. ஒருவர் தான் வாழும் அந்நிய நாட்டில், அந்நாட்டு மக்களுடன் ஒன்றறக் கலந்து வாழ்தல் என்பதன் கருத்து அவர் தனது தாய் மொழியை மறந்து விடுதல் என்பதல்ல என்கிறார் பிரஞ்சு மொழியில் தேர்ச்சி பெறுதல் என்ற பிரான்சிய அரச துறையில் தலைவராக இருக்கும் Michel Rabaud என்பவர்.  பிரஞ்சிலிருந்து வேறுபட்ட ஒரு மொழியைப் பேசுதல் என்பது ஒரு பிள்ளைக்கு இப்போது இடையூறேயல்ல. வடக்கே உள்ள நாடுகள் மேலும் மேலும் புலம்பெயர்ந்தோரை எடுப்பதால் அதற்கேற்ப தமது கொள்கைகளை அமைக்க வேண்டியனவாக உள்ளன. 2000 ஆம் ஆண்டில் மேற்கு ஐரோப்பாவில் உள்ள 35 வயதுக்குட்பட்ட சனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதிக்கு மேற்பட்டவர் புலம்பெயர்ந்தோரே.
நெதர்லாந்தில் செய்யப்பட்ட ஆய்வு ஒன்றின்படி நாலுக்கும் பதினேழு வயதுக்கும் இடைப்பட்டோரில் 49 வீதமான ஆரம்ப பாடசாலை பிள்ளைகளும் 42 வீதமான உயர்தர பாடசாலை மாணவர்களும் வீட்டில் டச் தவிர்ந்த வேற்றுமொழி பேசுபவர்கள். மொழியால் ஒன்றுபடவேண்டும் என்ற பழைய மொழிக் கொள்கையைத் தொடர்ந்து வைத்திருக்க முடியாது என்று கூறப்படுகிறது. ஒருவர் தனது தாய்மொழியில் பேசுவது என்பது அவரது உரிமை. தாய்மொழிக் கல்வியை ஊக்குவிப்பதற்காகவே யுனெஸ்கோவால் சர்வதேச தாய்மொழி நாள் 1999 இல் பிரகடனப்படுத்தப்பட்டது. இன்று ஒருவரின் அடையாளம். பண்பாட்டை முன்னேற்றுவதில் மொழியின் முக்கியத்துவம் நன்குணரப்பட்டுள்ளது. இவ்வாறாக வளர்ந்து வரும் விழிப்புணர்ச்சிக்கிடையில் இதற்குத் தடைகளும் இருக்கவே செய்கின்றன. மொழிக் கொள்கை பற்றிய தீர்மானம் என்பது அரசியல் சார்ந்ததாகவே இன்னும் உள்ளது. அதே நேரம் எவ்வாறு கற்பிப்பது என்ற தொழில்நுட்பத் தடைகளும் உள்ளன என்கிறார் யுனெஸ்கோவின் தரமான கல்வியின் வளர்ச்சி என்ற பிரிவின் மூத்த உத்தியோகத்தரான Linda King. முக்கியமான அம்சம் என்னவெனில் உள்ளுர் மொழிகளை மதித்து அவற்றைப் பாடசாலை முறையில் சட்டபூர்வமாக இணைக்க வேண்டும். அத்துடன் மாணவர்களுக்குத் தேசிய மொழியையும் தாய் மொழியையும் கற்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் என்றும் மேலும் அவர் கூறுகிறார். இங்கே கூறப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எமது தாய் மொழியாகிய தமிழைக் கற்பதன் முக்கியத்துவம் என்ன என்பதை அனைவரும் விளங்கிக் கொள்ளுதல் மிக அவசியம்.
நாம் எமது அடையாளத்தைப் பேண அடிப்படையில் செய்ய வேண்டியது எமது தாய்மொழியைப் படிப்பதாகும். ஏனெனில் அதுவே எம்மை ஏனைய அம்சங்களான நாடு, பண்பாடு ஆகியவற்றுடன் இணைக்கும் முக்கியமான கருவியாகத் திகழ்கிறது. தமிழைக் கதைத்தால் பின்னர் பாடசாலையில் ஆங்கிலம் கற்பது கடினமாகிப் போகும் என்று சிலர் தவறாக நினைக்கின்றனர். தாய்மொழி அறிவுடன் போகும் பிள்ளை ஆங்கிலத்தை மிக இலகுவாகக் கற்கிறது என்று மீண்டும் மீண்டும் ஆய்வுகள் நிரூபித்து வருகின்றன. அத்துடன் சிறு வயதில் பல மொழிகளைக் கற்கும் ஆற்றலைப் பிள்ளைகள் இயல்பாகவே கொண்டிருக்கிறார்கள். மேலும் எமது தாய்மொழியாகிய தமிழைப் படிப்பதற்கு இலாப நட்டக் கணக்குப் பார்ப்பது சரியானதல்ல. நாமனைவரும் இவற்றை மனதில் கொள்வோம்.

Wednesday 11 January 2017

தைப்பொங்கல்

பொங்கல் என்றதும் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவர்களுக்கு பழைய நினைவுகள் மனதின் மேற்றளத்திற்கு வருவது இயல்பு. ஜனவரி முதலாம் திகதியுடனேயே பொங்கல் ஆரவாரங்கள் அங்கு ஆரம்பித்துவிடும். இந்த ஆரவாரம் வீட்டைத் துப்பரவாக்குவதுடனும் பொங்கலுக்கு வேண்டிய புத்தரிசிக்கு புது நெல்லை குற்றி அரிசியாக்கி பக்குவமாக எடுத்து வைப்பதுடன் ஆரம்பிக்கும். பொங்கலுக்கு முதல் கூடும் சந்தை நாளில் பானை வாங்குவதில் கைதேர்ந்த ஒருவருடன் சந்தைக்கு போய் பொங்கலுக்கு வேண்டிய பொருட்கள் வாங்கப்படும். மண் பானை வாங்குவதற்கு அத்துறையில் மிகுந்த தேர்ச்சி தேவை. அதன் பல பகுதிகளும் ஆராயப்பட்டு சுண்டிப் பார்க்கப்பட்டு தெரிவு செய்யப்படவேண்டும். இல்லாவிடின் பொங்கலன்று பானை மனதைச் சஞ்சலப்படுத்தும். சில வேளைகளில் பானையின் கழுத்து தனியாக கழன்று விடும். பல வேளைகளில் நீரும் பாலும் கீழ் பகுதியால் ஒழுகுவதுண்டு. இத்தொல்லை வேண்டாமென்று பலர் அலுமீனிய அல்லது வெங்கல பானைகளை பொங்குவதற்குப் பயன்படுத்துவார்கள். ஆயினும் புது மண் பானையில் பொங்குகின்ற சந்தோஷம் மற்றைய உலோகப் பானைகளில் பொங்குகிற போது வராது என்பது பலரது அபிப்பிராயம். புதுப் பானையுடன், அதனைப் பொங்கலன்று அலங்கரிக்க இஞ்சி, மஞ்சள் இலைகளும் பொங்கலன்று சமைப்பதற்கான காய்கறிகளும் வாங்கிவரப்படும். இப்பட்டியலில் சிறுவர்களைக் கவரும் பட்டாசும்  பூந்திரிகளும் இடம் பெறாமல் போகாது.
