Monday 20 February 2017

சிவராத்திரி



சிவனுக்கு ஐந்து வித சிவராத்திரிகள் புனிதமானவை என்று கூறப்படுகிறது. யோக சிவராத்திரி என்பது யோகத்தின் மூலம் ஒரு யோகி தனக்கென ஒரு இரவை உருவாக்கி சிவனை வழிபடும் சிவராத்திரி,  நித்திய சிவராத்திரி என்பது தினமும் வருவது. பக்ஷ சிவராத்திரி என்பது இரு வாரங்களுக்கு ஒரு தடவை வருவது. மாச சிவராத்திரி என்பது மாதாந்தம் வருவதாகும். வருடத்திற்கு ஒரு தடவை வரும் சிவராத்திரி மகா சிவராத்திரி எனப்படுகிறது. மகாசிவராத்திரி என்ற சமஸ்கிருதச் சொல்லின் கருத்து சிவனுக்குரிய பெரிய அல்லது சிறந்த இரவு என்பதாகும். அது மாசி மாதத்தில் அதாவது February-March மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் அமாவாசைக்கு முதல் நாள் சதுர்த்தசியில் வருவதாகும். இது ஒரு பண்டைய சமய விழாவாகும். ஏனைய பல இந்து சமய விழாக்களிலிருந்து சிவராத்திரி மாறுபட்டுள்ளது. பெரும்பாலான விழாக்கள் விரதத்திலும் வழிபாட்டிலும் ஆரம்பித்து விருந்தில் நிறைவடைவனவாகும். ஆனால் சிவராத்திரியின்போது முழு நாளும் சிவ வழிபாட்டிற்காக ஒதுக்கப்படுகிறது. மனித வாழ்வில் நாளாந்தம் செய்யப்படும் இரண்டு முக்கிய செயல்கள் அதாவது உணவு உண்ணுதலும், இரவு உறக்கமும் அன்று சிவ வழிபாட்டிற்காக துறக்கப்படுகிறது.

மனம் போனபடி போகும் புலன்களைக் கட்டுப்படுத்துவதே விரதமிருப்பதன் அடிப்படை நோக்கமாகும். உணவை தவிர்க்கும் போது உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது எளிது என்று கருதப்படுகிறது. தினமும் நாம் அனுபவிக்கும் நித்திரை தாமத குணத்தின் வெளிப்பாடு என்றும், விழித்திருப்பதன் மூலம் அந்தக் குணம் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது என்றும் சொல்லப்படுகிறது. இவ்வாறு உணவையும் உறக்கத்தையும் கட்டுப்படுத்துவதன் மூலம் நாம் சாதாதரண  விழிப்பு நிலையையும், விழிப்பற்ற உறக்க நிலையையும் கடந்து மிக உயர்ந்த உணர்வு விழிப்பு நிலைக்குச் செல்கிறோம். சாதாரண விழிப்பு, உறக்க நிலைகள் இறைவனை உணர்வதற்குத் தடையாக இருப்பனவாகக் கருதப்படுகின்றன. தினமும் விழிப்பு நிலைக்கும் தூக்க நிலைக்கும் போய் வரும் நாம், உயர் விழிப்பு நிலை பற்றி உணர்வதேயில்லை. சிவராத்திரியில் விரதமிருந்து உறக்கத்தைத் தவிர்க்கும் போது எமது புலன்கள் கட்டுப்படுகிறது. அந்த நிலையில் நின்று இறைவனைப் போற்றி வழிபடும் போது எமது உணர்வுகள் வெண்ணை போல உருகி, நாம் உயர்ந்த விழிப்பு நிலைக்குச்  செல்ல வழிவகுக்கிறது. 


சிவபுராணத்தின்படி மகாசிவராத்திரி வழிபாட்டில் ஆறு அம்சங்கள் சேர்க்கப்படவேண்டும். சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய வேண்டும். இது ஆன்மாவைத் தூய்மைப்படுத்துதலைக் குறிக்கும். லிங்கத்திற்கு குங்கும்  அணிவித்தல் நல்லியல்பையும் நல்ல பலனையும் வழங்கும். உணவு நிவேதித்தல் நீண்ட ஆயுளையும் விருப்பங்கள் நிறைவேறுவதையும் குறிக்கும். தீபமிடுதல் செல்வத்தை வழங்கும். எண்ணெய் விளக்கேற்றுதல் ஞானம் அடைதலைக் குறிக்கும். வெற்றிலை அளித்தல் உலக இன்பங்களiல் திருப்தியைக் குறிக்கும். இந்த ஆறு அம்சங்களும் வீட்டிலாவது கோயிலிலாவது சிவராத்திரியை அனுஷ்டிக்கும் போது இறைவனுக்கு வழங்கப்படவேண்டியவை என்று புராணம் கூறுகிறது.

சிவராத்திரி அன்று காலையில் எழுந்து புனித நீரில் நீராடி புத்தாடை தரித்து சிவனுக்கு நீராட்ட புனித நீரை குடத்தில் நிறைத்து ஏந்தியவாறு பக்தர்கள் கோயிலுக்குப் போகிறார்கள். உதாரணமாக இலங்கையில் திருக்கேதீஸ்வரம் என்ற பாடல் பெற்ற தலத்தில் சிவராத்திரியின் போது பக்தர்கள் தாம் பாலாவியிலிருந்து குடத்தில் நிறைத்து ஏந்தி வரும் நீரை தாமே அபிஷேகம் செய்வதற்காக கோயிலின் உட்பிரகாரத்தில் தாபிக்கப்பட்டிருக்கும் மிகப் பண்டைய லிங்கமான மகாலிங்கத்துக்கு எடுத்துச் செல்வர். கோயிலுக்குப் போகும் பக்தர்கள் இரவு முழுவதும் விழித்திருந்து கோயிலின் கருவறையில் உள்ள லிங்கத்துக்கு நடைபெறும் அபிஷேகங்களிலும் பூசைகளிலும் கலந்து கொள்கிறார்கள்.

சிவராத்திரியின் போது இரவு நான்கு யாமங்களாகப் பிரிக்கப்படுகிறது. அந்த நான்கு யாமங்களிலும் சிவலிங்கத்துக்கு விசேடமாக அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. அந்த யாமப் பூசைகளின் போது எவையெவற்றால் வழிபடவேண்டும் என்பதை புனித நூல்கள் எடுத்துக் கூறுகின்றன. முதல் யாமப் பூசையின் போது தாமரை மலரால் அர்ச்சித்து பொங்கலை நிவேதனமாக வழங்கி, இருக்கு வேதத்தை ஓதி வழிபடவேண்டும். இரண்டாவது யாமப் பூசைக்குரிய இலை துளசியாகும், அத்துடன் பாயாசத்தை நிவேதித்து யசுர் வேதத்தை ஓதி வழிபட வேண்டும். மூன்றாவது யாமத்தில் வில்வம் இலைகளால் சிவனுக்கு அர்ச்சனை நடைபெறுகிறது. எள்ளும் மாவும் கலந்த உணவை நிவேதித்து சாமவேதத்தை ஓதி வழிபட வேண்டும். நான்காவது யாமத்தில் நீலோத்பல மலர்கள் அர்ச்சனைக்குரியவை. அத்துடன் எளிமையான ஒரு பிரசாதத்தை நிவேதித்து அதர்வ வேதம் ஓதி வழிபடுவது சிறப்பானது. விரதம் அனுஷ்டிக்கும் பக்தர்கள் அடுத்த நாள் விடியும் வரை சிவனுக்கு நிவேதித்த பொருட்களையும் உண்ணுதல் கூடாது என்றும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்து விரதங்களினதும் கொண்டாட்டங்களினதும் பெருமையையும் சிறப்பையும் பழமையையும் உணர்த்த புராணக் கதைகளில் அவற்றின் மூலத்தைத் காண்பது போல, சிவராத்திரியின் ஆரம்பமும் புராணக் கதைகளுடன்f இணைக்கப்பட்டுள்ளது. தனது கணவனான சிவனை நினைத்து அவரது நலனுக்காகவும் தீமைகள் அவரை நெருங்காதிருப்பதற்காகவும் பார்வதி உணவைத் துறந்து பிரார்த்தனையிலும் தியானத்திலும் ஈடுபட்ட தினமே சிவராத்திரி என்கிறது ஒரு கதை. ஆண்களும் பெண்களும் சிவராத்திரியன்று விரதம் அனுஷ்டித்து சிவனை வழிபடுகின்ற போதும் இந்தக் கதையின்படி அது பெண்களுக்கு விசேடமாக உரிய வழிபாட்டுத் தினமாகவே கருதப்படுகிறது. இன்று திருமணமான பெண்கள் தமது கணவனதும் மகன்களதும் நலனுக்காக இவ்விரதத்தை அனுஷ்டிக்கிறார்கள். திருமணமாகாத பெண்கள் ஒரு நல்ல கணவன் கிடைக்கவேண்டும் என்பதற்காக வழிபடுகிறார்கள்.