பொங்கலன்று பனிக்குளிரில் விடியலில் எழுந்து குடும்பத்தினர் அனைவரும் நீராடிய பின், முற்றத்தைக் கழுவி அல்லது மெழுகி உலக்கைகளை வைத்து நீள் சதுரமாக பொங்கல் செய்யப்படும் இடத்தை மாவினால் அடையாளப்படுத்தப்படுத்துவார்கள். உள்ளே போய் வருவதற்கு வாசல்கள் நாற்புறமும் விடப்பட்டு அவை கத்தி வடிவில் கீறப்படும். வீட்டின் தலைவி கிழக்குப் பார்த்த ஒரு மூலையில் களிமண்ணால் செய்யப்பட்டு நன்கு மெழுகப்பட்ட மூன்று கற்களை அடுக்கி அடுப்பை அமைப்பார். பிள்ளைகள் சரமாக தொடர்வெடி கொழுத்த, இஞ்சி மஞ்சள் மா இலைகளால் நன்கு அலங்கரிக்கப்பட்டுப் பாலும், நீரும், கருப்பஞ்சாறும் நிறைக்கப்பட்ட பானையை வீட்டின் தலைவர் அடுப்பேற்றுவார். கிழக்கில் உதிக்கும் சூரியனை நோக்கி பால் பொங்கும் படியாக நெருப்பு எரிக்கப்படும். பால் பொங்கியதும் அரிசியைப் போட்டு வீட்டுக்குரிய ஆண் பொங்கலைத் தயாரித்துக் கொண்டிருக்க, பெண்கள் சமையலறையில் பொங்கலுக்கான கறிகளையும் சம்பலையும் தயாரிப்பததில் ஈடுபட்டிருப்பார்கள். பிள்ளைகள் வெடிகொழுத்துவதில் மும்மரமாக இருக்க அங்கு ஆனந்தத்துக்கு குறைவிருக்கவில்லை. பின் சூரியனுக்கு மூன்று இலைகளில் பொங்கல் படைக்கப்பட குடும்பத்தவர் அனைவரும் இணைந்து வழிபடுவார்கள். பின்னர் என்ன, வயிறும் மனமும் நிறையும் படியாக அனைவரும் ஒன்றாக இணைந்து விருந்துண்பார்கள். அதற்கு முன் பொங்க முடியாத அல்லது பொங்க இயலாத உறவினருக்கும் அயலவருக்கும் பொங்கலைக் கொடுத்தனுப்புவார்கள். பசியுடன் வீட்டை நாடி வருவோருக்கு வயிறு நிறையப் பொங்கல் வழங்குவார்கள்.
இவ்வாறாக குடும்பம் முழுவதும் பங்கு பற்றும் ஒரேயொரு பண்டிகை பொங்கல் மட்டுமே. குடும்ப அங்கத்தவர் ஒவ்வொருவருக்கும் அதில் பங்குண்டு. அதனால் குடும்பம் ஒருமைப்படுகிறது. உள்ளம் நிறைந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. மற்றவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் கொடுப்பதால் மனநிறைவு ஏற்படுகிறது. மார்கழி மாதம் முழுவதும் மழையினால் போதிய உணவின்றித் தவித்த சின்னஞ்சிறு பூச்சிகளின் உணவுக்காக வாசலில் இடப்பட்ட மாக்கோலம் கோடை கால வருகையை அறிவிக்கும் பொங்கலுடன் நிறைவெய்துகிறது. வாயில்லா சிறிய உயிரினங்களுக்கு இந்த வகையில் உணவளித்த மகிழ்ச்சியும் திருப்தியும் மனதை நிறைக்கிறது. பொங்கல் பகைமையையும் போட்டியையும் மறந்து ஒன்றுபடும் திசையில் எடுத்துச் செல்லும் நாளாகிறது. அன்பும் இரக்கமும் ஞானமும் ஒளிரும் நாள். ஒருவர் தனது அறியாமையையும் அரக்க குணத்தையும் ஒழிக்கும் நாள். இந்த நிறைவும் மகிழ்ச்சியும் புலம் பெயர்ந்த நாடுகளில் மாக்கோலமின்றி, மண்பானையின்றி வாழையிலைப் படையலின்றி, ஆரவாரமின்றி மின் அடுப்புகளில் பொங்கும் போது ஏற்படுமா? நாம் நாட்டை விட்டு வந்ததால் இழந்த இன்பங்களில் இதுவும் ஒன்று.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்று பலர் கூறுவதை நாம் கேட்டிருக்கிறோம். இங்கே வழி என்பது எதைக் குறிக்கிறது?  நாம் இன்றைய நிலையில் இதற்கு கருத்து கூறுதல் பொருத்தமற்றது. பொங்கல் பண்டிகை உருவான ஆரம்ப காலத்துச் சூழ்நிலையிலேயே இதற்fகு கருத்துக்குக் கூறுவது சரியானதாகும்.
பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் வடகிழக்குப் பருவப்பெயர்ச்சிக் காலமான ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் கடும் மழை பெய்கிறது. இப்பருவ காலம் கொண்டு வரும் மழையால் நெற்பயிர் விளைகிறது. அதே நேரம் ஆவணி மாத சிறு போக விளைச்சலால் கிடைத்த நெல்லின் கையிருப்பு அம்மாதத்தில் நடைபெறும் திருமணங்களாலும் கோயில் திருவிழாக்களாலும் குறைய ஆரம்பித்திருக்கும். இதனாலேயே ஆவணியில் இருந்து விரதங்கள் சிறியளவில் ஆரம்பிக்கின்றன. நெல்லின் கையிருப்புக் குறையக் குறைய விரதங்களின் கடுமை அதிகரிக்கிறது. ஒரு நேரம் உண்ணும் அல்லது உண்ணாமலே இருக்கும் கடும் விரதங்கள் பருவப்பெயர்ச்சி மழை ஆரம்பித்த பின்னர் அதிகரித்திருப்பதைக் காணலாம். அதே நேரம் கோயில் திருவிழாக்கள் அதிகளவில் குறைந்து போயிருக்கும். அதாவது தானியம் கையிருப்பில் குறையக் குறைய விரதங்கள் அதிகரிப்பதும், சமூக விழாக்கள் குறைவதும் தானியத்தை அடுத்த அறுவடை வரை பேணுவதற்கான ஓர் உத்தியே. தமிழர் மட்டுமல்ல உலகில் உள்ள அனைத்து சமூகத்தினரும் பண்டைக் காலத்தில் விவசாய சுழற்சிக்கு ஏற்பவே தமது பண்டிகைகளை, சமூக விழாக்களை அமைத்திருக்கின்றனர்.
தை மாதத்தில் பெரும் போக அறுவடை நடைபெறுகிறது. தானியக் கையிருப்பு அதிகரிக்கவே சமய, சமூக விழாக்கள் அதிகரிக்கின்றன. தைப் பொங்கல் உணவுக்கான கடும் கட்டுப்பாடு நீங்கி தானியக் கையிருப்பு அதிகரித்த மகிழ்ச்சியை, அதனால் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து கொடுக்கக்கூடிய முறையில் தானியமும் அதனால் பணமும் அதிகரித்த சந்தோஷத்தை, அடை மழை நின்று போன மகிழ்ச்சியைக் கொண்டாடுவதே. விவசாய சமூகத்தில் அறுவடையின் பின் நெல்லும் பணமும் புழங்கும் காலம் தை மாதமே. அதனால் நெல்விளைச்சலுக்கு உதவிய சூரியனுக்கும், உழுவதற்கு உதவிய மாடுகளுக்கும் நன்றி கூறுவது இந்தக் காலத்திலேயே. எனவே தை  பிறந்தால் வழி பிறக்கும் என்பதிலுள்ள வழி என்பது அறுவடையின் பின் வயலில் உருவாகும் ஒற்றையடி பாதையான குறுக்கு வழியை மட்டுமன்றி, பொருளாதாரம் செழிப்படைந்ததால் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து கொடுப்பதற்கும் சமூக விழாக்கள் கொண்டாடுவதற்கும் பிறந்த வழியையும் குறிக்கிறது. இதுவே தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கான உண்மையான கருத்து.
பொங்கு என்ற வினையடிக்கு உள்ள பல கருத்துக்களில் To boil up, bubble up by heat -  - பொங்க flourish,, செழிக்க, to rise, மேல் எழும்ப, அதாவது மா போன்றவை புளித்து எழும்ப, to be flushed with hope, நினைத்து மகிழ, நம்பிக்கை கொள்ள ferment புளிக்க, என பல கருத்துக்களை வின்ஸ்லோவின் தமிழ் ஆங்கில அகராதி குறிப்பிடுகிறது. புளித்துப் பொங்குதல் என்ற கருத்தில் கள்ளை சிலப்பதிகாரம் பொங்கல் என்ற சொல்லால் குறிப்பிடுகிறது. பால் பொங்குதல் மட்டுமன்றி செல்வத்தால் செழிப்படைவதும் தை மாதம் இடம்பெறும் பொங்கலுக்கான கருத்தாகும்.