ஊழிக் காலத்தில் பிரபஞ்சம் அசைவற்றிருந்த போது தேவியின் வேண்டுகோளுக்கு இணங்கி சிவன் மீண்டும் இயக்கத்தை உண்டாக்கினார் என்றும் அப்போது முதலில் இயக்கம் பெற்ற உருத்திரர்கள் திருவைந்தெழுத்தை ஓதி சிவனை வழிபட்ட தினமே சிவராத்திரி என்று இன்னொரு கதை கூறுகிறது. எல்லாம் ஒடுங்கி சூனியம் மட்டும் இருந்த நிலையில் சிவன் யோக துயில் கொண்ட போது அவரது சொருப நிலையில் தேவி ஒன்றி நின்ற தினமே சிவராத்திரி என்கிறது மற்றொரு கருத்து. சிவ புராணத்தில் இன்னுனொரு கதையும் உள்ளது. பிரமாவும் விஷ்ணுவும் அடிமுடி தேடிக் காணாத போது லிங்கோத்பவ வடிவமாக அவர்களுக்கு அருள் செய்த நாளே சிவராத்திரி என்று அது கூறுகிறது. சிவன் லிங்க வடிவில் முதலில் தோன்றிய அந்த நாள் மாசி மாதத்து கிருஷ்ண பட்சத்தில் 14ஆம் நாளாக இருந்த காரணத்தால் அது லிங்க வடிவில் சிவனை வழிபடுவதற்கேற்ற நாளாக சிவராத்திரியாக மாறியது என்கிறது இந்தக் கதை. இவை அனைத்தையும் விட மிகப் பிரசித்தி பெற்ற புராணக் கதை பின்வருமாறு அமைகிறது.


வாரணாசியில் சுஸ்வர என்ற பெயருள்ள ஒரு ஏழை வேடன் இருந்தான். ஒரு சிறிய குடிலில் மனைவி பிள்ளைகளுடன் வாழ்ந்த அவன் காட்டில் வேட்டையாடி கிடைக்கும் பறவை விலங்கு ஆகியவற்றின் மூலம் தனது குடும்பத்துக்கு உணவளித்து வந்தான். ஒருநாள் அவன் வேட்டைக்குப் போன போது பல சிறிய விலங்குகளும் பறவைகளும் அவனது வேட்டையில் சிக்கின. வேட்டையால் கிடைத்தவற்றை ஒரு சாக்குப் பையுள் போட்டவனாக மேலும் விலங்குகள் கிடைக்கக்கூடும் என்ற ஆசையில் காட்டின் உட்பக்கத்திற்குச் சென்று விட்டான்.  நீண்ட நேரம் காட்டில் அலைந்து திரிந்ததால் இருள் சூழ ஆரம்பித்தது. இந்நிலையில் அடர்ந்த காட்டுக்குள் இருந்து வெளியே வரும் வழியை அவனால் அறிய முடியவில்லை. கொடிய விலங்குகள் அந்தக் காட்டில் இருந்ததால் அவன் தனது பாதுகாப்புக் குறித்து கவலையுற ஆரம்பித்தான். வேறு வழி அறியாத நிலையில் பாதுகாப்பு கருதி ஒரு மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டான். அவனது மணத்தால் கவரப்பட்ட விலங்குகள் மரத்தின் கீழ் வந்து கூடத் தொடங்கின. அவைகளைக் விரட்டலாம் என்ற நம்பிக்கையில் மரத்திலிருந்து சில சிறிய கொப்புகளை முறித்து கீழே நின்ற மிருகங்களின் மேலே எறிந்தான். அவை அகலவில்லை. இரவு முழுவதும் மரத்தைச் சுற்றியபடி நின்றன. எனவே மரத்திலேயே இரவைக் கழிக்க எண்ணி தூங்கி கிழே விழுந்துவிடாதிருக்க இலைகளைப் பறித்துக் கீழே வீசியபடி இருந்தான். விடிந்ததும் மிருகங்கள் அகன்று சென்றுவிட்டன. அவன் வேட்டைப் பொருட்களுடன் வீட்டுக்குச் சென்றான். சிறிது காலத்தின் பின்னர் அவன் இறந்த போது அவனுக்கு மோட்சம் கிடைத்ததாக கதை முடிகிறது. அவன் அன்று இரவு அவன் மிருகங்களுக்கு பயந்து ஏறியிருந்த மரம் வில்வ மரம் என்றும் அவன் இலைகளைப் பறித்துக் கீழே போட்ட போது மரத்தின் அடியில் இருந்த சிவலிங்கத்துக்கு மேலே அவை வீழ்ந்தன என்றும் கூறப்படுகிறது. இவ்வாறாக நித்திரை விழித்து வில்வம் இலைகளைப் போட்டதாலும் அன்று சிவராத்திரி என்பதாலும் அவனுக்கு மோட்சம் கிடைத்தது என்பது கதையில் கூறப்பட்ட முக்கியமான செய்தி.

சிவனுக்கு மிகவும் உகந்தது வில்வம் என்றும் அந்த மரத்தில் மகாலக்சுமி வாசம் செய்கிறாள் என்றும் ஒரு வில்வ மலர் ஒரு லட்சம் தங்க மலர்களுக்கு நிகரானது என்றும் சிவபுராணம் கூறுகிறது. ஒரு வில்வம் இலையை ஈசனுக்கு போட்டு பூசிப்பதன் மூலம் சகல பாவங்களும் நிவர்த்தியாகிறது என்றும் வில்வ மரத்தை வீட்டில் வளர்ப்பதன் மூலம் அஷ்வமேத யாகம் செய்த பலனையும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த பலனையும் கங்கை முதலிய புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய, சிவ தலங்களைத் தரிசித்த பலனையும் அடையலாம் என்றும் மேலும் வில்வத்தின் பெருமை கூறப்படுகிறது.

மேலே கூறப்பட்ட கதை ஓர் உருவக கதையாகும். அதன் ஒவ்வொரு அம்சத்திற்கும் ஆன்மிக ரீதியில் விளக்கம் கொடுக்கப்படுகிறது. வேடன் காட்டு மிருகங்களை வேட்டையாடியதைப் போல ஆன்மிக வழியில் போக விரும்புபவர்கள் காமம், கோபம், பேராசை, ஒரு பொருளில் அல்லது மனிதரில் அளவில்லாத ஆசை வைத்தல், பொறாமை, வெறுப்பு ஆகிய விலங்கு குணங்களைக் கொல்லுதல் வேண்டும். மிருகங்களைக் கொல்லுதல் என்பது ஒருவர் தமது வாசனா மலத்தைக் கட்டுப்படுத்துதலையும் குறிக்கிறது. காடு என்பது வேண்டத்தகாத எண்ணங்கள் மனதில் அலைந்து திரிவதைக் குறிப்பதாகும். வேடனின் பெயர் சுஸ்வர. அதன் கருத்து இனிய ஸ்வரம் அதாவது இனிய இசை என்பதாகும். இந்த பெயர் எண்ணங்களினதும் பேச்சினதும் தூய்மையை அதாவது மனத் தூய்மையைக் குறிக்கிறது. வேடன் வாரணாசியில் பிறந்து வாழ்ந்தவன். வார என்பது நெற்றி, நாசி என்பது மூக்கு. மூக்கும் நெற்றியும் சந்திக்கும் இடம் வாரணாசியாகும். அந்த இடத்தில் இட, பிங்கள, சுஷம்ன என்ற மூன்று நாடிகள் சந்திக்கின்றன. ஒருவர் தனது மனத்தை அந்த இடத்தில் குவியச் செய்வாராயின் படிப்படியாக அவர் தனது புலன்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றலைப் பெற்றுக் கொள்கிறார்.

வில்வ மரம் முள்ளந் தண்டைக் குறிக்கிறது. வில்வ மரத்தின் இலைகள் விசேட அமைப்பைக் கொண்டுள்ளன. ஒரு தண்டில் மூன்று இலைகள் உள்ளன. அவை முன்னர் குறிப்பிட்ட மூன்று நாடிகளைக் குறிக்கின்றன. மரத்தில் ஏறுதல் என்பது மூலாதாரத்திலிருந்து குண்டலினி சக்தியை ஆக்ஞ சக்கரத்திற்கு ஏற்றுவதைக் குறிக்கின்றது. நித்திரை கொள்ளாது விழித்திருத்தல் என்பது ஒருமைத் தன்மையையும், உள்ளார்ந்த விழிப்பயும் குறிப்பதுடன், ஆன்மிகத்தை விரும்பும் ஒருவர் அடைய வேண்டிய இலக்கு என்பதையும் சுட்டி நிற்கிறது. அவர் ஒரு நிமிடம் கூட அசட்டையாக இருக்க முடியாது. சிவன் என்பவர் நடத்தல், கனவு காணுதல், ஆழ்ந்த நித்திரை கொள்ளுதல் என்ற மூன்று நிலைகளையும் பிரகாசமாக்கி மிக உயர்ந்த உணர்தலைக் குறித்து நிற்கிறார். மூன்று இலைகளைக் கொண்ட வில்வத்தை சிவனுக்கு அளித்தல் என்பது மூன்று நிலைகளையும் கடந்து நான்காவது நிலையாகிய துரிய நிலையை அடைதலைக் குறிக்கிறது. 