தை மாதம் தமிழ் மாதங்களில் முதலாவது மாதமாகும். பொங்கல் சூரியனின் போக்கின் அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் தமிழ் மாதமான தை முதலாம் தேதியும், Gregorian கலெண்டரின்படி ஜனவரி மாதம் 14 அல்லது 15 ஆம் தேதியும் கொண்டாடப்படுகிறது. அதனால் அன்றே புது வருடம் பிறக்கிறது என்று பலர் நம்புகிறார்கள். தமக்கு தானியங்களை வழங்கும் இயற்கையின் சுழல் வட்டத்துக்கு நன்றி செலுத்துவதற்கு இந்த அறுவடைடையை அடுத்து வரும் காலம் பொருத்தமானது எனத் தமிழர் தெரிவு செய்துள்ளனர்.
ஏன் இந்த தை மாதம் முதலாம் தேதி முக்கியமானது? தை மாதம் முதலாம் தேதி சூரியன் மகர ராசிக்குச் செல்கிறது. அதாவது மகரராசியில் சூரியனது ஒளி பிடிக்க ஆரம்பமாகிறது. முதலில் ராசி என்றால் என்னவென்று பார்ப்போம். பூமி சூரியனைச் சுற்றி வரும்போது பூமியில் இருந்து பார்க்கும் போது சூரியனுக்குப் பின்னால் தொலைவில் அசையாது உள்ள நட்சத்திரக் கூட்டங்களை அக்கால மக்கள் அடையாளமாக வைத்தார்கள். அந்த நட்சத்திரக் கூட்டங்கள் எவ்வாறு கண்களுக்குத் தெரிந்ததோ அதாவது தராசு போல தெரிந்தால் அது துலாம் (Libra) என்று கணித்தனர். மீன் வடிவில் இருந்தால் மகரம் (capricone) என்று அழைத்தனர். இப்படித்தான் 12 இராசிகளும் அமைக்கப்பட்டன. சூரியன் ஒவ்வொரு மாதமும் சூரியனுக்குப் பின்தெரியும் ராசிப்படி அது அந்த ராசிக்குள் போவதாக நம்பினர். எனவே தை முதலாம் தேதி சூரியன் மகர ராசிக்குச் செல்கிறது என்கிறார் கலாநிதி பால சிவகடாட்சம்.
மேலும், பூமி சூரியனைச் சுற்றி வரும்போது பூமியில் உள்ளவருக்கு வருடத்திற்கு ஒரு தடவை சூரியன் வடக்கு நோக்கி கடகராசி வரைக்கும் சென்று பின்னர் தெற்கு நோக்கி மகர ராசி வரைக்கும் வருவதாகத் தெரியும். இது பூமி இருபத்தி இரண்டரை பாகை சரிந்து இருப்பதால் நடைபெறும் இயற்கை நிகழ்வு. பூமத்திய ரேகைக்கு வடக்கே உள்ள ஆசியரே தை மாதம் முதலாம் திகதியைக் கொண்டாடுகிறவர்கள். இவர்களுக்கு பூமி சூரியனைச் சுற்றும்போது சூரியன் பூமத்திய ரேகையில் இருந்து வடக்கு நோக்கி கடகராசி வரை செல்லும் காலம் வசந்தகாலம். பின்னர் கடகராசியில் இருந்து பூமத்திய ரேகை வரும் வரை கோடை காலமாகும். பின் பூமத்திய ரேகையிலிருந்து தெற்கு நோக்கிச் செல்லும்போது இலையுதிர் காலம் ஆரம்பித்துவிடும். இவ்வாறு தெற்கு நோக்கிச் சூரியன் செல்லும் போது அதாவது பூமிக்குக் கீழ் பக்கம் சூரிய வெளிச்சம் படும்போது நீண்ட இரவுகளும் குளிர் காலமும் ஏற்படுகிறது. மகரராசியைத் தொட்டவுடன் அதாவது தை மாதம் முதலாம் திகதி சூரியன் பூமியின் வடக்கு பக்கத்தை நோக்கிய பயணத்தை நோக்கி திரும்பிவர ஆரம்பிக்கும் என்கிறார் சிவகடாட்சம்.  இதுவே ஆசிய மக்களின் கொண்டாட்டத்திற்கு காரணமாகும். தெற்கு நோக்கிச் சென்ற சூரியன் தொடர்ந்து தெற்கு நோக்கியே சென்று குளிர் காலமும் நீண்ட இரவுகளும் தொடர்ந்துவிடுமோ என்ற அச்சத்திலிருந்த மக்கள் சூரியன் திரும்பி வடக்கு நோக்கி வருவதைக் கண்டதும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாகக் கொண்டாடுகிறார்கள். இது இயற்கையில் நடக்கும் நிகழ்வாகும். சூரியன் வடக்கு நோக்கிச் செல்வது உத்தராயணம் எனப்படுகிறது. இது மிகப் புனிதமான காலமாக கருதப்படுகிறது.
சகல முக்கிய காரியங்களும் உத்தராயண காலத்திலேயே செய்யப்படுகின்றன. தேவர்கள் ஆறுமாத நித்திரையின் பின்னர் விழிப்பது இக்காலத்திலேயே என்பது ஐதிகம். உத்தராயணத்தில் இறப்பவர்கள் முத்தி அடைவார்கள் என்ற நம்பிக்கையும் காணப்படுகிறது. பீஷ்மர் தனது உயிரைத் துறப்பதற்கு உத்தராயணத்தின் தொடக்கம் வரை காத்திருந்ததாக மகாபாரதம் கூறுகிறது. Ehma என்ற முனிவர் கும்பகோணத்தில் பொற்றாமரைக் குளத்தின் கரையில் விஷ்ணுவை நோக்கித் தவமிருந்ததாகவும் உத்தராயண ஆரம்பத்தில் விஷ்ணு சாரங்கபாணி வடிவம் கொண்டு அந்த முனிவரை ஆசிர்வதித்ததாகவும் ஒரு ஐதீகம் காணப்படுகிறது. ஒரு கல் யானை கரும்பை உண்பதாக சிவன் ஒரு அதிசயத்தை இந்நாளில் நடத்தியதாக சொல்கிறது இன்னொரு ஐதீகம். சூரியன் மகர ராசிக்குள் நுழையும் காலத்தைக் குறிப்பதே மகர சங்கிராந்தி. திருவள்ளுவர் இந்த நாளில் பிறந்ததாக நம்புவதால் அவரது பிறப்புடன் தமிழ் வருடங்களை எண்ணும் ஒரு முறையும் காணப்படுகிறது.
சூரியனை வழிபடுவது என்பது எந்தக் காலத்தில் ஆரம்பமாகியது? இருக்கு வேதம் இயற்கையைத் தெய்வமாக வழிபடுவதைக் கூறுகிறது. விண்ணைச் சார்ந்த தெய்வங்களில் பல சூரிய தெய்வங்கள் காணப்படுகின்றன. சூரியன், மித்திரன், ஆதித்தியன், சவிதா, பூஷன், விஷ்ணு உஷை என்று பல சூரிய தெய்வங்கள் வழிபடப்பட்டன. இவை சூரியனின் அம்சமாக முதலில் கூறப்பட்டுப் பின்னர் தனித்தனித் தெய்வங்களாக மாறிவிட்டன. விவஸ்வான என்பது எங்கனும் ஒளி வீசுபவன் என்ற கருத்தில் சூரியனுக்கு அடைமொழியாகக் கூறப்படுகிறது. வருணன் என்ற தெய்வம் சூரியனை ஒரு கண்ணாகக் கொண்டு உலகத்தில் உள்ளவரது நடவடிக்கைகளை அவதானிக்கிறது. இயற்கையின் மனிதனின் ஒழுங்குக்கு அவனே பொறுப்பானவன்.
அத்துடன் நண்பன் என்று பொருள்படும் மித்திரன் மற்றும் ஆதீத்தியன் எனப் பெயருள்ள தெய்வங்களுடன் மக்களையும் உழவரையும் கண்காணிக்கும் பொறுப்பையும் கொண்டிருக்கிறான். சூரியனின் போக்கை வரையறுப்பவன் இவனே. இவனுக்கு சவிதா என்ற பெயரும் உண்டு. காத்து நிலை நிறுத்துவதால் விஷ்ணு எனப்படுகிறான். இவன் சூரியனிலிருந்து வேறுபட்டவன் அல்லன்.
இருக்கு வேதத்தில் சூரியனுக்கு 10 சூக்தங்கள் உண்டு. வட்ட வடிவமானவன். உலகம் முழுமையையும் மறைந்து நின்று கவனிக்கிறான் நவக்கிரகங்களில் தலைமையாக விளங்கும் சூரியனே உலகில் காணப்படும் அனைத்துப் பொருட்களின் மூலசக்தி என வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மக்களின் நன்மை தீமைகளை கவனிப்பான். 7 குதிரைகள் இவனது தேரை இழுக்கின்றன. இவன் வந்ததும் மக்களை சுறுசுறுப்பூட்டி இயங்க வைப்பான். இவன் உலகம் முழுவதும் பரந்து காணப்படும் பறவை. ஆகாயத்தில் பதிக்கப்பட்ட பல நிறங்கள் கொண்ட கல். நோய்களையும் தீய கனவுகளையும் ஓட்டி விரட்டுவான். பூஷன் என்ற சூரிய தெய்வம் மஞ்சள் ஒளியைக் கிழக்கில் இருந்து பரப்புவான். பொன் மயமானவன். காயத்திரி மந்திரம் இவனுக்குரியது. சவிதா சூரியனின் கிரணங்களின் துணை கொண்டு ஒளிபரப்புவான். உஷை என்ற பெண் தெய்வம் கிழக்கே தோன்றுவாள். அழகிய ஆடை அணிந்த ஆடலழகி. இருளை அகற்றுவாள். செந்நிற புரவிகள் இவளது தேரை இழுத்துச் செல்லும். ஆகாயத்தின் புதல்வி. சூரியனின் தாய் என்றும் மனைவி என்றும் காதலி என்றும் கூறப்படுகிறாள்.
எகிப்து நாட்டில் ஏடன் எனவும் மற்றும் பல நாடுகளில் இச்சூரியனை ‘‘ஹிலியஸ்’’, ‘‘மித்ரா’’ என்ற பெயரிலும் வழிபட்டு வந்துள்ளது. உலகையே இயங்க வைக்கும் இந்த மகாசக்தி இல்லாவிட்டால், உலகம் ஏது? உயிர்கள்தான் ஏது? இந்தியாவில் அரச வம்சத்தில் சூரியகுல வம்சம் இருந்துள்ளதைக் காண்கிறோம். இராமாயணம் சூரிய குல அதாவது ரகு குல மன்னர்களது வரலாறு பற்றிக் கூறுகிறது. மன்னர்கள் சூரியனைக் குலதெய்வமாக வழிபட்டு வந்துள்ள சான்றுகளும் உள்ளன. திருமூலர்கூட வழிபாட்டு முறையிலும் ஆகம முறையில் புறச்சூரியனையும் யோக முறையில் ஆன்ம சூரியனை வழிபடுவதன்மூலம், அகமும் புறமும் ஒன்றேயாகக் குறிப்பிட்டுள்ளார். சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் மங்கள வாழ்த்துப் பாடலில், ‘‘ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும்’’ என ஆரம்பிக்கிறார். சூரிய வழிபாடு தொன்றுதொட்டு இருந்து வந்துள்ளது என்பதை இதன்மூலம் அறியலாம். காலப்போக்கில் விஞ்ஞானம் வளர அது மனிதனுக்கும் உயிரினங்களுக்கும் தாவர உலகுக்கும் அத்தியாவசியமான ஒரு கிரகமாக மட்டும் சூரின் பார்க்க பார்க்கப்படலாயிற்று.
சூரியன் செங்கதிர்ச் செல்வன், செங்கதிரோன் ஞாயிறு, சூரியன் என்று தமிழ் இலக்கியங்களில் அழைக்கப்படுகிறான். சூரியனின் வரவு எல்லாக் காலத்திலும் மக்களால் வரவேற்கப்படுகிறது. அதுவும் மின்சாரம் வராத காலகட்டத்தில் இருள் மனிதனுக்கு அச்சத்தைக் கொடுத்தது. அத்துடன் இரவில் விவசாயமோ வேட்டையாடுதலோ செய்ய முடியாது. அதனால் சூரியனது வரவை அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இன்றும் பத்து நாட்களுக்கு தொடர்ந்து மழை பெய்தால் சூரியன் எப்போது வரும் என்று மக்கள் காத்திருப்பர். சூரியன் இல்லையென்றால் பயிரில்லை, நிறமில்லை வளர்ச்சியில்லை எதுவும் இல்லை. பயிர் வளர சூரிய ஒளி அவசியம். இதனால் தான் தமிழர் தமது பெரும்போக அறுவடையுடன் சூரியனை வழிபடும் தைப்பொங்கலைக் கொண்டாட ஆரம்பித்தனர்.
இந்த தை மாதம் எந்தக் காலத்தில் இருந்து முக்கிய கொண்டாட்டத்துக்குரிய முக்கியமான மாதமாகியது? தை மாதத்தில் மூத்த தமிழ்ப் பெண்கள் விரதமிருந்து சுனைகளில் நீராடுவார்கள் என்று அகநானூறு, ஐங்குறுநூறு, நற்றிணை, கலித்தொகை, குறுந்தொகை, பரிபாடல், புறநானூறு ஆகிய சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. நற்றிணை என்ற இலக்கியம் தை மாதம் இடம்பெறும் தை ஊண் அதாவது சிறப்பான கொண்டாட்ட விருந்துணவு பற்றிக் குறிப்பிடுகிறது. அதைவிட சங்க இலக்கியங்களிலோ அதைத் தொடர்ந்த காலப்பகுதிகளிலோ இன்றைய பொங்கல் என்ற கருத்தில் எந்தக் கருத்தையும் காண முடியவில்லை. புறநானுறு 168 ஆம் பாடலில் பொங்கல் பற்றிய கருத்து உள்ளதாகச் சிலர் சொல்வதுண்டு. ஆனால் அங்கு பொங்கல் என்ற சொல் இடம்பெறவில்லை என்பதும் அது சூரியனுக்குப் படைத்தல் என்ற கருத்தைக் குறிப்பிடவில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். அத்துடன் தூய்மையாகச் செய்தல் என்பதும் அங்கில்லை. அதில் சொல்லப்படுப்படுவது என்னவென்றால் குறவர்கள் உழாமல் விதைத்த தினை முற்ற அதன் புதுசை உண்பார்கள். அதாவது புதிதாக அறுவடை செய்த தினையை உண்பார்கள். எப்படி உண்கிறார்கள் என்றால் மான் இறைச்சி மணக்கிற பானையைக் கழுவாமல் அதற்குள் இந்தப் புதுத் தினையைப் போட்டு காட்டெருமையில் இருந்து கறக்கப்பட்ட நுரை ததும்பும் பாலை அதற்குள் விட்டு சந்தன மர விறகை எரித்து சமைத்து வாழையிலையில் இட்டு மல்லிகை மணக்கும் முற்றத்தில் பலரோடு வேங்கை மலர் அணிந்த வில் வீரர்களின் குதிரை மலைத் தலைவன் உண்கின்றான். புதிதாக அறுவடை செய்த தினையைப் பாலில் அவித்து வாழையிலையில் உண்கிறார்கள் என்பதைத் தவிர இன்று பொங்கல் என்று நாம் கருதுகின்றவற்றில் மற்றெதுவும் இடம்பெறவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. பல்லவர் காலம் வரை பொங்கல் பற்றிய குறிப்புகள் இல்லை என்றே கூறவேண்டும். பல்லவ சோழர் காலத்தில் பொங்கல் இடம் பெற்றிருந்தனவா என்று அறிவதற்கு சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை. திருவள்ளூர் என்ற இடத்தில் உள்ள வீரராகவன் கோயிலில் கிடைத்த கல்வெட்டின்படி சோழ அரசனான குலோத்துங்கன் கோயிலில் பொங்கல் இடம் பெறுவதற்காக நிலம் தானம் செய்ததாகக் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொங்கல் என்பது தை என்ற தமிழ் மாதத்தின் முதலாம் நாளில் இடம் பெறும் தைப்பொங்கலைக் குறிக்கும். பொங்கல் என்பது அவ்வாறு பொங்குதலை முக்கியமாகக் கொண்டு அரிசியினால் நன்கு அவிந்து சேரும்படியாகத் தயாரிக்கப்படும் உணவையும் குறித்து நிற்கிறது. அன்று செய்யப்படும் உணவின் பெயர் பின் அந்தப் பண்டிகையைக் குறிக்க வழங்கப்படலாயிற்று. தை முதலாம் நாளில் இப்பொங்கல் விவசாயத்திற்கு உதவிய சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் செய்யப்பட்டதால் இந்நாள் தைப்பொங்கல் என்று அழைக்கப்படலாயிற்று.  இந்த அறுவடை விழா திராவிடர் மத்தியில் நெடுங்காலமாக கொண்டாடப்பட்டு வந்ததாகவும் ஆரியரது செல்வாக்கு தமிழ் நாட்டில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்திய போதும் இந்த பொங்கல் மாற்றவோ அழிக்கவோ முடியாதபடிக்கு தமிழர் மத்தியில் நிலைத்து நின்றுவிட்டது என்றும் கூறப்படுகிறது.  ஏனைய பண்டிகைகளுடன் இணைந்துள்ள புராணக் கதைகள் பொங்கலுடன் தொடர்பாக இல்லாதததும் இது தூய திராவிட அதாவது தமிழரது கொண்டாட்டம் என்பதைக் காட்டி நிற்கிறது.