இந்தியாவில் வேறுபட்ட மானிலங்களில் சிவராத்திரியை அனுஷ்டிப்பதற்கு வேறு வேறுபட்ட புராணக் கதைகள் கூறப்படுகின்றன. சிவன் பேருழியின் போது முழு உலகையும் அழித்த போது பார்வதி சிவனை வழிபட்டு உலகை மீண்டும் படைக்கும்படியும், அந்நாளில் சிவனை வழிபடுபவர் முத்தியடைய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டதாகவும் ஒரு கதை அமைந்துள்ளது. அக்கதையின் படி தேவியின் வேண்டுகோளை சிவன் ஏற்றுக் கொண்டதாகவும் லிங்கத்தை மனிதர் வழிபடுவதற்காக தேவி கேட்டு கொண்ட இரவுக்கு சிவன் மகாசிவராத்திரி என்று பெயரிட்டதாகவும் அக்கதை கூறிச் செல்கிறது.

சிவராத்திரியன்று இறைவன் படைத்தல் காத்தல், அழித்தல் நடனத்தை ஆடுவதாகவும் எனவே பக்தர்கள் விழித்திருந்து சிவனைப் போற்றி பாடல்கள் வேண்டும் என்று இந்தியாவின் வேறு சில பகுதிகளில் நம்பப்படுகிறது. பாற்கடலில் எழுந்த விஷத்தை சிவன் உலகத்தின் நன்மைக்காக விழுங்கி அந்த விஷம் ஏற்படுத்திய தாக்கத்தால் அந்த இரவில் அவதிப்படுவதாகவும் அதற்காக அவனது உடலைக் குளிர வைக்கும் முயற்சியில் நான்கு யாமங்களும் அபிஷேகம் செய்யப்படுவதாக வேறு சில பகுதிகளில் நம்பப்படுகிறது.

சிவராத்திரி உருவானதைக் குறிக்கும் இவ்வாறான கதைகளுடன் அதன் முக்கியத்துவத்தைக் குறிக்கும் சில கதைகளும் காணப்படுகின்றன. எத்தனை பாவியாக இருந்தாலும் ஒருவர் சிவராத்திரியின் போது இறைவனை வழிபட்டால் அவர் பாவங்கள் அனைத்தும் நீங்கி முத்தி அடைவார் என அவை மிக அதீதமாக அதன் முக்கியத்துவத்தைக் கூறுகின்றன. சிவராத்திரியின் சிறப்பை அதிகரித்துக் காட்டுவதற்காக இந்தக் கதைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை. சிவராத்திரி மகாத்மியத்தில் பின்வரும் கதை கூறப்பட்டுள்ளது. சிந்து என்ற இடத்தை ஆண்ட குஞ்சரன் என்ற மன்னனிடம் ஒரு பிராமண உத்தியோகத்தர் இருந்தார். அவரது மகனின் பெயர் சுகுமாரன். அவன் பிரமண சாதியைச் சேராத ஒரு பெண்ணைத் திருமணம் செய்தது மட்டுமல்ல பிராமணியத்தையும் முற்றாகத் தலை மூழ்கிவிட்டான். ஒருநாள் அவன் தனது மனைவிக்கு ஒரு பூவை வழங்க எண்ணி அதனைப் பெறுவதற்காக சிவன் கோயிலுக்குப் போனான். அன்று மகாசிவராத்திரி. கோயிலில் அதற்குரிய சிறப்பு பூசை நடந்து கொண்டிருந்தது. பூ ஒன்றைப் பெறுவதற்காகக் கோயிலுக்குச் சென்ற சுகுமாரன் தவிர்க்க முடியாத நிலையில் அந்த விழாவில் கலந்து கொண்டான். அவ்வாறு நடந்து சில காலத்தின் பின்னர் அவன் இறந்த போது அவன் தனது சமயத்தையும் தர்மத்தையும் விட்டிருந்ததால் யமனின் தூதர்கள் நரகத்திலிருந்து அவனை அழைத்துச் செல்ல வந்திருந்தார்கள். அதே நேரம் சிவனது தூதர்கள் அவனைக் கைலாசத்ததுக்கு அழைத்துச் செல்ல வந்திருந்தனர். அவன் மனைவிக்குப் பூ பெறுவதற்காக கோயிலுக்குப் போய் சிவராத்திரியில் கலந்து கொண்ட காரணத்தால் சிவ தூதர்கள் யம தூதர்களை வென்று அவனை கைலாசத்திற்கு அழைத்துச் சென்றனர் என்று அந்தக் கதை நிறைவு பெறுகிறது. இன்னொரு கதையின்படி ஒரு பிராமண இளைஞன் அவனது தவறான நடத்தையால் நாடு கடத்தப்பட்டிருந்தான். பசியால் வாடிய அவன் அலைந்து திரிந்து உணவு தேடிய போது ஒரு சிவன் கோயிலில் கடவுளுக்கு நிவேதிக்கப்பட்ட உணவை எடுப்பதற்காக உள்ளே சென்றவன் அங்கிருந்த விளக்கு அணைந்து கொண்டிருந்த வேளை அதனைத் தூண்டி வெளிச்சத்தை அதிகரித்து அதில் நன்கு தெரிந்த உணவை எடுக்க முயன்ற வேளையில் பிடிபட்டான். அன்று சிவராத்திரி தினம். அவனை கோயிலில் ஒரு புறத்தில் தூணில் கட்டி வைத்து விட்டு அக்கோயிலில் சிவராத்திரியை கொண்டாடினார்கள். இரவு முழுதும் விழித்திருந்து வேத மந்திரங்களைக் கேட்டுக் கொண்டிருந்த காரணத்தால் பின்னர் கொல்லப்பட்டதும் அவன் சுவர்க்கத்தை அடைத்தான் என்று அக்கதை நிறைவு பெறுகிறது. சிவராத்திரி மகாத்மியம் சிவராத்திரியின் முக்கியத்துவத்தை அதீத நிலையில் வலியுறுத்துவதற்காக மட்டுமே இவ்வாறான கதைகளைக் கூறியுள்ளது. மற்றும்படி பாபத்தைச் செய்யத் தூண்டுவது அக்கதைகளின் நோக்கமல்ல.

இலங்கையில் திருக்கேதீஸ்வரத்தில் சிவராத்திரி சிறப்பாகக் கொண்டாடப்படுவது போல நாயன்மாரால் பாடப் பெற்ற தலமான ஸ்ரீஷைலத்தில் அது மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தற்போது ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள இத்தலம் இந்தியாவில் உள்ள 12 ஜோதிலிங்கத் தலங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்கந்தபுராணம் ஒரு அத்தியாத்தை இத்தலத்தின் சிறப்பைக் கூற ஒதுக்கியுள்ளது என்பதும், ஆதி சங்கரர் தனது சிவானந்த லகிரியை இத்தலத்திலே பாடினார் என்பதும் இத்தலத்தின்f பெருமையை அதிகரிக்கச் செய்யும் செய்திகள். இக்கோயிலில் மகாசிவராத்திரியின் போது ஏறக்குறைய 100 ஆயிரம் பேர் கலந்து கொள்வதாகக் கூறப்படுகிறது.

விரதம் இருப்பதன் மூலம் காமம் குரோதம் பேரசை போன்ற தீய குணங்களை அகற்றி இறைவன் தனது மனத்தில் குடியேறும் வகையில் மனதைத் தூய்மைப்படுத்தி, மன வைராக்கியம் கொண்டு, இரவு விழிப்பதன் மூலம் புலன்களை அடக்கி ஆன்மாவை இறைவனுக்கு அர்ப்பணித்து உள்ளார்ந்த விழிப்பு நிலையை அடைந்து இறைவனைத் தன்னுள் நிறைய வழிவகுக்கும் சிவராத்திரி, எல்லாத் தரத்தில் உள்ளவர்களையும் அற முறையிலும் ஆன்மிக முறையிலும் ஒன்றுபடுத்துகிறது. இவ்வாறு அது சமூகத்தை ஒன்றுபடுத்துவதுடன் பக்தனுக்கு கடவுளுடன் உள்ள உறவைப் பலப்படுத்துகிறது. அதனால் சிவராத்திரி என்பது மனிதரின் ஆன்மீக வாழ்வில் அதிக முக்கியத்துவம் பெற்ற ஒரு தினம் என்பதில் சந்தேகமில்லை.