தற்காலத்தில் தமிழ் நாட்டில் தைப் பொங்கல் மூன்று நாட்களுக்குக் கொண்டாடப்படுகிறது. இந்த மூன்று நாள் கொண்டாட்டத்தின் போது வாசலில் வெவ்வேறு வகைக் கோலங்கள் போடுவது அவர்களது வழக்கம். விவசாயத்திற்கு உதவிய மழை, சூரியன், காளை மாடு ஆகியவற்றிற்கு இந்த நாட்களில் நன்றி தெரிவிக்கப்படுகிறது. முதலாவது நாள் போகிப் பண்டிகை எனப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு முதல்நாள் கதிரவனை வரவேற்கும் முகமாக வீட்டிற்கு வெள்ளையடித்துச் சுத்தம் செய்து தேவையற்ற பொருட்களை வெளியேற்றுவது போகியின் முக்கிய நோக்கம். துயரங்களைப் போக்கி, தை முதல் புதுவாழ்வு பிறக்கப் போவதால் இந்நாளைப் ‘‘போக்கி’’ என்றனர். அந்தச் சொல் நாளடைவில் ‘‘போகி’’ என்றாகிவிட்டது. அதனால், போகி என்றால் போகமுடையவன் என்ற பொருளும் உண்டு. இது மழைக் கடவுளான இந்திரனைக் குறிக்கும் சொல். வளமான அறுவடையை அளித்து அதன் மூலம் நாட்டுக்கு செழுமையையும் செல்வத்தையும் வழங்கியமைக்காக இந்திரனுக்கு இந்நாளில் வழிபாடு செலுத்தப்படுகிறது.
இது தமிழ் மார்கழி மாத இறுதி நாளில் இடம்பெறும். அன்று வாசலில் பெருந் தீ வளர்க்கப்பட்டு வீடுகளில் உள்ள குப்பைகள் தேவையற்ற பொருள்கள் என்பன எரிக்கப்படுகின்றன. இந்த தீ மூட்டுதலின் முக்கியத்துவம் என்னவெனில் விவசாய கழிவுப் பொருட்களை எரிப்பதும் குளிர் காலத்தின் இறுதிக் குளிரில் இருந்து பாதுகாப்பதுமாகும். இரவிரவாக எரியும் அந்தத் தீயின் முன் சிறுவர்கள் சிறிய மேளங்களை அடித்து இன்புறுவார்கள். பழைய பொருட்கள் அகற்றப்பட்டு புதியவை இடம் பிடிக்கின்றன. பின்னர் வாசலை அடைத்து பெரிய கோலங்கள் போடப்படுகின்றன. இக்கோலம் புதிதாக அறுவடை செய்யப்பட்ட அரிசியினை மாவாக்கி அதனை நீரில் கலந்து உருவாக்கிய பசையினால் கீறப்படுகிறது. இது ஒரு வகையில் வாழ்வு புதுப்பிக்கப்படுவதையும் வருடப் பிறப்புக்கான ஆயத்தத்தையும் குறிக்கிறது.
போகிப் பண்டிகை பற்றி ஒரு கதை கூறப்படுகிறது. மழை முகிலுக்குத் தெய்வமான இந்திரனை வளமான உற்பத்திக்கு உதவியமைக்காக மக்கள் நாள் முழுவதும் வணங்கினர். இதனால் தற்பெருமையுற்ற இந்திரனின் கர்வத்தை அடக்க கண்ணன் இந்திரனை வழிபடுவதை விட்டு கோவர்த்தன மலையை வழிபடும்படி கூறவே மக்fகளும் அவ்வாறே செய்தனர். இதனால் கோபமுற்ற இந்திரன் கடும் இடி மின்னலுடன் கூடிய பெருமழையை ஏவினான். அப்போது மக்களை காப்பதற்கு கண்ணன் கோவர்த்தன கிரியைக் குடையாகப் பிடித்ததாகச் சொல்லப்படுகிறது. பின் இந்திரன் மன்னிப்புக் கேட்கவே தொடர்ந்தும் போகிப் பண்டிகையை இந்திரனை வழிபடும் முகமாக கொண்டாடும்படி கண்ணன் கூறியதாகவும் அதனாலே தொடர்ந்து அவ்வாறு வழிபடப்படுவதாகவும் அக்கதை கூறுகிறது. இந்தப் போகிப் பண்டிகை இலங்கைத் தமிழரால் கொண்டாடப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் நாட்டில் இந்த பண்டிகையும் அது பற்றிய கதையும் பின்னர் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
இரண்டாம் நாள் அதாவது தை முதலாம் தேதி அறுவடையில் பெற்ற புதிய நெல்லைக் குற்றி அரிசியாக்கிப் பொங்கலிட்டு அது சூரியனுக்கு படைக்கப்படுகிறது. இந்நாளில் தானியக் களஞ்சியம் நிறைந்திருக்கும். அதற்கு உதவிய சூரியனை வழிபட்டு அவனது அருள் தொடர்ச்சியாகத் கிடைக்கும்படி வேண்டப்படுகிறது. இந்தப் பருவ காலத்திலேயே பயறு போன்ற தானியங்கள், கரும்பு, மஞ்சள் போன்றவையும் அறுவடை செய்யப்படுகின்றன. இதனால் இவையும் பொங்கலுடன் இணைந்துள்ளன. அழகான மட்பானையில் மஞ்சள், இஞ்சி இலைகளுடன் மாவிலைகளும் கோர்த்துக் கட்டப்படும். இவற்றில் இஞ்சி வாழ்வுக்கு சுவை சேர்த்தலையும், மஞ்சள் மங்கலத்தையும், மாவிலைகள் வளத்தையும் குறிக்கின்றன. இப்பானையில் இடப்படும் பால், கருப்பஞ்சாறு என்பன வளத்தையும் வாழ்வுக்கு சேர்க்கப்படும் இனிமையையும் வெளிப்படுத்த, புத்தரிசி அறுவடையில் கிடைத்த செல்வத்தைக் குறித்து நிற்கிறது. பால் பொங்கி வழிதல் குடும்பத்தில் செல்வம் சிறக்கவேண்டும் என்ற விருப்பைக் காட்டுகிறது. 
சில இடங்களில் பொங்கலின் போது ஒன்பது குதிரைகள் பூட்டப்பட்ட தேர் ஒன்றை மத்தியில் சூரியனுடன் வரைந்து அதற்குள்ளேயே பூசையை நடத்துவார்கள். பின்னர் சூரியனுக்கு படைத்த பின் அதிலிருந்து சிறிது பொங்கலை எடுத்து நீருடன் கலந்து வீடு முழுவதும் பொங்கலோ பொங்கல் என்று கூறியபடி தௌிப்பார்கள். வீடு முழுவதும் சிதறும் பொங்கல் துணிக்கைகள் வீட்டிற்கு வளத்தை கொண்டு வருவதுடன் வீடு சூரியனால் ஆசிர்வதிக்கப்படும் என்ற நம்பிக்கை பலரிடையே உண்டு.
பொங்கல் உண்மையில் விவசாயிகளுக்குரிய விழா. அவர்கள் அறுவடையின் மகிழ்ச்சியைக் கொண்டாடி அதற்கு உதவிய இயற்கைக்கும் மாட்டுக்கும் நன்றி கூறுவதே கொண்டாட்டத்தின் நோக்கம். விவசாயமே பலரது முக்கிய தொழிலாக முற்காலத்தில் இருந்த காரணத்தால் கிராமம் முழுவதும் இதனைக் கொண்டாடியது. பொங்கல் மரபார்ந்த விவசாய பருவம் முடிவுற்றதைக் குறித்து விவசாயிகளுக்கு ஒரேமாதிரியான வேலையில் இருந்து ஓய்வு கொடுக்கிறது. சில இடங்களில் விவசாயிகள் சில பயிர்களுக்கு பூசை செய்து மரபார்ந்த விவசாய பருவ காலம் முடிவுக்கு வந்ததைத் குறிப்பர்.
கானுப் பண்டிகை அல்லது மாட்டுப் பொங்கல் எனப்படும் மூன்fறாம் நாளில் உழுவதற்கு உதவிய மாட்டுக்கும் பாலை வழங்கும் பசுவுக்கும் பொங்கலிட்டு நன்றி கூறப்படுகிறது. மாட்டுப் பொங்கலன்று மாடுகள் நீராட்டப்பெற்று அழகாக வர்ணங்கள் பூசப்பட்டு அலங்கரிக்கப்படுகின்றன. அவற்றிற்கு குஞ்சங்கள் கட்டப்பட்டு மலர் மாலைகள் அணிவிக்கப்படுவதுமுண்டு. அவற்றின் முன்னிலையில் பொங்கலிடப்பட்டு அவைகளுக்கு முதலில் வழங்கப்படுகிறது. இது பெருமளவில் விவசாயத்திற்காக மாடுகளை உபயோகிக்கும் பகுதிகளிலேயே நடைபெறுவது வழக்கம். சிலர் வீடுகளில் தாம் வைத்திருக்கும் மாடுகளுக்கு பொங்கலிடுவதும் உண்டு. அன்று பொங்கலின் போது விநாயகருக்கும் பார்வதிக்கும் வழிபாடு செலுத்தப்படும். மாலையில் மாடுகள் கிராமத்தின் மத்திக்குக் கொண்டு வரப்பட்டு மஞ்சு விரட்டு என்ற காளையை அடக்கும் விழாவும் ஜல்லிக்கட்டு என்ற காளைச் சண்டை விழாவும் நடைபெறும்.  இது தமிழ் நாட்டில் மட்டுமே நடைபெறுகிறது. அதற்கு மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட தடையை எதிர்த்துக் கடந்த இரண்டு வருடங்களாக தமிழர் தமது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. முன்னர் யாழ்ப்பாணத்தில் பொங்கலன்று மாலையில் மாட்டு வண்டிப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.

ஆழ உழுதலும் போதிய நீரும் அளவான சூரிய ஒளியும் வளமான நெல் அறுவடைக்கு அவசியம். எனவே அறுவடையில் பெற்ற அரிசியை பொங்கலிட்டு இவற்றிற்கு வழங்கிய பின்னரே தாம் உண்ணும் வழக்கத்தைத் தமிழர் கொண்fடிருந்தனர். இயற்கைக்குச் செலுத்தும் இந்நன்றி இயற்கை மனித வாழ்வுடன் எவ்வாறு பின்னிப் பிணைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது.
பொங்கலின் தோற்றுவாயுடன் எந்த புராணக் கதைகளும் இணைக்கப்படாத போதும் காலப் போக்கில் அவற்றின் சில அம்சங்களுடன் எவ்வாறோ கதைகள் சேர்க்கப்பட்டுவிட்டன. மாட்டுப் பொங்கலுடன் இன்னொரு சுவையான வேடிக்கைக் கதை இணைக்கப்பட்டுள்ளது. ஒரு தடவை சிவன் நந்தியின் மூலம் உலகிலுள்ள மக்களுக்கு ஒரு செய்தி அனுப்பினார். அச்செய்தி இதுதான். மக்களே நீங்கள் மாதத்திற்கு ஒரு தடவை உண்ணுங்கள். தினமும் எண்ணெய் தேய்த்து நீராடுங்கள். நந்தி செய்தியைத் தெரிவிக்கும் போது மாறித் தெரிவித்துவிட்டார். அதாவது தினமும் உண்ணுங்கள், மாதம் ஒரு தடவை எண்ணெய் ஸ்நானம் செய்யுங்கள். இதனால் மக்கள் தினமும் உண்ண ஆரம்பிக்கவே உணவுப் பற்றாக்குறை ஏற்பட ஆரம்பித்ததது. அதற்காக மனிதர் விவசாயம் செய்ய வேண்டியதாயிற்று. நந்தி செய்த குளறுபடிக்குத் தண்டனையாக மக்களுடனே தங்கி அவர்களுக்கு விவசாயத்தில் உதவும்படி அவருக்கு கட்டளையிட்டுவிட்டார் சிவன். இந்த உதவிக்காக மக்கள் மாட்டுக்குப் பொங்கலிட்டு நன்றி கூறுகிறார்கள் எனப்படுகிறது. இந்தக் கதை யாராலோ பின்னர் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.
மாட்டுப் பொங்கல் அன்று நடைபெறும் மற்றொரு நிகழ்ச்சி ‘‘கணுப்பொடி’’. தை மாதம் இரண்டாம் நாள் தத்தமது சகோதரர் நலம் கருதி சகோதரிகள் வெட்ட வெளியில் தரையை நன்றாகக் கழுவி செம்மண் பூசி, கோலமிட்டுப் பின்னர் மஞ்சள் சாதம், சர்க்கரைப் பொங்கல், குங்கும சாதம், தயிர் சாதம், கரும்புத் துண்டு, தாம்பூலம், பழம், இவற்றைக் கிள்ளி ‘‘ஐந்து கிள்ளு’’, ‘‘ஒன்பது கிள்ளு’’ என்று ஒற்றைப் படையில் வைப்பார்கள். மஞ்சள் குங்குமத்தோடு நிறைந்த சுமங்கலியாக இனித்த வாழ்வுடன் நிர்மலமான மனத்துடன் சகோதரனும் தானும் நீடூழீ வாழவேண்டும் என்று பஞ்சபூதங்களிடம் மங்கை பிரார்த்திப்பதாக ஐதீகம். இந்தப் பல வண்ணச் சாதங்களைக் காக்கைக்கு உணவாகத் தருவார்கள். காக்கை ஒற்றுமைக்குப் பெயர் போனது. எனவே, கீழ்க்கண்ட பாடல் வரிகளை உரக்கச் சொல்லிக் கணுப்பொடியைக் காக்கைக்கு அர்ப்பணிப்பார்கள். ‘‘காக்கா பிடி வச்சேன், கணுப்பிடி வச்சேன், உன் கூட்டம் கலைந்தாலும், என் கூட்டம் கலையக்கூடாது’’
அதன்பின்னர் சித்ரான்னங்களைக் கலந்து சகோதரன் குடும்பத்தோடு சாப்பிடுவர்கள். சகோதரன் சகோதரிக்கு வெகுமதி தருவதுண்டு. புளிப்பு, னிப்பு, காரங்கள் நிறைந்தது வாழ்க்கை. சரிக்கட்டிக் கொண்டு போக வேண்டும் என்பதைக் குறிக்கவே சித்ரான்னங்கள் படைக்கப்படுகின்றன. அன்று சகோதர சகோதரிகள் எங்கிருந்தாலும் ஒருவரை ஒருவர் நினைத்து அவர்களது நல்வாழ்வுக்காக வழிபாடு செய்வார்கள். இது வடநாட்டில் கொண்டாடப்படும் ரக்ஷ பந்தனத்தின் செல்வாக்கினால் ஏற்பட்டதாக இருக்கலாம்.