Sunday 19 February 2017

பௌத்த கோட்பாடுகளும் மகாவம்சமும்


பௌத்தம் என்றதும் இலங்கைத் தமிழராகிய எமக்கு அது இலங்கை அரசியலில் படுத்தும்பாடு  நினைவுக்கு வரும். காலம் காலமாக பௌத்த பிக்குகள் தமிழருக்கு எதிராகச் செயற்பட்டு வருவதும் தேர்தலில் அவர்கள் ஒரு கட்சியாகப் போட்டியிட்டதும் நாம் அறிந்ததே. துட்டகைமுனு என்று வடக்கே தமிழர் தெற்கே சமுத்திரம் என்று குடங்கிப் படுத்தானோ அன்று தொடங்கியது தமிழருக்கு எதிரான போக்கு. எவ்வாறு பௌத்த சமயத்தைப் பயன்படுத்தி சிங்கள அரசர்கள் தமிழரை ஒடுக்க முனைந்தனர் என்பதற்கு மகாவம்சம் சான்று பகரும். கிபி 7 ஆம் நூற்றாண்டளவில் தமிழ் நாட்டில் பரவியிருந்த பௌத்தம் தமிழ் நாயன்மாரால் முற்றாகச் செல்வாக்கிழக்கச் செய்யப்பட்டமை சிங்களவருக்கு தமிழர் மேல் ஏற்கெனவே இருந்த விரோதத்தை மேலும் அதிகரித்தது. பின் சோழரின் இலங்கைப் படையெடுப்பு அதை மேலும் அதிகரித்ததுடன் தமிழரை நிரந்தர விரோதிகளாக நோக்கும் போக்கு அவர்களிடையே அதிகரித்து இன்று விஸ்வரூபம் எடுத்திருப்பதை நாம் அறிவோம். பௌத்த சமயத்தை இலங்கை அரசு தமிழருக்கு எதிராகப் பயன்படுத்துவதாலும் தமிழ்ப் பகுதிகளில் விகாரைகளைக் கட்டுவதாலும் நாம் அது பற்றி விரக்தி அடைந்துள்ள போதும் பௌத்தம், சமயம் என்ற வகையில் அது தனக்கெனப் பல சிறப்பியல்புகளைக் கொண்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை. அரசியல்வாதிகள் அதன் உண்மையான கோட்பாடுகளைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு வெறும் கூடாக அதனைப் பற்றியிருப்பது எமக்குத் தெரிந்ததே. இன்று பௌத்தத்தின் வரலாறு குறித்தும் அதனது சிறந்த கோட்பாடுகள் குறித்தும் மிகச் சுருக்கமாகப் பார்ப்போம்.
பௌத்தம் என்பது அண்மைக் காலங்களில் மேற்கத்தைய நாடுகளில் மிகப் பிரபலியமாகி வரும் ஒரு சமயமாகும். கடவுள் நம்பிக்கையற்று இருக்கும் பலருக்கு கடவுளை ஏற்காத சமயமான பௌத்தம் கவர்ச்சிகரமாக இருப்பதில் அதிசயம் ஒன்றும் இல்லை. அதில் உள்ள பல நல்ல அம்சங்கள் முக்கியமாக விபாசன தியான முறை அவர்கள் விரும்பும் மன அமைதியைப் பெறுவதற்கு துணை புரிகின்றது என்பதிலும் சந்தேகமில்லை. இந்தியாவில் உருவாகி அதன் வடக்கு, தெற்கு, கிழக்கு, தென்கிழக்கு, வடகிழக்கு நோக்கிப் பயணப்பட்ட பௌத்தம் ஒரு காலத்தில் இந்த இடங்களில் கொடி கட்டிப் பறந்தது என்பது அனைவரும் அறிந்ததே. இன்றும் சீனா, யப்பான், தாய்லாந்து, இலங்கை, தீபெத், தைவான் போன்ற நாடுகளில் முக்கிய சமயமாக அது திகழ்கிறது. பௌத்தம் தோன்றிய இந்தியாவில் சில கோடி பௌத்தர்கள் இருந்த போதும் மற்ற சமயத்தவரின் சிறப்பாக இந்துக்களுடன் ஒப்பிடும் போது அது மிகக் குறைவான தொகையே. தென்கிழக்காசிய நாடுகள் சிலவற்றில் ஒரு காலத்தில் முதலில் சிறப்புப் பெற்றிருந்த இந்து சமயமும் பின்னர் பௌத்தமும் இஸ்லாமின் செல்வாக்கால் முற்றாக் நலிவடைந்து போயின.
கிறீஸ்தவம் இஸ்லாம், இந்து சமயம் ஆகியவற்றிற்கு அடுத்ததாக அதாவது உலகத்திலே நான்காவது பெரிய சமயம் பௌத்தம். அது வட இந்தியாவில் சித்தார்த்த கௌதம புத்தரால் உருவாக்கப்பட்டது. தற்போது நேபாளத்திற்குள் உள்ள லும்பினி (கபிலவஸ்து) என்ற இடத்தில் ஏறக்குறைய கிமு 563இல் அவர் சாக்கிய குலத்தில் பிறந்ததாகக் கருதப்படுகிறது. சித்தார்த்த என்பது அவருக்கு வழங்கப்பட்ட பெயர். கௌதம என்பது அவரது குடும்பப் பெயர். அவர்f புத்தராவதற்கே பிறந்தவர் என்கிறது அவரது கதை. அரச குலத்தில் பிறந்தாலும் அவரது பிறப்பிலேயே பிற்காலத்துக்காலத் துறவுக்கும் பரிநிர்வாண நிலை அடைவதற்குமான சமிக்ஞைகள் அறியப்பட்டதாக அக்கதை சொல்கிறது. ஒரு வெள்ளை யானை கருவறையில் புகுவதாக தாய் மாயாவதி கனவு கண்டது மட்டுமல்ல சித்தார்த்தன் தாய்க்கு எந்த வித உடல் நோவுமின்றிப் பிறந்ததாகவும் பிறந்த உடனேயே பிரமாவின் ஆசியால் பேசவும் நடக்கவும் செய்ததாகவும் கூறப்படுகிறது. அவர்களது குலக்குருவான அசித அரசனுக்கு மகன் பிறந்ததாக அறிந்து பார்க்க வந்த போது அரசன் குழந்தைக்கு ஆசி பெற எடுத்து வந்தான். அப்போது குழந்தையின் கால் வளைந்து குருவின் தலையில் சற்று நின்றதாகவும் கூறப்படுகிறது. குழந்தையைக் கண்டதும் குரு எழுந்து மரியாதை செய்து உயர்ந்த சமயநிலையை அடைவதற்கான 80 அடையாளங்களையும் அந்தக் குழந்தையில் அவர் கண்டதாக அக்கதை சொல்கிறது.

சித்தார்த்தன் 12 வயதை அடைந்ததும் அரசன் பிராமணர்களை அழைத்தான். அவர்கள் அவனைப் பார்த்தவுடன் இவன் வயது முதிர்ந்தவரையோ, இறந்தவரையோ நோயுற்றவரையோ அல்லது துறவியையோ கண்ணால் கண்டால் துறவு பூண்டுவிடுவான் என்று கூறினர். அரசன் தனது மகன் சக்கரவர்த்தியாக வேண்டும் என்ற எண்ணத்தால் இந்த வார்த்தைகளை யாரும் உச்சரிக்கக்கூடாது என்று தடுத்ததுடன் அரண்மைனையைச் சுற்றி மூன்று மதில்களையும் கட்டுவித்தான். சித்தார்த்தனுக்கு 16 வயது வந்ததும் அழகில் சிறந்த ராஜகுல மங்கையான யசோதாவை திருமணம் செய்து வைத்தான். சித்தார்த்தனுக்கு அதுவரை தனது பிறப்பின் நோக்கம் தெரிந்ததாக அந்தக் கதை சொல்லவில்லை. அவன் கேளிக்கைகளில் சில காலம் மகிழ்ந்திருந்தான். ஒருநாள் அரண்மைக்கு வெளியே சென்று பார்க்க எண்ணிப் புறப்பட்ட போது அரசன் வழியெங்கும் சோடித்து பிராமணர்கள் குறிப்பிட்ட இந்த நால்வரும் எதிரில் வராது பார்த்துக் கொள்ளும்படி சேவகர்களுக்குக் கட்டளையிட்டான். ஆனால் சித்தார்த்தன் துறவு கொள்வதற்கான காலம் நெருங்கி விட்டதால் இந்த நால்வரையும் அவர் காண நேர்கிறது. அது வாழ்வைத் துறந்து நித்திய பேரின்பத்தைக் காணவேண்டும் என்ற எண்ணத்தை முதன் முதலாக அவரது மனதில் ஏற்படுத்துகிறது. இதன் பின்னர் உண்மையை அறியும் வேட்கை சில காலம் அவரது மனதை அரித்து வந்திருக்கிறது. இந்த உலகில் எல்லாமே கணத்துக்குக் கணம் மாறிக்கொண்டே இருக்கின்றன, அத்துடன் எதுவுமே நிரந்தரமானது அல்ல என்று தந்தைக்குத் தெரிவித்த போது அவர் மகிழ்ச்சியடையவில்லை.

அரண்மனையைச் சுற்றி மேலும் காவல் போடுகிறார். அத்துடன் அரண்மனைக்குள் நிறைய கேளிக்கைகளை உருவாக்குகிறார். இத்தருணத்தில் யசோதா ஓர் ஆண்மகனைப் பெற்றெடுக்கிறாள். அவனுக்கு சித்தார்த்தன், ராகுலன் அதாவது சங்கிலி அல்லது தளைகள் என தன்னைச் சுற்றியிருக்கும் கேளிக்கைகளைக் குறிக்கும் வகையில் பெயரிடுகிறார். அதன் பின்னர் அவர் மனைவியையும் மகனையும் பிரிந்து பேரின்பத்தைக் கண்டு கொள்ளும் தனது யாத்திரையை ஆரம்பிக்கிறார். தனது 29 ஆவது வயதில் ஓரிரவு அந்த முக்கியமான முடிவை எடுக்கிறார்.  பகலில் போனால் தந்தை மனைவி மகன் தடுக்கலாம் என்பதால் எல்லோரும் உறங்கும் இரவை அவர் தெரிந்தெடுத்திருக்க வேண்டும். மனைவியையும் மகனையும் பிரிந்து செல்கையில் அவரது மனதில் சிறு துயரம் என்றாலும் எழுந்திருக்குமா? அவர் வெளியுலகில் நான்கு பேரைச் சந்திக்கும் வரை இவ்வுலக வாழ்வில் ஆர்வம் கொண்டிருந்தார் என்கிறது இந்தக் கதை. இதன் பகுதியாகவே யசோதாவும் மகனான ராகுலனும் அமைகிறார்கள். உலகின் நிலையாமை பற்றி அவர் உணர்ந்த கணத்தில் அவர்களும் நிலையாமைப் பட்டியலில் சேர்ந்து, நிலைத்த வாழ்வு குறித்த அவரது பயணத்தில் பங்குதாரர்களாக அமைய முடியவில்லை. அவர்களை இவ்வுலக வாழ்வில் விட்டு அரண்மனைக் காட்சியில் இருந்து மறைகிறார். தனது சிகையையும் தாடியையும் மழித்து பட்டாடைகளை அகற்றி மஞ்சள் துணியைச் சுற்றிக் கொண்டார். அன்றிலிருந்து பரிநிர்வாணம் என்ற முத்தியை நோக்கிய அவரது ஆறு வருட போராட்டம் ஆரம்பமாகியது.
தான் அறிந்து கொள்ளாத வரையில் பிராமணீய தத்துவத்தைத் தான் நிராகரிக்க முடியாதென நினைத்து மகத ராச்சியத்தின் Rajagaha என்ற நகரத்தை அடைந்து குன்றுகளின் குகைகளில் வாழ்ந்த இரு தத்துவவாதிகளின் சீடனாகச் சேர்ந்தார். அவர்களுடன் ஆழமாக தத்துவங்களை விவாதித்ததுடன் பல யோக முறைகளையும் கைக்கொண்டார். பல வித தியானங்களின் ஊடாக ஒருவன் ஒன்றுமற்ற நிலைக்குச் செல்ல முடியும் என்பதை லைரா குலாமா என்ற குரு அவருக்கு போதித்தார். ஆனால் கௌதமருக்கு அது திருப்தி அளிக்காததால் மற்றவரிடம் சென்றார். அவரது வழிகாட்டலும் திருப்தியளிக்காது போகவே பிராமணீய தத்துவங்கள் தன்னை பரிநிர்வாணத்திற்கு எடுத்துச் செல்லாது என்று எண்ணி இறுதியாக ஒரு கிராமத்துக்குச் சென்று மரங்களின் கீழ் அமர்ந்து 5 வருடங்கள் தீவிரமான சுய கட்டுப்பாட்டு முயற்சிகளில் ஈடுபட்டார். அதனால் எலும்புக்கூடு போல மிக மெலிந்து போனார்.
அவர் மேலும் பல வித முயற்சிகள் செய்தும் திருப்தி அடையாது போகவே இறுதியில் புத்தகாயாவுக்குப் போய் ஒரு அரச மரத்தின் கீழ் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார். அவர் அங்கு பரிநிர்வாணம் அடைந்து புத்தர் என்ற பெயரைப் பெற்றார். புத்தர் என்பதன் கருத்து அகவிழிப்புற்றவர் ((the one who awakened)) என்பதாகும். அவர் தனது 80 ஆவது வயதில் காலமான போது அவரது போதனைகளைப் பின்பற்றும் பல சீடர்களும் மக்களும் இருந்தனர். இரண்டரை நூற்றாண்டுகளின் பின்னர் பௌத்த துறவிகள் சங்கம் ஒன்று புத்தரின் போதனைகளையும் வாய்வழி வந்த நம்பிக்கை சார்ந்த மரபுகளையும் தொகுத்து திரிபிடகம் என்ற பெயரில் எழுதி வைத்தது. இதில் சூத்திரங்கள் என்று அழைக்கப்படும் பெரியளவிலான உரைகளும் மரபுகளும் இணைக்கப்பட்டன. பௌத்தம் பரவிய காலத்தில் ஒன்றுடன் ஒன்று அதிகம் தொடர்புபடாத இரு பெரும் பிரிவுகளாக வளர்ச்சி பெற்றது. இவற்றில் ஒன்று தேரவாதம் மற்றது மகாயானம்.

தேரவாதம் ஆரம்பத்திலிருந்து இலங்கையிலும் 13ம் நூற்றாண்டில் இருந்து தாய்லாந்து, பர்மா, கம்போடியா, லாவோஸ் போன்ற இடங்களில் சிறப்புப் பெற்றது. ஆரம்பத்தில் தோன்றியதான இந்த தேரவாத மரபு இன்றும் செல்வாக்கு பெற்றுள்ளது. தேரவாதப் பிரிவினர் துறவற ஒழுங்குமுறை, உயர் புலமை பெறுதல், புத்தரின் போதனைகளை இறுக்கமாக ஏற்றுக்கொள்ளுதல் ஆகியவற்றைப் பின்பற்றினர், எட்டு உயர்ந்த வழிகளில் எட்டாவதாக அமைந்த மனத்தைக் குவித்தல், தியானம் ஆகியவற்றுக்கு தேரவாதம் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறது. இதன் பயனாக நீண்ட நேரம் தியானத்தில் கழிக்க வேண்டிய துறவு வாழ்வை அது மையமாகக் கொள்கிறது.
இது நெகிழ்ச்சியற்ற பிரிவு என்பதுடன் பிக்குகளைத் தவிர மற்றவர்களுக்கு இதனைப் பின்பற்றுவது கடினம் என்று கருதினர். இது சாதாரண மக்கள் பின்பற்றுவதற்கு உரியதாக அமையவில்லை. இதன் காரணமாக பௌத்தத்தைப் பொதுமக்களுக்குக் கொண்டு வருவதற்கான கருத்து வலுப்பெற்றது. அவர்களை அரவணைக்கக்கூடிய வகையில் கிபி முதலாம் நூற்றண்டளவில் ஒரு பிரிவு தோன்றியது. இதுவே பின்னர் மகாயான பௌத்தம் எனப்பட்டது. புதிய பிரிவை பெரிய வாகனம் (Grater Vehicle: literally the Grater Ox-Cart) என்ற கருத்தில் மகாயானம் என்று அழைத்தனர்.  தேரவாதத்தைச் சிறிய வாகனம் என்ற கருத்தில் ஹீனயானம் (Lesser Vehicle) என்று அழைப்பதன் மூலம் தம்மை அதிலிருந்து வேறுபடுத்திக் கொண்டனர். மகாயானம் சீனா, ஜப்பான் கொறியா மொங்கோலியா ஆகிய இடங்களில் பெருமளவில் செல்வாக்குப் பெற்றது. தீபெத் தனித்திருந்த காரணத்தால் அங்கு இந்த இரு பிரிவுகளுக்கும் வேறாகத் தனித்துவமாக பௌத்தம் வளர்ச்சி பெற்றது என்று கூறப்படுகிறது. இன்று சர்வதேசரீதியாக பிரிவுகளின்றி பௌத்தம் என்றளவில் பிரசித்தி பெற்றுள்ளது.
பல பௌத்தர்கள், சிறப்பாக மேற்கு நாட்டவர் தேரவாதம் மகாயானம் என்ற பிரிவுகளை ஒன்றுக்கொன்று எதிரானது அல்லது முரணானது என்று நோக்காது அவை ஒன்றுக்கொன்று பங்களிப்பவை அல்லது சார்பானவை என்று கருதுகின்றனர். தேரவாத போதனைகளின் விரிவாக மகாயானத்தை அவர்கள் பார்க்கின்றனர். தேரவாத அல்லது ஹீனயான பௌத்தம் போதிசத்துவர் அல்லது முழுமையான பரிநிர்வாணத்தை அடைந்தவரது கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டுள்ளது. தனிப்பட்டவரது பரிநிர்வாணத்தை அடைவதற்கான மாதிரி அல்லது வழிகாட்டி என அதைக் கருதுகின்றனர். எனவே புனித நூல்களுக்கு கடும் கட்டுப்பாடு காட்டுவதுடன், பக்தி காட்டுபவராகவும் போதிசத்துவரது போதனைப்படி வாழ்பவராகவும் இருப்பவர் பரிநிர்வாணம் அடைவர் எனத் தேரவாத மரபை ஏற்றுக்கொள்பவர் கருதுகின்றனர். ஆனால் தனிப்பட்டவர் பரிநிர்வாணம் அடைவதற்கான வழியில் போதிசத்துவர் வெறும் போதிக்கும் கருவியாகவே கருதப்படுகிறார். மகாயானம் உருவாக்கப்படும் வரை இதற்கு அப்பால் தேரவாதத்தின் கருத்துச் செல்லவில்லை. தனிப்பட்டவரது முழுமையடைதலுக்கு போதிசத்துவர் முக்கியமானவர் அல்லர். ஆனால் அனைத்து உயிர்களையும் துயரத்திலிருந்து பாதுகாப்பதற்கு அவர் முக்கியமானவர் என மகாயானம் தீர்மானித்துக் கொண்டது. பரிநிர்வாணத்தை அடைய முயல்பவராக இருந்தபோதும் அதனை அடைவதில்லை என மகாயான பௌத்தர் உறுதி பூணுகின்றனர். பதிலாக இந்த துக்கம் நிறைந்த உலகத்துக்குத் திரும்பி வந்து மற்ற அனைவரும் பரிநிர்வாணம் அடைய உதவ வேண்டும் என்றும் அன்பு நிறைந்த பாதுகாப்பவர்களாகவும் மீட்பர்களாகவும் தாம் இருக்க வேண்டும் என்றும் உறுதி எடுக்கின்றனர்.  முழுமையான ஞானம் உடைய ஒருவர் அல்லது பரிநிர்வாணம் அடைவதற்காக விதிக்கப்பட்ட ஒருவர் என்பதே போதிசத்துவர் என்பதற்கான கருத்து. இரக்கம், சுயவிருப்பின்மை, ஞானம், சேவை ஆகியவையே போதிசத்துவரின் அடிப்படைக் இயல்புகள் என மகாயானம் தேரவாதம் ஆகிய இரு பிரிவுகளும் ஏற்றுக் கொள்கின்றன. முடிவு வரை அதாவது கடைசி ஒருவர் இருக்கும் வரை நான் இங்கிருப்பேன், நான் அனைத்து உயிர்களையும் இறுதி பரிநிர்வாணத்தை நோக்கி எடுத்துச் செல்வேன் என போதிசத்துவர் உறுதி செய்து கொண்டார் என பௌத்தம் கருதுகிறது.

மகாயானம் பல உப பிரிவுகளாகப் பிரிந்தது. சீனாவில் Cha'an என்றும் Pure Land என்றும் யப்பானில் Zen என்றும் அழைக்கப்பட்டது. Zen யப்பானிலில் இருந்து கொறியாவுக்குப் பரவியது.  வஜ்ராயண அல்லது தாந்திரிய பௌத்தம் வடக்கேயும் கிழக்கேயும் பரவி இறுதியில் தீபெத்தில் நிலைகொண்டது. காலப்போக்கில் மகாயான பௌத்த தத்துவத்தின் பல பிரிவுகள் உருமலர்ச்சி பெற்றன. ஆனால் பிரதானமானவையான Pure Land, Zen ஆகியன சீனாவிலேயே உருப்பெற்றன. அண்மைக் காலத்தில் உருவான நிர்சிரன் (Nirchiren) என்பது புத்தரின் வெள்ளைத் தாமரை கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது.
கிமு மூன்றாம் நூற்றாண்டில் மிக ஆற்றல் வாய்ந்த அரசனான அசோகனால் பௌத்தம் பெரிதும் சிறப்புப் பெற்றது. மிகக் கொடுமையான போர் வெற்றியின் பின்னர் இவன் பௌத்த சமயத்தைத் தழுவிக் கொண்டான். இவன் மகாயான பௌத்தத்தின் ஆதரவாளனாகி இந்தியாவினுள் பௌத்தமதம் பரவவும் வளரவும் நிதி வழங்கினான். பௌத்த சங்கத்தின் ஆதரவுடன் இந்தியாவுக்கு வெளியே பௌத்தத்தைப் பரப்ப தூதுவர்களை அனுப்பினான். பௌத்தத்திடையே பிரிவுகள் இருந்த போதும் அடிப்படை நம்பிக்கைகளில் அவை அனைத்தும் ஒன்றுபட்டுள்ளன. முக்கியமான அடிப்படை நம்பிக்கைகள் கர்மம் மறுபிறப்பு என்பனவாகும். பௌத்தர் கர்மத்தை இயற்கை விதியாகப் பார்க்கின்றனர். அது தீர்ப்பு அல்ல. கடவுளின் தலையீடு அதில் கிடையாது. ஒவ்வொரு செயலும் அடுத்த நிமிடமோ, மணித்தியாலமோ, நாளோ, மாதமோ, வருடமோ அடுத்த பிறப்போ அல்லது பல பிறப்புக்களின் பின்னரோ பலன் தரலாம். ஆயினும் பௌத்தம் அநாத்மவாதம் பேசும் சமயம். ஆயின் எது பிறப்புகளல் தொடர்கிறது என்ற கேள்வி எழுகிறது. எல்லாம் கணத்துக்கு கணம் மாறுவதால் மாறாத ஒன்று நிரந்தரமாக இல்லை. அதனால் ஆன்மா என்ற ஒன்று கிடையாது. உணர்வுகளiன் தொகுதியானது நினைவுகளல் இருந்து அடையாளத்தைப் பெறுகிறது. அதுவே மறுபிறப்பில் இன்னொரு உடலுடன் இணைந்து கர்மத்தின் பயனை அனுபவிக்கச் செய்கிறது என்பதே பௌத்தத்தின் கொள்கை. இவ்வாறு ஒவ்வொருவரும் பல தடவைகள் பிறந்து இறப்பதாக பௌத்தம் நம்புகிறது. பல பிறப்புக்களின் பின் ஒருவர் உலக விருப்புகளில் தனக்கு பற்று இருப்பதை விளங்கி அதிலிருந்து விடுபடும்போது அவர் துக்கத்திலிருந்து நிரந்தரமாக விடுபட்டு பரிநிர்வாணம் அடைகிறார். இதற்கு சில நடைமுறைகளை அவர் கைக்கொள்ள வேண்டும்.
சீலம்  என்பது நல்ல குணங்கள், நன்நடத்தை, நேர்மை என்பனவாகும். இவை இரு அடிப்படைக் கோட்பாடுகளில் தங்கியுள்ளன. முதலாவது, அனைத்து உயிர்களும் சமமானவை என்ற (principle of equality) அதாவது சமத்துவக் கோட்பாடு. அடுத்தது உங்களுக்கு மற்றவர் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதனையே மற்றவருக்குச் செய்ய வேண்டும் என்ற (principle of reciprocity)  அடுத்து முக்கியம் பெறுபவை நான்கு உயர்ந்த உண்மைகள்.
1. துக்கம் - இந்த துக்கம் பல காரணங்களால் ஏற்படுகிறது. இழப்பு (loss), நோய் ((sickness)), நோ (pain),  தோல்வி (failure), இன்பங்களின் நிலையற்ற தன்மை (impermanence of pleasure)
2. சமுதாய – காரியங்களை செய்யவும் கட்டுப்படுத்தவும் விரும்புதலே துக்கத்துக்கான காரணமாகும். அது பல வடிவங்களiல் வரும். புலன்களiன் இன்பத்தை அடைவதற்கான தீராத விருப்பு, புகழுக்கான விருப்பு, பயம், கோபம், பொறாமை போன்றவை
3. நிரோத - முடிவான பரிநிர்வாணத்துடன் துக்கம் அகலும். மனம் முழுமையான விடுதலையை, பற்றற்ற நிலையை உணரும். அது விருப்பிலோ, அதை நாடி ஓடுவதிலேயோ நாட்டமற்றிருக்கும்
4.   மக்க எட்டு வழிகளைப் பின்பற்றும் போது துக்கம் அகலும். அந்த எட்டு வழிகளாவன - மழுமையான புரிந்துணர்வு, எண்ணம், பேச்சு, செயல், வாழ்க்கைமுறை முயற்சி, தியானம், மனக்குவிவு (Perfect Understanding, Perfect Thought, Perfect Speech, Perfect Action, Perfect Livelihood, Perfect Effort, Perfect Mindfulness and Perfect Concentration.)
இந்த பௌத்தம் கூறுகின்ற அடிப்படைச் சித்தாந்தங்களில் எதனையாவது இலங்கையில் சிங்கள அரசியல்வாதிகள் பிக்குகள் போன்றோர் பின்பற்றுகிறார்களா என்ற வினாவுக்கான விடை என்ன என்பது நான் சொல்லியா நீங்கள் தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்?
மகாவம்சம் என்ற சிங்களவரது கட்டுக்கதை நூலை அடிப்படையாகக் கொண்டே அவர்களது அரசியல் அன்றும் நடந்தது, இன்றும் நடக்கிறது. இங்கே அவுஸ்திரேலியர்கள் முதலில்  இங்கு குடியேறிய குற்றவாளிகளின் வழிவந்தவர்கள் என்று கூறியபோதும் தமது மூதாதையர் பற்றி ஆராயும்போது குற்றஞ் செய்தவர் வழி தாம் வந்தோம் என்று அறியும்போது மிகுந்த வெட்கம் அடைவார்கள். அதுவும் பல பெரிய குற்றங்கள் அல்ல பால் திருடியவர், கயிறு திருடியவர் என்றே இருக்கும். சில வேளைகளில் கொலைக் குற்றம் செய்தவர்களும் இருப்பார்கள். ஆனால் குற்றத்திற்காக நாடுகடத்தப்பட்ட விஜயனின் வழிவந்தவர்கள் தாம் என்று கூறுவதில் சிங்களவர்கள் பெருமை அடைகின்றனர். அது மட்டுமல்ல அந்த விஜயன் ஓர் ஆரிய இளவரசிக்கும் சிங்கத்துக்கும் பிறந்த பிள்ளையின் மகனாவான். எனவே மொத்தத்தில் மிருகம், குற்றம் செய்தவன் பரம்பரையே தாம் என்று அவர்கள் மகாவம்சத்தில் கூறியுள்ளது மட்டுமல்ல அது குறித்துப் பெருமையும் அடைந்து கொள்கிறார்கள். இந்த மகாவம்சம் அவர்களை எவ்வாறு நோய்போல பீடித்திருக்கிறது என்பதை ஒரு சிங்களப் பெண்ணே எழுதியிருக்கிறார். திசராணி குணசேகரா எழுதிய ஆங்கிலக் கட்டுரையைத் தமிழாக்கம் செய்தவர் மணி வேலுப்பிள்ளை என்பவர். அவர் மொழிபெயர்த்த கட்டுரையின் தலைப்பு மகாவம்சம் பீடித்த மாந்தர் என்பதாகும். இது காலச்சுவட்டில் வெளிவந்த கட்டுரையாகும். ஒரு குழுமத்தின் மீதான காழ்ப்பு இன்னொரு குழுமத்தின் மீதான காழ்ப்புக்கு வழிவகுக்கக்கூடும் என்ற அமார்த்தியா சென் என்பவரது கூற்றுடன் இக்கட்டுரை ஆரம்பமாகிறது. (கட்டுரையை நீங்கள் படிப்பதற்காக இங்கு தருகிறேன். காலச்சுவடு இலக்கிய ஏட்டுக்கு நன்றி)
இலங்கையில் கட்டுக் கதைக்கும் வரலாற்றுக்கும் இடையே உள்ள எல்லைக்கோடு அருவமானது. ஆபத்தானது. இலங்கை அரசியலில் இந்த மர்மக்கதையுலகு தீர்க்கமான பங்குவகித்து வருகிறது. ஓர் இந்திய ஆரிய இளவரசி ஒரு சிங்கத்துடன் கூடிவாழ்கையில் உதித்த இனத்தைச் சேர்ந்தவர்களே சிங்களவர்கள் என்று சிங்கள மாணவர்களுக்கு புகட்டப்பட்டு வருகிறது. கதை படிக்கும் வேளையில் அல்ல, வரலாறு படிக்கும் வேளையிலேயே இந்தக் கதையை அவர்கள் படிக்கிறார்கள். இந்தச் சிங்கக் கதை ஒரு மகாவம்சக் கதை. பெரும்பாலான சிங்கள - பௌத்த மக்கள் அதை ஒரு வரலாற்று நூலாகவும், புனிதப் பாடமாகவும் போற்றி வருகிறார்கள். அந்தச் சிங்க -இளவரசி தம்பதிகளின் பேரனையே சிங்கள இனத்தின் மூலகர்த்தாவாக மகாவம்சம் ஏற்றிப்போற்றுகிறது. “அவன் (விஜயன்) தீய நடத்தை கொண்டவன்” என்று மகாவம்சமே கூறுகிறது. “அவனும் அவனுடைய தோழர்களும் பயங்கரக் குற்றங்கள் பலவும் புரிந்தார்கள்.  “விஜயனுக்கும், அவருடைய 700 தோழர்களுக்கும் அரை மொட்டை அடித்து, ஒரு கப்பலில் ஏற்றிக் கடலில் செலுத்திவிடும்படி அவன் பணித்தான் . . .” அவனுடைய தந்தை அவர்களை நாடுகடத்தும் நிர்ப்பந்தத்துக்கு உள்ளானான்.” விஜயனை நாடுகடத்தி, கப்பலில் ஏற்றி அனுப்பிய வேளையிலேயே கௌதம புத்தர் இயற்கை எய்தியதாகக் கொள்ளப்படுகிறது. புத்தர் இயற்கை எய்தும் தருவாயில் தேவ தேவனாகிய சக்காவிடம், “சிங்கபாகுவின் மகன் விஜயன் இலங்கை வந்துள்ளான். தேவதேவனே, எனது மதம் இலங்கையிலேயே நிலை நிறுத்தப்படும். ஆகவே இலங்கையில் அவனையும் அவனுடைய தோழர்களையும் காத்தருள்வாயாக” என்று கேட்டுக்கொண்டதாக மகாவம்சம் கூறுகிறது.
அதாவது ‘புனிதபுலம்’ படைத்த ‘தேர்ந்த இனம்’ என்னும் கதையை மகாவம்சமே தோற்றுவித்தது. அதன்படி இத்தீவு சிங்கள-பௌத்த மக்களுக்குரியது. அவர்களே இதன் உண்மையான சொந்தக்காரர்கள். வன்முறை உட்பட எந்த வழியைப் பயன்படுத்தியும் பாதுகாக்கப்பட வேண்டிய ‘புனித கொடைப்புலம்’ அது கௌதம புத்தரின் போதனையில் புனிதப்போர் என்னும் கருத்தீடு இல்லை. புத்த தருமத்தை அல்லது அதைப் பின்பற்றுவோரைப் பாதுகாக்க பலவந்தத்தை / வன்முறையைப் பயன்படுத்த அதில் இடமில்லை.
புத்த சமயத்தில் உயிர்க்கொலை அறவே விலக்கப்பட்டுள்ளது. ஆகவே புத்தரின் போதனைக்குப் புத்தம் புதிய பெரிய அத்தியாயம் ஒன்றைச் சேர்க்காமல் ‘புத்த சமயத்தைப் பாதுகாக்க’ மனிதர்களைக் கொல்வதை நியாயப்படுத்த முடியாது. அதையே மகாவம்ச ஆசிரியர் செய்துவைத்தார். புத்த சமயத்தவனான துட்டகைமுனுவுக்கும், இந்து சமயத்தவனான எல்லாளனுக்கும் இடையே அரசியல் மேலாண்மைக்காக நிகழ்ந்த போராட்டத்தை தீவினையற்றப் போராக / நல்வினைப் போராகச் சித்தரித்ததன் மூலம் அதையே மகாவம்ச ஆசிரியர் செய்துவைத்தார். எல்லாளன் மனிதர்களாலும் தேவர்களாலும் நீதிசால் மன்னனாகக் கொண்டாடப்பட்டான் என்று மகாவம்சமே கூறுகிறது. அவன் நாட்டை அழித்தொழித்து, சூறையாடச் சித்தம்கொண்டு, படையெடுத்து வந்தவன் அல்லன். மக்களை அடிமைப்படுத்தி ஆண்ட கொடுங்கோலனும் அல்லன். மாறாக, அவன் நல்லவன், செங்கோலன். ஆனால் அவன் ஓர் ‘அவிசுவாசி’ அதாவது பௌத்த சமயத்தவன் அல்லன். என்றபடியால், அவனுடைய மெச்சத்தக்கப் பண்புகள் பொருந்தா. அவை ஒரு பொருட்டன்று. ஆகவே சிங்கள -பௌத்தத்தையும், அதன் தேர்ந்த நாடாகிய இலங்கையையும் வெளிப் பகைவர்களிடமிருந்து பாதுகாப்பதற்குத் தெய்வீக இசைவுடன் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையின் ஓர் அங்கமாக அவன் அகற்றப்படவும், கொல்லப்படவும் வேண்டும்.
துட்டகைமுனு வாழ்ந்த கதை என்று மகாவம்சம் எடுத்துரைக்கும் கதையில் இயற்கையும் இறைமையும், மானுடமும் தெய்வீகமும் இணைந்து பிணைந்துள்ளன. “அரசன் கவந்தீசனும் அரசியும் பல ஆண்டுகளாக மகப்பேறின்றி வருந்தினார்கள். அரசி ஒரு முனிவரின் புத்திமதியை நாடினாள். இறக்கும் தறுவாயில் இருக்கும் ஒரு பிக்குவிடம் சென்று, தனது கருப்பையில் தனக்கு மகனாக மறுபிறவி எடுக்கச் சம்மதம் பெறும்படி முனிவர் கூறினார். இறக்கும் தறுவாயில் உள்ள ஒரு பிக்குவிடம் சென்ற அரசி தனது விருப்பத்துக்கு அவரிடம் சம்மதம் பெற்றாள். இவ்வினிய செய்தியைத் தனது கணவனிடம் தெரிவிக்க அவள் திரும்பிச் செல்கையில் பிக்கு இறந்தார். அரசி கணவனிடம் செல்லும்பொழுதே “அரசியின் கருப்பையில் பிக்கு புதுவாழ்வுக்குத் திரும்பினார். அதை உணர்ந்தபொழுது அவள் பயணத்தை இடைநிறுத்தி, அரசனுக்குச் செய்தி அனுப்பினாள்”. அப்படிப் பிறந்த துட்டகைமுனுவே மகாவம்சத்தின் தலைமகன், சிங்கள - பௌத்தத்தின் வீரமன்னன். அவனை அளவுகோலாகக் கொண்டே, பின்வந்த ஆட்சியாளர்கள் அனைவரும் அளக்கப்பட்டனர். இன்றைய இலங்கையிலும் கூட அது ஒரு வரலாறாகவே வலம்வருகிறது. அவன் கருவிலே திருவானவன் என்றும், மீண்டும் இத்தீவில் பௌத்த ஆட்சியை நிலைநாட்டுவதற்கான ஆணையுடன் உருவானவன் என்றும் கூறப்பட்டுள்ளது. ஒருபுறம் புத்தரின் கொடை என்னும் கட்டுக்கதையே ‘உடையவர் - புகுந்தவர்’ என்னும் கருத்தீட்டுக்கான சித்தாந்த அடிப்படையாக அமைகிறது. மறுபுறம், ‘புகுந்தவர்கள்’ ‘விதிகளை’ மீறினால், ‘உடையவர்கள்’ அவர்களை எப்படிக் கையாள வேண்டும் என்பதை துட்டகைமுனுவின் கதை விபரிக்கிறது.
இளவரசன் கைமுனு கூனிக் குறாவிப்படுத்த காரணத்தை வினவும் தாயிடம் கூறும் விடையில் ஆள்புலப் பிரச்சனை, ஆள்புலத் தேட்டப் பிரச்சனை இனங்காட்டப்பட்டுள்ளதுஈ “அங்கே கங்கைக்கு அப்பால் தமிழர்கள், இப்பால் சமுத்திரம், நான் கைகால்களை நீட்டிப் படுப்பது எங்ஙனம்?” இளவரசன் கைமுனுவை வயிற்றில் சுமக்கையில் அரசி விகாரமா தேவிக்கு உண்டான மூன்று ஆசைகள் பற்றிய கதையில் எதிரி இனங்காட்டப்பட்டுள்ளான் “எல்லாளனது தளபதியின் தலை கொய்த வாள் கழுவிய நீரை, அவன் தலையில் கால்மிதித்து நின்றபடி பருக அவள் ஆசைப்பட்டாள் . . . அதை அரசி அரசனிடம் தெரிவித்தாள். அரசன் நிமித்திகர்களிடம் வினவினான். நிமித்திகர்களோ ‘இளவரசன் தமிழரை வெல்வான்’ என்றனர் . . .” பின்னர் போரின்போது எதிரிகள் இறந்ததை எண்ணி வருந்தும் துட்டகைமுனுவைத் தேற்றும் புத்த பிக்குகள் கூறும் விடையில் தீவினையற்றப் போர்/நல்வினைப் போர் என்னும் கருத்தீடு புகுத்தப்படுகிறதுஈ “உமது இச்செயலால் நீர் சுவர்க்கம் செல்லும் பாதையில் தடங்கல் ஏற்படப் போவதில்லை . . . ஒன்றரை மனிதர் மட்டுமே இங்கு கொல்லப்பட்டனர். அதாவது, இறந்தோருள் ஒருவர் எமது நெறிமுறைகள் முழுவதிலும் நிலையூன்றியவர். மற்றவர் ஐந்து நெறிமுறைகளில் மாத்திரம் நிலையூன்றியவர். எஞ்சியோர் தீய புறநெறியாளர்கள், அவர்கள் விலங்குகள் எனத் தக்கவர்கள் . . .” (ஐந்து நெறிமுறைகள் (1) கொல்லாதீர் (2) திருடாதீர் (3) சிற்றின்பம் துய்க்காதீர் (4) பொய் கூறாதீர் (5) மது அருந்தாதீர்.)
கௌதம சித்தார்த்தரின் பௌத்தம் சிங்கள - பௌத்தமாக, மகாவம்சம் என்னும் நூலின் புதிய மதமாக மாற்றப்பட்ட தருணம் அது. அவிசுவாசிகளுக்கு எதிரான போர் தீவினையற்ற போரே என்று, நல்வினைப் போரே என்று, சிலுவைப் போர்களையும் புனிதப் போர்களையும் போன்று இன்ப சுவர்க்கம் எய்துவதற்கான நேர்ப் பாதையே என்று திருவாய்மலர்ந்தருளப்பட்ட வேளை அது. “மன்னன் துட்டகைமுனு தேவருலகில் மீள்பிறவி எடுப்பது மாத்திரமல்ல, விழுமிய மைத்திரேயரின் முதற்சீடனாகவும் விளங்குவான், மன்னனின் தந்தையே அவன் தந்தையாக விளங்குவான், மன்னனின் தாயே அவன் தாயாக விளங்குவாள், தம்பி சதாதீசன் அவனுக்கு இரண்டாவது சீடனாக விளங்குவான், எனினும் மன்னனின் மகன் சாலிராச குமாரன் விழுமிய மைத்திரேயரின் மகனாக விளங்குவான்” என்கிறது மகாவம்சம். பௌத்தத்துக்கான போர், அப்புனிதப்போரை மேற்கொள்ளும் போர்வலருக்கு மாத்திரமல்ல, அவருடைய குடும்பம் முழுவதுக்கும் நலம்பயக்கும் என்பதை எடுத்துக்காட்டுவதன் ஊடாக, பௌத்தத்துக்கான போர் நல்வினைத் தன்மை வாய்ந்தது என்னும் வாதத்தை மகாவம்சம் கெட்டியாக முன்வைக்கிறது.
துட்டகைமுனு - எல்லாளன் போர் நடந்து ஏறத்தாழ ஏழு நூற்றாண்டுகளின் பின்னர் (மகா நாமதேரர் என்னும்) புத்தபிக்குவால் அரசியல் நோக்குடன் மகாவம்சம் எழுதப்பட்டது. பற்றுகள் அனைத்தையும் துறந்தவருக்கு மாத்திரமே உள்ளொளி கிட்டும் என்பதை அறிவதற்கு கௌதம புத்தரின் போதனையை ஓரளவு அறிந்துகொண்டாலே போதும். பற்றுகள் எவ்வளவு தூரம் புரிந்துகொள்ளக் கூடியவையாக இருந்தாலும், அல்லது நியாயப்படுத்தக்கூடியவையாக இருந்தாலும், பற்றுகள் மிகுந்தவர், அதே பற்றுகளால் பிறவிப்பிணியுடன் கட்டுண்டிருப்பார். உள்ளொளி எய்தியோர்க்கு நாடு, இனம், மதம் உட்பட பற்றுகள் கிடையா. உயிர்க்கொலை எதையும் அவர்களால் ஏற்கவும் முடியாது. உள்ளொளி எய்தியப் பிக்குகள் மதத்தின் பேரால் பாரிய உயிர்க்கொலையை நியாயப்படுத்தியதாக மகாநாமதேரர் வாதிடுவது ஓர் அப்பட்டமான பொய், தீமைப் பயக்கும் பொய். எனினும் இப்பொய் (கொல்லாதீர்) என்னும்) முதலாவது நெறிமுறையை விஞ்சி மேலோங்கியுள்ளது.
அமைதி நாடிய யேசுநாதரை மன்னன் கான்ஸ்டன்டைனும், அவன் வழித்தோன்றல்களும் ஒரு போர்வலராக உருமாற்ற நேர்ந்தது. விவிலியம் - பழைய ஏற்பாட்டில் வலம்வரும் வஞ்சம் மிகுந்த கடவுள் இந்த உருமாற்றத்துக்கு உறுதுணைப்புரிந்தார். மகாநாமதேரரோ கோட்பாட்டுத்துணை எதுவுமின்றி அந்த அலுவலைத் தாமாகவே செய்ய நேர்ந்தது. புத்தரல்ல, மகாநாமதேரரே ஜாதிக ஹெல உருமய (தேசிய பாரம்பரியக் கட்சி), பொது பல சேனா (பௌத்த பல சேனை) போன்றவற்றின் உண்மையான குருவும், தலைவரும் ஆவார். மகாவம்சக் கதைகள், பழம்பெரும் ஏடொன்றில் மக்களை ஈர்க்கும் வண்ணம் மீட்டியுரைத்தக் கட்டுக் கதைகள் மட்டுமல்ல, அவை தற்கால இலங்கையின் செல் நெறியைத் தீர்மானித்த கட்டுக் கதைகளும் ஆகும்.
19ஆம் நூற்றாண்டில் அனகாரிக தர்மபாலாவின் போதனைக்கமையவே பௌத்த மறுமலர்ச்சி மேலோங்கியது. பௌத்த மறுமலர்ச்சியில் சிறுபான்மையோருக்கு எதிரான போக்கு காணப்பட்டது. அதற்கு மகாவம்சக் கதைகள் துணைநின்றன. மகாவம்சக் கதைகளால் உருட்டிப் புரட்டி அடிமைகொள்ளப்பட்ட சிங்கள - பௌத்தம் தமிழரைக் கவரும் ஆற்றலை அல்லது இலங்கையில் ஒரு கலாநிதி அம்பேத்கரை தோற்றுவிக்கும் ஆற்றலை இழந்தது. பௌத்த மகாசங்கத்தில் ஒரு தமிழ்க்குரல் ஒலிக்கும் வண்ணம் இங்கு கணிசமான அளவு பௌத்தத் தமிழர்கள் தோன்றியிருந்தால், நாம் சுதந்திரம் பெற்ற பின்னர் எமது வரலாற்றில் அழிவுகள் குன்றியிருக்கும். பௌத்தம் தமிழரைக் கவர வேண்டுமேல், அது சிங்கள மேலாண்மைச் சின்னத்தை துறந்து, மகாவம்சத்துக்கு முற்பட்ட பொதுமை - நெறிதிறத்தை மீட்டுக்கொள்ள வேண்டும்.
நாங்கள் நட்புறவுடன் கூடிவாழாவிட்டாலும், சகிப்புணர்வுடனாவது கூடிவாழ்வதற்கு ஏதுவான ஏற்பாடு செய்துகொள்வதே எங்களை எதிர்நோக்கும் சவால்” என்று ஜவகர்லால் நேரு அன்று மார்லோவிடம் கூறினார் (Anti-Memoir). பல்லின நாடு எதுவுமே எதிர்நோக்கும் சவால் இது. நாங்கள் மகாவம்சக் கதைகளுக்குக் கட்டுண்டிருக்கும் வரை இச்சவாலை எதிர்கொள்வதில் இலங்கை வெற்றிபெறப் போவதில்லை.