அறுவடை நாளான பொங்கல் பிராந்தியத்திற்கு பிராந்தியம் வேறுபாடான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இந்தியா முழுமையும் அந்த நாளில் பொங்கல் கொண்டாடப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு பிராந்தியமும் இதற்கென தத்தமக்குரிய தனித்துவமான பெயர்களைக் கொண்டுள்ளன. தீ மூட்டுதலும் சிறப்புணவும் அனைத்திலும் காணப்படும் பொதுத்தன்மை. சில பிராந்தியங்களில் ஆடலும் பாடலும் கூடவே இடம்பெறுகிறது. வட இந்தியாவில் இந்நாள் லோரி எனப்படுகிறது. அஸ்ஸாமில் Bhagali Bihu எனவும், உத்தர பிரதேசத்திலும் பிஹாரிலும் சங்கிராந்தி எனப்படுகிறது.  மகாராஷ்டிர மாநிலத்தில் ஜனவரி 14 ஆம் தேதி வரும்  மகர சங்கிராந்தி பட்டங்கள் பறக்கவிடும் நாளாக காணப்படுகிறது. விதவிதமான பட்டங்கள் பறக்க விடப்படுவதுடன் மக்கள் ஒருவருக்கொருவர் இனிமையாகப் பேசி இனிப்புப் பண்டங்களைப் பரிமாறிக் கொள்வார்கள். மகர சங்கிராந்தியைக் குறிக்கப் புதிதாகத் திருமணம் செய்த பெண் புத்தாடை தரித்து புதிய கண்ணாடி வளையல்கள் அணிந்து  எண்ணெய், பஞ்சு, எள்ளு ஆகியவற்றை வழங்குவாள். இது அவளுக்கும் அவளது குடும்பத்துக்கும் நீண்ட வாழ்வையும் வளத்தையும் வழங்கும் என்று நம்பப்படுகிறது. குஜராத்திலும் இத்தினத்தில் ஆயிரக்கணக்கான பட்டங்கள் வானத்தில் காலை முதல் மாலை வரை வட்டமிடும். ஒருவரது பட்டத்தை மற்றவர் அறுக்க முயற்சிப்பது வேடிக்கை நிறைந்த நாளாக இதனை மாற்றுகிறது. உத்தர பிரதேசத்தில் மகர சங்கிராந்தியின் போது அனைவரும் ஆற்றில் நீராடுவர். இந்த நாளில் நீராடதவர் அடுத்த பிறவியில் கழுதையாகப் பிறப்பர் என்ற நம்பிக்கை அங்கு காணப்படுகிறது. நீராடுவதுடன் கிச்ரி எனப்படும் பயறும் அரிசியும் கலந்த சாதத்தை அனைவருக்கும் வழங்குவர்.

ஆந்திர பிரதேசத்தில் போகி, சங்கிராந்தி, காணும் என்று மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது. முதல் நாள் விசேட நீராடலுக்கு முன் தீ மூட்டி பழைய பொருட்கள் எரிக்கப்படுகின்றன. சங்கிராந்தியன்று பொங்கலி என்று அழைக்கப்படும் பொங்கல் தயாரிக்கப்படும். மூன்றாம் நாள் மிருகங்கள் அலங்கரிக்கப்பட்டு போட்டிக்கு விடப்படும். கோழிச் சண்டை, காளைச் சண்டை ஆகியனவும் நடத்தப்படும். இக்காலத்தில் சூரியனும் மகாபலியும் கோடாதேவியும் வணங்கப்படுகிறார்கள்.

கர்நாடகத்தில் சங்கராந்தியின் போது காளை, பசு மாடுகள் நன்கு அலங்கரிக்கப்பட்டு பொங்கல் வழங்கப்படும். கோயிலிலும் வீடுகளிலும் சிறப்பான பிரார்த்தனைகள் நடைபெறும். மாலையில் மாடுகள் வாத்ய இசையுடன் வீதியில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். இரவில் தீ மூட்டப்பட்டு மிருகங்கள் அவற்றைப் பாய்ந்து கடந்து செல்லச் செய்யப்படும். மகர சங்கிராந்தியின் போது அனைவரும் அழகிய வண்ணங்களில் ஆடை அணிந்து சொந்தக்காரர்களிடம் சென்று இனிப்புக்களைப் பரிமாறிக் கொள்வர். பூசைகளின் பின்னர் எள்ளு, வேர்க்கடலை, உலர்ந்த தேங்காய், அச்சு வெல்லம் ஆகியன பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.
இந்திய கொண்டாட்டங்கள் பொதுவாக தூய்மை செய்தலுடன் ஆரம்பமாகிறது. பொங்கல் வருகிறது என்றதும் வீடும் சுற்றுப்புறங்களும் தூய்மை செய்யப்படுகின்றன. அசுத்தங்களை அகற்றி அழித்தல் ஒரு வகையில் தீமைகளை அகற்றி நன்மைகளை எதிர்நோக்குவதையும் குறிக்கிறது எனலாம். தமிழ் நாட்டில் வீட்டில் உள்ள அனைவருக்கும் புத்தாடைகள் வாங்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் இந்த வழக்கம் அதிகம் இல்லை. அதற்குப் பதிலாகச் சீனவெடிகள் வாங்கப்படுகிறது. பிள்ளைகளுக்கு பட்டாசு வெடிப்பதே அதிகம் மகிழ்ச்சிக்குரிய விஷயம்.
சூரியன் பற்றிய ஒரு சிறிய புராணக் கதையுடன் பொங்கல் பற்றிய எமது கட்டுரையை நிறைவு செய்வோம். நாம் ஏன் தைப்பொங்கலுக்கு சோறாகச் செய்யாது நன்கு அவிந்து சேர்ந்த பொங்கலாகச் செய்கிறோம். இதற்கு ஒரு புராணக் கதையில் கூறப்படும் ஒரு விவரம் சுவையான ஒரு விளக்கத்தைத் தர உதவுகிறது. புராணக்கதைகள் உண்மையல்ல. அவை எமது சமயத்தின் சில முக்கிய கருத்து வளர்ச்சிகளைக் காட்டவும், சில அடிப்படைக் கோட்பாடுகளை சாதாரண மக்களுக்கு சுவையுடன் விளக்கவும் உருவானவையே. தக்கன் யாகக் கதை பற்றி நீங்கள் அறிந்திருந்திருப்பீர்கள். அது மகாபாரதத்தில் இரு தடவைகள் கூறப்பட்டுள்ளது. அத்துடன் புராணங்களிலும் இடம் பெற்றுள்ளது. இக்கதை வேறு வகைகளில் முக்கியம் பெற்றபோதும் நான் கூறவுள்ளது வெறும் சுவைக்காக சேர்க்கப்பட்ட ஒரு சம்பவம். தக்கன் யாகத்துக்கு சிவனைத் தவிர ஏனைய தெய்வங்களும் தேவர்களும் அழைக்கப்பட்டனர். இதனால் கோபமடைந்த சிவன் வீரபத்திரரை யாகத்தை அழிப்பதற்கு அனுப்பி வைத்தார். அவர் சென்று யாகத்தை அழித்ததுடன் அதில் பங்கு பற்றிய தேவர்கள் அனைவரையும் கடுமையாகத் தண்டித்தார். இந்த தண்டனை பற்றித் தேவார திருவாசகங்கள் பல இடங்களில் வர்ணிக்கின்றன. திருவாசகத்தில் உள்ள திருவுந்தியார் என்ற பகுதி இத்தண்டனை பற்றி விலாவாரியாக வர்ணிக்கிறது. தண்டனை பெற்றவரில் ஒருவன் சூரியன். அவனது பற்கள் அனைத்தும் வீரபத்திரரால் உதிர்க்கப்பட்டன. சூரியனார் தொண்டை வாயிற் பற்களை வாரி நெரித்தவாறுந்தீ பற என்கிறது திருவாசகம்.  தொண்டை என்பது இங்கு கொவ்வை. கொவ்வைக் கனி போன்ற சிவந்த வாயுடைய அவனது பற்கள் அனைத்தும் உதிர்க்கப்பட்டன. அவனுக்கு பல்லில்லாத காரணத்தினாலேயே நாம் அரிசியை நன்கு அவித்து பொங்கலாகச் செய்கிறோம். இது சுவைக்காகத் தரப்பட்ட விளக்கமே தவிர இதில் உண்மையொன்றும் இல்லை.
நெல்லை க முத்து என்பவர் எழுதிய தமிழ்ப் புத்தாண்டில் கறுக்கும் சூரியன் என்ற கட்டுரையை இணையத்தில் படித்தேன். அதன் முக்கிய பகுதியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
ஞாயிறு போற்றினர் நம் முன்னோர். சூரியன் என்றும் அளவு மாறாமல் நிலைத்து நிற்கிறது என்றுதான் நினைத்துக்கொண்டு இருக்கிறோம். அறிவியலாரிடம் கேட்டால் அப்படி இல்லை என்று மறுக்கிறார்கள். தாவரங்கள் வளரவும், உயிரினங்கள் வாழவும் விளம்பரம் இல்லாமலே தன்னார்வத் தொண்டாற்றி வருவது அண்டவெளிச் சூரியன் மட்டுமே. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அய்யன் திருவள்ளுவர் ஒருவேளை இதையே ஆதி பகல(வ)ன் என்றே பாடி இருப்பாரோ? இரவு, பகல் பாராமல் சொந்தக் கணக்கில் இருந்து இலவச ஒளியினை அள்ளி வழங்குகிற சூரியன் சுயநலம் அற்றது. பல கோடி ஆண்டுகளாய்த் தினமும் மாலையில் பணிமுடித்து சம்பளமோ, கிம்பளமோ, பட்டமோ, விருதோ எதுவும் கேட்டு வாங்காமல் ஆடம்பரம் இன்றி அமைதியாய்ப் போய், மறுநாள் தானே வந்து பணி தொடர்கிறது. இடையறாது ஒளியை வாரி இறைப்பதால் சூரியச் சட்டியில் உள்ளிருப்பு குறைந்து வருகிறது. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சார்பியல் சித்தாந்தப்படி ஆற்றலும், பொருளும் சமம் அல்லவா? ஆதலால் சூரியன் ஒவ்வொரு நொடியிலும் இழக்கும் பொருள் அளவு 60 லட்சம் டன்கள். கிட்டத்தட்ட 3 லட்சம் சரக்கு லாரி எடைக்குச் சமம் என்றால் பாருங்களேன்.
சூரியனின் நிறை ஈர்ப்புக் குன்றுவதால், தனக்குத்தானே பலூனாய் ஊதிப் பெருகி வருகிறது. அத்துடன் சூரியனுக்குள் நிகழும் அணுக்கரு வினைகள் மந்தம் அடைகின்றன. அதனால், இன்று மஞ்சள் விண்மீனாகத் தோன்றும் சூரியன், எதிர்காலத்தில் செம்பூத விண்மீனாக 100 மடங்கு குண்டாகிவிடும். பூமிக்கு அது உபத்திரவம். இங்கு கடல்கள் வற்றும். நீர்நிலைகள் ஆவி ஆகும். இன்னொரு ரகசியத் தகவல். நமக்கும் இந்தச் சூரியனுக்கும் உரிய இடைவெளி அதிகரித்து வருகிறது (சாமி சத்தியம், இது பிசகாத வானவியல் கணிப்பு). ஒவ்வோராண்டும் சூரியன் அரை அடி வீதம் அடியெடுத்து நம்மை விட்டு விலகுகிறது என்பது உண்மை. 2004-ம் ஆண்டு கிரிகொரி ஏ. கிராசின்ஸ்கி மற்றும் விக்டர் ஏ. ப்ரம்பர்க் ஆகியோரின் ஆராய்ச்சி முடிவு இது.
ஆனால் ஜப்பானில் ஹிரோசாகி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் தக்கோஹா மியுரா ஆகியோர் சிந்தனையும் முக்கியம் ஆனது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான ஈர்ப்பு உராய்வினால் பூமியின் ஆண்டுச் சுழற்சிக் காலம் 2100-ம் ஆண்டுவாக்கில் இன்றைக்கு உள்ளதைவிட 3 மில்லி நொடி குறைந்துவிடுமாம். இவ்விதம் வேகம் தளர்ந்த பூமியின் சுற்றுவட்டம் மெல்ல விரிவடைந்து வருவதில் ஆச்சரியம் இல்லை. பூமி மட்டும்தான் தனது சுழற்சியில் தளர்ந்து வருகிறது என்று இல்லை. சந்திரனின் புவி சுற்றுவட்டம் வேறு ஆண்டுதோறும் மூன்று விரல்கடை அளவு வீதம் விரிவடைந்து வருகிறது.
திங்கள் கோள் நேர்தல் என்று சங்கத் தமிழில் சொன்னால் நம்மவர்க்குத் தெரியவே தெரியாது. சந்திர கிரகணம் என்கிறோம். அதுசரி, நீல நிலா என்னவென்று தானே கேட்கிறீர்கள்? ஏதேனும் ஒரு ஆங்கில மாதத்தில் பெர்ணமி இரண்டு முறை வருமானால் இரண்டாம் தடவையாகத் தோன்றும் முழு நிலாவுக்கு இந்தப் பெயர். 2009 டிசம்பர் முதல் நாளில் பெüர்ணமி பூத்தது. அதே மாதம் 31 அன்று இரவு நீல நிலா கிரகணம் பிடித்தது. அடுத்த நீல நிலா 2012 ஆகஸ்ட் 31 இடம் பிடித்தது
உண்மையில் சூரியனுக்கும் பூமிக்கும் நேர் நடுவில் அமாவாசைச் சந்திரன் குறுக்கிட்டு மறைப்பதே சூரியகிரகணம் என்பது பழைய பள்ளிப்பாடம். அப்படியானால் ஒவ்வொரு அமாவாசை நாளன்றும் சூரியன் கிரகணம் ஆக வேண்டுமே. அதுதான் இல்லை. காரணம், சந்திரன்-பூமியைச் சுற்றும் பாதையும், பூமி-சூரியனைச் சுற்றும் பாதையும் ஒரே தளத்தில் இல்லை. இரண்டு சுற்றுப்பாதைகளுக்கும் இடையே 5 பாகை சாய்மானம் இருக்கிறது.
அதனால் இரண்டு வட்டப் பாதைகளும் ஒன்றுக்கொன்று வெட்டிக்கொள்ளும் புள்ளிகளில் மட்டுமே சூரியகிரகணம் தோன்றும். சூரியன் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி இயங்குவது போல் தோன்றும் உத்தராயணத்தில் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களிலோ, சூரியனில் தெற்கு நோக்கிய தட்சிணாயனத்திலோ நிகழ்கிறது. ஆண்டுக்குச் சராசரி 2 கிரகணங்கள் நிச்சயம்.
ஆனால் 1582 முதல் இன்றைய ஆங்கில நாள்காட்டி எனப்படும் கிரகோரியன் நாள்காட்டி வழக்கத்துக்கு வந்தபிறகு, அதிசயமாக 1693, 1758, 1823, 1870, 1935 ஆகிய ஆண்டுகளில் ஐந்து சூரிய கிரகணங்கள் நிகழ்ந்துள்ளன. இனி 2206-ம் ஆண்டுதான் ஐந்து சூரிய கிரகணங்கள் ஒரே ஆண்டில் நிகழ இருக்கிறது.
இருந்தாலும் சந்திரன், பூமியைச் சுற்றிவரும் பாதை சரிவட்டமாக இல்லை. ஒரு குறித்த நீள்வட்டத்தில் இருக்கிறது. பூமிக்கு அருகுப் புள்ளியில் இயங்கும்போது சந்திரனின் நிழல் சூரியனை முழுவதுமாக மறைக்கிறது. அதுவே முழு கிரகணம். அன்றி, சந்திரன் பூமியின் தொலைவுப் புள்ளியில் இருக்குமானால், சூரிய முகத்தில் கங்கண கிரகணம் வளையம் இட்டுத் தோன்றும்.
ஆனால், ஏறத்தாழ 14 லட்சம் கிலோமீட்டர் குறுக்களவு கொண்ட மிகப் பிரம்மாண்டச் சூரியனை வெறும் 3,476 கிலோமீட்டர் சந்திரன் மறைப்பதாவது? இதையே வேறு விதமாகச் சொன்னால், சூரியன் தினமணியின் தலையங்கப் பக்க அளவு என்றால் தலைப்பில் வரும் ஒரு கரும்புள்ளிதான் சந்திரன். சூரியனைவிட 400 மடங்கு சிறியது. ஆனால், சூரியனைக் காட்டிலும் 390 மடங்கு நமக்கு அருகில் இருக்கிறது. அதனால்தான் சூரியனையே மறைக்கிறது.
இயேசு நாதர் சிலுவையில் அறையப்பட்ட தறுவாயில், நண்பகல் தொடங்கி, மூன்று மணி வரை நாடெங்கும் இருள் உண்டாயிற்று (மாற்கு15:33-34) என்கிறது வேதாகமம். இது சூரிய கிரகணமோ என்னவோ? அதுமட்டுமா, அண்ணல் முகம்மது நபி உதித்த கி.பி. 569-570 ஆண்டுக் கட்டத்தில் நிகழ்ந்த ஒரு சூரிய கிரகணம் வரலாற்றில் பதிவாகி இருக்கிறது. ஆயினும் முகம்மது நபி பிறப்புக்கும், சூரிய கிரகணத்துக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை.