Tuesday 7 March 2017

பெண்கள் தினம் - வரலாறு



பெண்ணென்று பூமிதனில் பிறந்து விட்டால் மிகப் பீழை இருக்குதடி தங்கமே தங்கம் என்று பாரதியார் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் கூறியது இன்று வரை மிகப்பல பெண்களுக்குப் பொருத்தமாகவே இருக்கிறது. பெண்கள் மீது பிரயோகிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் எப்போது ஆரம்பமாகின? என்பது ஒரு முக்கியமான கேள்வி. வருடந்தோறும் மார்ச் மாதம் 8ஆம் தேதி அகில உலக மகளிர் நாள் வருகிறது. ஆயினும் உலகின் பல பகுதிகளில் பெண்களின் நிலை மாறவில்லை. நகரங்களிலும் புறநகர்களிலும் வாழ்கின்ற பெண்களின் நிலை மேலோட்டமாகப் பல விஷயங்களில் மாறியிருக்கலாம். ஆனால் பெண்ணாகப் பிறந்ததனால் மிகுந்த கஷ்டங்களுக்கு உள்ளாகிற பெண்கள் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். முன்னர் முற்றாக அடிமைப்பட்டுக் கிடந்த பெண்ணினம் தம்மை முன்னேற்றும் முயற்சியின் விளைவாக உருவானதுவே இந்த அகில உலக மகளிர் தினம். எல்லாக் கண்டங்களிலும் வாழும் பெண்கள் நாட்டு எல்லைகளை, இன, மொழி, பண்பாடு, பொருளாதார, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து இந்த நாளை கொண்டாடுகின்றனர். ஏறக்குறைய கடந்த 100 ஆண்டுகளாக சமத்துவத்திற்காகவும் நீதிக்காகவும், சமாதானத்துக்காகவும், மேம்பாட்டுக்காகவும் நடத்திய போராட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மரபை மகளiர் நாளின் போது பெண்கள் நினைவு கூர்கின்றனர்.

அகில உலக மகளiர் நாள் என்பது சமூகத்தில் ஆண்களுடன் சமமாக பங்கெடுப்பதற்காக பெண்கள் பல நூற்றாண்டுகளாகப் போராடி வந்ததையும் குறித்து நிற்கிறது. முதல் சர்வதேச மகளிர் நாள் பற்றிய கருத்து இந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே உருவாக்கம் பெற்றது. 1903ஆம் வருடம் மார்ச் 8 ஆம் தேதி நியூயோர்க்கில் ஆடை தயாரிப்புத் தொழிற்சாலைகளில் வேலை செய்த பெண்கள் குறைந்த ஊதியம், மோசமான சூழலில் வேலை செய்தல் ஆகியவற்றிற்கு எதிராக ஒரு போராட்டத்தை முன்னெடுத்து நடத்தினர். காவற்படையினர் தாக்குதல் நடத்தி அவர்களைக் கலைந்து போகச் செய்தனர். இரண்டு வருடங்களின் பின்னர் இந்தப் பெண்கள் தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும், வேலைத்தலத்தில் சில அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்காகவும் முதல் தொழிற்சங்கத்தை உருவாக்கினார்கள். குறைந்த வேலை நேரம், அதிகரித்த ஊதியம், வாக்களிக்கும் உரிமை, ஆகியவற்றை கோரியும் பிள்ளைகளை வேலைக்கமர்த்துவதை எதிர்த்தும் 1908 ஆம் வருடம் 2000 பெண்கள் நியோர்க்கில் ஊர்வலமாகச் சென்றனர். அவர்கள் பாணும் ரோஜாப்பூக்களும் (Bread and Roses) என்ற கோஷத்தை முன்வைத்தனர். பாண் பொருளாதார பாதுகாப்பையும், ரோஜாப்பூக்கள் தரமான வாழ்வையும் உருவகமாகக் குறித்தன. அதே வருடம் மே மாதத்தில் அமெரிக்காவில் உள்ள சோஷல் கட்சி, பெப்பிரவரியில் வரும் கடைசி ஞாயிறை தேசிய மகளிர் தினமாகக் கொண்டாடுவதற்காக ஒதுக்கியது. இந்த பிரகடனத்தின் பின்னர் 1909 பெப்பிரவரி 28 ஆம் தேதி அமெரிக்கா முழுவதிலுமுள்ள பெண்கள் முதலாவது தேசிய மகளிர் நாளைக் கொண்டாடினர். 1913 வரை பெப்பிரவரி மாதக் கடைசி ஞாயிறில் இத்தினம் கொண்டாடப்பட்டது.

உலகம் முழுவதிலுமுள்ள சோஷலிச அமைப்புக்கள் இணைந்து டென்மார்க்கில் உள்ள Copenhagen நகரில் ஒரு மகாநாடு நடத்தின. பெண்களின் உரிமைக்கான இயக்கத்தைக் கௌரவிக்கவும் பெண்களுக்கு வாக்குரிமை பெறுவதற்கு உதவி செய்வதற்குமாக அகில உலகத் தன்மை வாய்ந்த மகளiர் நாள் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்று அந்த மகாநாடு முன்மொழிந்தது. ஜேர்மனியைச் சேர்ந்த சோஷலிஸ்ரான Clara Zetkin என்ற பெண்மணியே அமெரிக்காவில் உள்ள ஆடை தயாரிப்பு தொழிற்சாலையைச் சேர்ந்த பெண்கள் நடத்திய எதிர்ப்பியக்கத்தை குறிக்கும் வகையில் சர்வதேச தினம் ஒன்று ஏற்படுத்தப்படவேண்டும் என்பதை முதலில் முன்மொழிந்தவர். பின்லாந்து பாராளுமன்றத்தில் அங்கத்தவராக முதன் முதலாகத் தெரிவு செய்யப்பட்டிருந்த மூன்று பெண்கள் உட்பட 17 நாடுகளைச் சேர்ந்த 100 க்கும் அதிகமான பெண்கள்  இதனைப் பாராட்டி ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். மகளiர் நாளுக்கான திகதி அப்போது தெரிவு செய்யப்படவில்லை.

Copenhagen இல் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி 1911 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் தேதி ஆஸ்திரியா, டென்மார்க், ஜேர்மனி, சுவிற்சலாந்து ஆகிய நாடுகளில் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட பெண்களும் ஆண்களும் சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடி மகிழ்ந்தனர். வாக்களிப்பதற்கான உரிமையுடன் வேலை செய்வதற்கும், தொழிற் பயிற்சிக்கும், வேலையில் பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டு வரவுமான உரிமைகளைப் பெண்கள் அப்போது கேட்டனர். இது நடந்து ஒரு வாரத்திற்குள் அதாவது மார்ச் 25 ஆம் தேதி நியூயோர்க்கில் ஏற்பட்ட தீ விபத்தில் தொழிற்சாலைகளில் தொழில் செய்த 140 இளம் பெண்கள் உடல் கருகி மாண்டனர். அவர்களில் பொரும்பான்மையோர் அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்த இத்தாலிய, யூத பெண்களாவார். இந்த சம்பவம் அமெரிக்காவின் தொழிற் சட்டத்தில் குறிப்பிடத்தக்களவு செல்வாக்கை ஏற்படுத்தியது. பின்னர் கொண்டாடப்பட்ட சர்வதேச மகளிர் தினங்களில் வேலைத்தலத்தில் காணப்படும் நிலமைகள் குறித்து ஆராயப்பட்டது

முதலாவது உலகப் போருக்கு முன்னர் ஏற்பட்ட சமாதான இயக்கத்தின் காரணமாக 1913 ஆம் ஆண்டு பெப்ருவரி மாதத்தின் கடைசி ஞாயிறில் ரஷ்யப் பெண்கள் தமது முதலாவது சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடினர். அடுத்த வருடம் மார்ச் 8ஆம் தேதியளவில் போரை எதிர்க்கவும் தமது சுதந்திரத்தை வெளிப்படுத்தவும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள பெண்கள் கூட்டங்களை நடத்தினர். போரில் 2 மில்லியன் ரஷ்ய ஆண்கள் கொல்லப்பட்டதை அடுத்து 1917, பெப்ருவரி கடைசி ஞாயிறை தமது பாணுக்கும் அமைதிக்குமான (bread and peace) எதிர்ப்புப் போராட்டத்திற்கு ரஷ்ய பெண்கள் தெரிவு செய்திருந்தனர். இது St Petersburg இல் நடைபெற்றது. அந்த எதிர்ப்புக்காக தெரிவு செய்யப்பட்ட காலம் சரியானதல்ல என அரசியல்வாதிகள் எதிர்த்த போதும் பெண்கள் தொடர்ந்து தமது எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தினர். நான்கு நாட்களில் czar ஆன இரண்டாவது Nicholas  பலவந்தமாகத் பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் மாகாண அரசு பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கியது. இது நடைபெற்றது Gregorian கலெண்டரின்படி மார்ச் 8ஆம் தேதியாகும்.

அந்தக் காலத்திலிருந்து சர்வதேச மகளிர் தினம் உலகளாவிய நிலையில் வளர்ந்த நாடுகளiலும் வளர்முக நாடுகளிலும் ஒரே மாதிரியாக கொண்டாடப்பட்டு வருகிறது. நான்கு சர்வதேச அளவிலான பெண்கள் மாநாடுகள் ஐக்கிய நாடுகள் சபையால் நடத்தப்பட்டதால் பலம் பெற்ற அகில உலக மகளிர் இயக்கம், பெண்களின் உரிமைகளையும், அரசியலிலும் பொருளாதாரத்திலும் பெண்களின் பங்கையும் கோரிக் கூட்டங்களை நடத்தியது. இது வரை அடைந்த முன்னேற்றத்தை நினைத்துப் பார்க்கவும், மாற்றங்களிற்கு அழைப்பு விடுக்கவும் பெண்களின் உரிமையை வென்றெடுக்கும் முயற்சியில் மிகச் சாதாரண பெண்கள் துணிச்சலுடனும் உறுதியுடனும் ஆற்றிய பங்களிப்பைக் கொண்டாடவும் சர்வதேச மகளிர் தினம் அதிகரித்த அளவில் உதவியது. பெண்களின் உரிமைகளை வென்றெடுக்கவும் மேம்படுத்தவும் செய்யப்பட்ட பிரசாரத்தை விட ஐக்கிய நாடுகள் சபையால் முன்னெடுக்கப்பட்ட சில விஷயங்கள் அதிக அளவில் பரந்துபட்ட ஆதரவை அதற்கு ஏற்படுத்திக் கொடுத்தது. 1945 இல் San Francisco வில் கையொப்பமான ஐக்கிய நாடுகள் சபை பட்டயமே ஆண் பெண்ணுக்கான சமத்துவத்தை அடிப்படை மனித உரிமையாக  ஏற்றுக் கொண்ட முதல் சர்வதேச உடன்படிக்கையாகும். அதிலிருந்து அந்த அமைப்பு உலகளவில் பெண்களiன் தரத்தை முன்னேற்ற பல திட்டங்களை உருவாக்கி அமுல்படுத்தி வருகிறது.

உலகப் பெண்களின் முழு அதிகாரமும் முழு பங்கெடுப்புமின்றி சமூகத்தை அச்சுறுத்தும் சமூக பொருளாதார அரசியல் விஷயங்களுக்கு தீர்வு காண இயலாது என்பது ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கையாகும். அமைதிக்கும் சமூக முன்னேற்றத்திற்கும் பெண்களின் தீவிரமாக பங்கெடுக்கவும், அவர்களது சமத்துவமும் அவசியம் என்பதை அடையாளம் காண்பதற்கும், சர்வதேச சமாதானத்திற்கும், பாதுகாப்புக்கும் பெண்கள் செய்து வரும் பங்களிப்பை ஏற்றுக் கொள்வதற்காகவும் ஒவ்வொரு அங்கத்துவ நாடுகளிலிருந்தும் பிரதிநிதிகளைக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை, சர்வதேச மகளிர் நாளை வருடந்தோறும் கொண்டாடுகிறது.

பெண்களது சமத்துவம் பெண்களுக்கு மட்டுமல்ல நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகிறது. பெண்களின் உரிமைகளையும் திறமைகளையும் ஆண்களும் பெண்களும் ஒருமித்து இணைந்து பாதுகாக்காவிடின் உலகின் மிக முக்கியமான சமூக, பொருளாதார, அரசியல் பிரச்சினைகளுக்கு நீடித்த தீர்வுகள் காணவியலாது போகும். அண்மைக் காலத்தில் பெண்கள் தொடர்பாக நிறைய முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. உலகளாவிய நிலையில் பெண்களின் கல்வியும் முறையான உடல் நல பராமரிப்பும் அதிகரித்துள்ளது. ஊதியம் பெறும் தொழிலில் அவர்களது பங்கு அதிகரித்துள்ளது. பெண்களுக்கு சம சந்தர்ப்பம் அளித்தல் அவர்களது மனித உரிமைகளை மதித்தல் என்பன பல நாடுகளில் சட்ட ரீதியாகவும் உறுதி மொழிகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. கொள்கை உருவாக்குபவர்களாக அவர்களது பங்களிப்பு வளர்ச்சியடைந்து கொண்டே செல்கிறது. இப்படியிருந்த போதும் ஆண்களுக்கு உள்ள அத்தனை வாய்ப்புகளும் உரிமைகளும் பெண்களுக்கு உள்ளது என்று பெண்கள் கூற முடியாத நிலை இன்றும் உலகில் எல்லா நாடுகளிலும் தொடர்கிறது. உலகின் மிக வறியவர்களான 1.3 பில்லியனில் பெரும்பான்மையானவர்கள் பெண்களே. ஒரே வேலைக்கு பெண்கள் ஆண்களை விட குறைவாக சம்பளம் பெறுகிறார்கள். பொதுவாக எல்லா நாடுகளிலும் பெண்களுக்கு எதிரான வன்முறையும் பாலியல் வல்லுறவும் தொடர்கிறது. உலகளாவிய ரீதியில் கருத்தரிக்கும் வயதில் உள்ள பெண்கள் வீடுகளில் நடைபெறும் வன்முறைகளால் ஊனமாக்கப்படுவதும் இறப்பதும் தொடர்ந்து இடம் பெற்று வருகிறது.

1977 டிசம்பரில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை (General Assembly) ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன்படி பெண்களின் உரிமைகளையும் சர்வதேச சமாதானத்தையும் குறிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் தினம் ஒன்று பிரகடனப்படுத்தப்பட்டது. 1975 இல் ஐக்கிய நாடுகள் சபை பெண்களின் பிரச்சினைகள் குறித்து உலகத்தின் கவனத்தைக் கவரும் பொருட்டு ஒரு சர்வதேச பெண்கள் ஆண்டைக் கொண்டாட அழைப்பு விடுத்ததுடன் முதல் மகாநாட்டை மெக்சிகோவில் நடத்தியது. அடுத்ததை 1980 இல்  டென்மார்க்கில் Copenhagen இலும் 1985 இல் முன்றாவது மகாநாட்டை கென்யாவில் நைரோபியிலும் நடத்தியது. இதில் 10 வருடங்களில் பெண்கள் உரிமைகளைப் பெறுவதில் என்னென்ன சாதிக்கப்பட்டது என ஆராயப்பட்டது. 1995 இல் பெய்ஜிங்கில் பெண்கள் பற்றிய நான்காவது மகாநாடு நடைபெற்றது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் உள்ள சமத்துவமின்மை என்பது சகல மக்களின் வாழ்விலும் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை 189 நாடுகளில் இருந்து வந்த பிரதிநிதிகள் ஏற்றுக் கொண்டனர். அரசியல், உடல்நலம், கல்வி உட்பட்ட பல துறைகளில் பெண்கள் முன்னேறுவதற்காக இம்மகாநாடு சில இலக்குகளைப் பிரகடனம் செய்தது. பெண்ணின் முன்னேற்றமும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான சமத்துவமும் மனித உரிமைப் பிரச்சினைகளாகவும் சமூக நியாயப் பிரச்சினைகளாகவும் பார்க்கப்பட வேண்டுமே தவிர, தனியாகப் பெண்களின் பிரச்சினையாகப் பார்க்கப்படக்கூடாது என இந்த மாநாடு தனது இறுதி தீர்மானத்தில் குறிப்பிட்டிருந்தது. ஐந்து வருடங்களின் பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் பொது அமைப்பின் 23 ஆவது விசேட கூட்டத்தின் போது பெய்ஜிங் மகாநாட்டில் உருவாக்கப்பட்ட இலக்குகள் நோக்கி உலகம் எந்தளவில் முன்னேறியுள்ளது என்று நோக்கும் வகையில் 21 ஆம் நூற்றாண்டுக்கான ஆண் பெண் சமத்துவம், முன்னேற்றம், சமாதானம் என்ற தலைப்பில் ஆய்வு செய்யப்பட்டது. இந்த மகாநாடு பெய்ஜிங் +5 என்று குறிக்கப்பட்டது. பெண்கள் முன்னேற்றம் அடைந்துள்ளதையும் அதே நேரத்தில் இன்னும் தடைகள் உள்ளதையும் மகாநாட்டில் பங்குபற்றியோர் அறிந்து கொண்டனர். தொடர்ந்து பெய்ஜிங் மகாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்காக முயற்சி செய்வது என்று இறுதியில் முடிவு செய்யப்பட்டது

அகில உலக மகளிர் நாளில் பின்வரும் முக்கிய விஷயங்களை ஐக்கிய நாடுகள் சபை கவனத்தில் கொள்கிறது. இந்தியாவில் வருடந்தோறும் 25 ஆயிரம் பெண்கள் சீதனக் கொடுமையால் கணவனாலும் மாமியாராலும் விபத்து அல்லது தற்கொலை என்று தோற்றமளிக்கும் வகையில் கொல்லப்படுகின்றனர். கணவன்மார் பின்னர் வேறு திருமணம் செய்து கொள்கின்றனர். ஜோர்டான், பாகிஸ்தான், லெபனான், சிரியா, ஈராக் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் குடும்பக் கௌரவத்தைப் பாதுகாப்பது என்ற முறையில் குடும்பத்தினராலேயே பெண்கள் கற்பழிக்கப்பட்டுகின்றனர்,  கொல்லப்படுகின்றனர். 85 மில்லியன் வரையிலான பெண்களின் பிறப்புறுப்பு முடமாக்கப்படுகிறது என்று உலக சுகாதார அமைப்பு சொல்கிறது. போராயுதமாக பெண்களைக் கற்பழித்தல் என்பது மெக்சிகோ, Rwanda, Haiti, Colombia, Yugoslavia, Congo, Sudan போன்ற நாடுகளிலும் ஏன் எமது நாட்டிலும் நடைபெற்றது. சில நாடுகளில் இன்றும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

அவுஸ்திரேலியாவில் சிட்னியில் 1937 ஆம் வருடம் முதலில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1944 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் உள்ள 90 அமைப்புகளில் இருந்து 200 பெண்கள் மகளிர் தின மகாநாட்டில் கலந்து கொண்டனர். சம சந்தர்ப்பம், வேலையும் ஊதியமும், சிறப்பான உடல்நல சேவை, பிள்ளைகள் பராமரிப்பு, ஓய்வுதியம், சமூக நலன் போன்றவற்றை பெண்களுக்கு வழங்கவேண்டும் இந்த மகாநாடு தீர்மானம் கொண்டு வந்தது. 1945 இலிருந்து 1960 களின் முடிவு வரை பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. பெண்களுக்கென்று தனிமைப்படுத்தப்பட்ட வேலைகளில் பல பெண்கள் வேலை செய்தனர். 1960 களில் புதிதாக உருவான அமெரிக்க பிரித்தனிய பெண் விடுதலை இயக்கங்கள் அவுஸ்திரேலிய பெண்களைக் கவரவே 1969 இறுதியில் பெண்கள் விடுதலை இயக்கம் சிட்னியில் உருவானது. முன்னர் இருந்த இயக்கங்கள் போலன்றி இந்தப் பெண்கள் விடுதலை இயக்கம், பெண்களைத் தனிமைப்படுத்தும் வேலைகள், குறைந்த ஊதியம், குடும்பத்தில் வேலைகளின் பங்கீடின்மை, பொது அரசியலிலும் தனி அரசியலிலும் ஆண் பெண் வேறுபாடும் பிரிவும் ஆகியனவற்றைக் கண்டித்து வருகிறது. பெண்கள் வாழ்வில் நடைபெறும் பாலியல் வல்லுறவு, வன்முறை, தடைகள் ஆகியவற்றுடன் ஓரின சேர்க்கை போன்றன பற்றியும் இந்த இயக்கம் எழுத்தில் நிறையவே வெளiயிட்டுள்ளது. அரசியல் துறையை மறு வரைவிலக்கணம் செய்யும் முறையில் கொள்கை சார்ந்த வேலைகளைக் கவனிக்க ஒரு குழுவையும் நியமித்துள்ளது. பெண்கள் குழுக்கள் எவ்வளவு முயற்சி செய்த போதும் அவுஸ்திரேலியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்ந்தே வருகிறது. 15 க்கும் 44 வயதுக்கும் இடைப்பட்ட பெண்களின் இறப்புக்கும் நோய்க்கும் வேறு எந்த ஆபத்தையும் விட அவர்களுக்கெதிரான வன்முறையே காரணமாக அமைந்துள்ளது. அரைப் பகுதி அவுஸ்திரேலிய பெண்கள் தமது வாழ்வில் ஏதோ வகையில் வன்முறையைச் சந்திக்கிறார்கள் என்றும் மூன்றுக்கு ஒரு பெண் வன்முறை நிறைந்த உறவு கொண்டிருக்கிறார்கள் என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

இருபதாம் நூற்றாண்டு வரை உலகம் முழுவதிலும் பெண்களுக்கு பல உரிமைகள் மறுக்கப்பட்டிருந்தன. அதில் முக்கியமானது வாக்குரிமை. 1893ஆம் ஆண்டில் உலகத்திலேயே முதலில் பெண்களுக்கு வாக்குரிமை அளித்த நாடு நியூசிலாந்தே. ஆனால் அவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் 1919இலேயே போட்டியிட முடிந்தது. அவுஸ்திரேலிய பெண்கள் 1902 இல் வாக்குரிமையும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் உரிமையையும் பெற்றனர். 1906ல் பெண்களுக்கு வாக்குரிமை அளித்ததுடன் 1907 ஆம் ஆண்டில் உலகத்திலேயே முதன் முதலில் பெண்களைத் தேர்தல் மூலம் தெரிவு செய்த நாடு பின்லாந்து. பிரித்தானியாவில் 1918ல் ஒரு பெண் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டார். அமெரிக்காவில் உள்ள பெண்கள் வாக்குரிமை பெறுவதற்கு 1920ம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டியதாயிற்று. சோவியத் ரஷ்யாவில் 1918ல் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்ட போதும் அரசாங்கத்துக்கு ஒரு பெண்ணைத் தெரிவு செய்ய 74 வருடங்கள் ஆயிற்று. இன்று வரை அமெரிக்காவில் ஒரு பெண் நாட்டின் தலைமைப் பதவியை ஏற்க முடியவில்லை. சில வருடங்களி ன் முன்னர்தான் முதன் முதலாக ஒரு பெண் பிரதமராகப் (Julia Gillard) பதவியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.


இனி தமிழ் பெண்கள் மத்தியில் விழிப்ப்புணர்ச்சி எவ்வாறு ஏற்பட்டது என்பது பற்றிச் சுருக்கமாக நோக்குவோம். சங்க இலக்கியம் பெண்களைச் சுதந்திரமற்றவர்களாகக் காட்டவில்லை. அவர்கள் ஆண்களுக்கு இணையாக சமூக விழாக்களiல் பங்கு பற்றினர். அவர்கள் கடலிலும் குளங்களiலும் நீந்தி விளையாடியதையும் ஆண்களுடன் நீர் விளையாட்டில் ஈடுபட்டதையும் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. தமக்கு விருப்பமான கணவனைத் தெரிவு செய்யும் சுதந்திரம் ஓரளவில் இருந்தது. காதல் மணம் பற்றி நிறையவே குறிப்புகள் உள்ளன. ஆயினும் ஒழுக்கத்தில் இருந்து தவறுதல் பெருங் குற்றமாகக் கருதப்பட்டது. முல்லை போன்ற பற்களையுடைய பெண்களiன் கற்புச் சிறப்பை சிறுபாணாற்றுப்படையும் அகநானூறும், அருந்ததியைப் போல கற்புடைய பெண்களைப் பற்றிப் பெரும்பாணாற்றுப்படையும் புறநானூறும் குறிப்பிடுகின்றன. இது சம்பந்தமாக ஆய்வு செய்த George L Hart  என்பவர் Ancient Tamil Literature என்ற தனது கட்டுரையில் - பண்டைய தமிழில், அணங்கு எனப்படும் புனித சக்தி பெண்ணைப் பற்றியிருக்கும் என்றும் அதனைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் வரை அது அவளுக்கும் அவளது கணவனுக்கும் வாழ்வு தருவதுடன், சுபத்தையும் முறையான புனிதத் தன்மையையும் வழங்கும் என்றும் கூறியுள்ளார். ஆனால் இது மிகவும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய சக்தியாகும். இல்லாவிடின் அது பெரும் அழிவை ஏற்படுத்திவிடும். பெண்கள் கற்பைக் கவனமாகப் பேணிப் பாதுகாத்து வரவேண்டும் என்று மேலும் கூறுகிறார்.

பெண்கள் விளையாட்டுக்களில் ஈடுபடவும், தமக்கு விருப்பமான வகையில் கூந்தலையும் உடலையும் அழகுபடுத்திக் கொள்ளவும் சுதந்திரம் இருந்தது. சங்க காலத்தைத் தொடர்ந்து அடுத்து வந்த காலத்தில் சமண மதச் சொல்வாக்கால் பெண்கள் பற்றிய கருத்து சமூகத்தில் மாறத் தொடங்கியது. ஈடேற்றத்திற்கு உரிய ஒரே வழி துறவறமே என்று போதித்த அச்சமயம் இல்லறத்தையும் பெண்களையும் வெறுத்து ஒதுக்கியது. பெண்களை வஞ்சம் கொண்டவர்களென்றும் அவர்களை நம்பக்கூடாது என்றும், அவர்கள் சொல்வதை உண்மை என்று ஏற்கக்கூடாது என்றும் அக்கால இலக்கியமான ஏலாதி கூறுகின்றது. இதே நூல் பெண்கள் கூறுவதைப் பொருளெனக் கொள்ளாதவர் கடவுளிலும் உயர்ந்தோர் என்று கூறுகிறது.

அடுத்து வந்த காலப்பகுதியில் சைவ வைஷ்ணவ சமயங்கள் செல்வாக்குப் பெறவே அவை சமணத்தின் பிடியிலிருந்து மக்களைத் தம்வசப்படுத்துவதற்கு தமது கோட்பாடுகளை முன் வைத்தன. அவற்றுள் முக்கியமானது இல்லறத்திலிருந்து கொண்டே கடவுளை அடையலாம் என்பதாகும். இதனால் பெண்களைப் பற்றிய கருத்தும் மாற்றமடைந்தது. அவர்களை இழிவுபடுத்தும் போக்கு மாறியது. தனது கணவனான நின்றசீர் நெடுமாறனின் நோய் தீர்க்கவும் அவனை மதம் மாற்றவும், சம்பந்தரை பாண்டிய நாட்டுக்கு வரவழைத்து உதவியதாலும், சைவசமயத்திற்குத் தொண்டு செய்ததாலும் மங்கயற்கரசியாரும், தனது இல்லறம் பிழையாகிப் போன காரணத்தால் தனது அழகையும் இளமையையும் துறந்து தனது இனிய பக்திப் பாடல்களால் தமிழுக்கும் சைவத்திற்கும் தொண்டாற்றிய காரைக்காலம்மையாரும் நாயன்மார் பட்டியலில் இடம்பெற்றுள்ள பெண்களாவர்f. பன்னிரு ஆழ்வார் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஆண்டாள் பக்திச் சுவையையும் காதல் சுவையையும் தடையின்றிப் பாடும் சுதந்திரத்தைத் தன்னளவில் பெற்றிருந்தார். இவர்களை விட பல பெண்கள் தமது நாயனாரான கணவருடன் இணைந்து சைவத்துக்குத் தொண்டாற்றினர். ஆயினும் பல்வேறு சந்தர்ப்பங்களiல் அவர்கள் தமது கணவரின் அடக்கு முறைக்கு உட்பட்டுக் கொடுமையாகத் தண்டிக்கப்பட்டதையும் பெரியபுராணத்தில் பரவலாகக் காணலாம். சோழர் காலத்தில் பிரமாண்டமான கோயில்கள் எழுந்த போது அவற்றில் பல்வேறு விரிவான கிரியைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இறைவனை பூசையின் போது இசையால் மட்டுமன்றி நாட்டியத்தாலும் வழிபட மன்னர்கள் மானியங்கள் வழங்கினர். இதன் காரணமாக நாட்டியமாடும் பெண்கள் பலர் நியமிக்கப்பட்டனர். இவர்கள் கோயிலிலேயே தங்கி இறைவனுக்குப் பொட்டுக் கட்டி இறைவனையே தமது தலைவனாக ஏற்று அவனுக்கு நாட்டிய உபசாரம் செய்வதற்காகவே தமது வாழ்வை அர்ப்பணித்தனர். இராஜராஜனின் காலத்தில் நூற்றுக்கணக்கான நடனப் பெண்கள் தஞ்சைப் பெரிய கோயிலில் இருந்ததாக அறியப்படுகிறது. பின்னர் ஒழுக்க மீறல்கள் ஏற்பட்டதால் அந்த நடனப் பெண்கள் தேவதாசிகள் எனப்பட்டு சமூகத்தில் ஒதுக்கப்பட்ட இனமாயினர்.

தமிழ்ச் சமூகத்தில் ஆரம்ப காலத்தில் இருந்த தாய் வழிச் சமூக அமைப்பில் பெண்ணைச் சுற்றியே குடும்ப அமைப்பு இருந்ததால், தாய் குடும்பத் தலைவியாக இருந்து சகல முடிவுகளையும் எடுக்கும் சுதந்திரத்தைப் பெற்றிருந்தாள். பின்னர் ஏற்பட்ட ஆரியச் செல்வாக்கால் தந்தையை மத்தியாகக் கொண்டு குடும்பம் அமையும் முறை தலையெடுத்தது. இதனால் பெண்ணின் நிலை பெரிய மாற்றங்களுக்குட்பட்டது. கணவனுக்குப் பல விதங்களில் சேவை செய்வது, குழந்தைகளைப் பெற்றெடுத்து வளர்ப்பது போன்றவை மட்டுமே பெண்ணின் வேலையென்றானது. சமயக்கிரியைகளில் கணவனுடன் பங்கெடுக்கும் உரிமை அவளுக்கு இருந்த போதும் அவள் தனியாக அவற்றை நடத்தும் உரிமை இருக்கவில்லை. காலம் மாற மாற சமூக கட்டமைப்பு மாறிய போதும் கல்வி, சமூக உற்பத்தி, பொது வேலைகள், அரசியல், மற்றும் நிர்வாகத்திலிருந்து பெண் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டு, ஆணின் தயவிலேயே வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டாள். பெண் இப்படி வாழ்வதுதான் முறை என்றும் சமூக ஒழுங்கைக் காப்பாற்றத் தேவையான அடிப்படை இதுவே என்றும் சமூகத்தின் கருத்துக் கட்டமைக்கப்பட்டது. தனிச் சொத்துடமை உருவாக, குடும்பச் சொத்து சரியான வாரிசுக்கு மாற்றப்பட வேண்டுமென்பதால், பெண்ணின் கற்பு அதிகமாக வற்புறுத்தப்பட்டது. கற்புடைய பெண்ணின் கழுத்தில் முத்து வளரும் என்றும், அவளால் இயற்கையைக் கூட கட்டுப்படுத்த முடியும் என்றும் இன்னும் பற்பல அற்புதங்களைச் சாதிக்க முடியும் என்றும் கதைகள் கட்டப்பட்டன. ஒரு பெண் ஒரு ஆணுடன் மட்டுமே வாழவேண்டும் என்றும் அவனது மறைவுக்குப் பின் அவள் விதவா நோன்பு பூண்டு பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பை மட்டும் ஏற்று, நிறமற்ற அல்லது ஒரு அழகற்ற ஒரு வாழ்க்கையை வாழவேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டது. அதற்கும் அடிப்படைக் காரணம் சொத்துப் பரிமாற்றமே. எனவே பெண்ணைப் பற்றிய கருத்து உருவாக்கத்துக்குத் தனியுடமைச் சொத்து வழி வழியாக ஆணின் சந்ததிக்குப் போகவேண்டும் என்பதே காரணமாக அமைந்தது. அவள் வீட்டை விட்டு வெளiயே போனால் அவளது கற்புக்கு பங்கம் அல்லது அவளது மனதில் மாற்றம் ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக அவள் வீட்டுக்குள் முடக்கப்பட்டாள். ஜனநாயக இயக்கங்களின் குரல்கள் வலுவாக ஒலிக்கத் தொடங்கிய பின்னர் மக்கள் திரளில் சரி பாதியான பெண்ணை வீட்டுக்குள் முடக்கி வைப்பது சரியல்ல என்ற கண்டனங்கள் எழுந்தன. பொதுவுடமை இயக்கங்களும், பெண்கள் அமைப்புக்களும், பல்வேறு ஜனநாயக இயக்கங்களும், தந்தை பெரியார், மகாத்மா காந்தி, பூலே, நாராயணகுரு போன்ற சமூகச் சீர்திருத்தவாதிகளும் முனைப்புடன் போராடியதன் விளைவாக பெண்கள் தொடர்பாகச் சில மாற்றங்கள் ஏற்பட்டன. பெண்களுக்கு வாக்குரிமை, இருதார மணத்தடை, குழந்தை மணத்தடை, தேவதாசி முறை ஒழிப்பு, பெண் கல்வி, பெண்களுக்கு வேலை வாய்ப்பு என்பன அவற்றிற் சில.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பெண்ணில் தமிழ்ச் சமூகம் கொண்டிருந்த அடக்குமுறையை கண்டு கோபமுற்ற கவிஞர்களுள் பாரதி, பாரதிதாசன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். பெண்ணுக்கு விடுதலை நீரில்லை என்றால் பின்னிந்த உலகினில் வாழ்க்கையில்லை, என்றும் ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம் என்றும் விடுதலைக்கு மகளிரெல்லோரும் வேட்கை கொண்டனம், வெல்லுவமென்றே திட மனதின் மதுக்கிண்ண மீது சேர்ந்து நாம் பிரதிக்கினை செய்வோம். உடையவள் சக்தி ஆண்பெண் இரண்டும் ஒருநிகர் செய்துரிமை சமைத்தாள், இடையிலே பட்ட கீழ்நிலை கண்டீர், இதற்கு நாம் ஒருப்பட்டிருப்போமா? திறமையால் இங்கு மேனிலை சேர்வோம், தீய பண்டை இகழ்ச்சிகள் தேய்ப்போம் என்றும், அறவிழுந்தது பண்டை வழக்கம் ஆணுக்குப் பெண் விலங்கெனுமஃதே என்றும் பாரதி பெண்களுக்கு விடுதலையும் முன்னேற்றமும் அவசியம் என்பதை குறிப்பிடுகிறார். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் எவர்க்கும் அஞ்சாத திண்மையும் திமிர்ந்த ஞானச் செருக்கும் உள்ள புதுமைப் பெண்ணை அவர் கற்பனை செய்கிறார்.

பாரதிதாசன் யாவற்றையும் வெளிப்படையாகக் கூறும் கவிஞன். பெண்விடுதலையின் அவசியத்தையும் கைமைக் கொடுமையையும் அவர் பின்வருமாறு கண்டிக்கிறார்.

கல்வியில்லை உரிமையில்லை பெண்களுக்குக்

கடைத்தேற வழியின்றி விழிக்கின்றார்கள்

புல்லென்றே நினைக்கிறீர் மனைவிமாரைப்

புருஷர்களின் உபயோகம் பெரிதென் கிறீர்

-------பெண் ஆண் என்ற

இரண்டுருளையால் நடக்கும் இன்ப வாழ்க்கை.             என்றும்



வல்லமை பேசியுன் வீட்டில்-பெண்

வாங்கவே வந்திடுவார்கள் சிலபேர்கள்

நல்ல விலை பேசுவார்-உன்னை

நாளும் நலிந்து சுமந்து பெற்றோர்கள்

கல்லென உன்னை மதிப்பார் - கண்ணில்

கலியாண மாப்பிள்ளை தன்னையுங் காட்டார்.

வல்லி உனக்கொரு நீதி-இந்த

வஞ்சகத் தரகர்க்கு நீ அஞ்ச வேண்டாம்             என்றும்

--

கற்றவளே ஒன்று சொல்வேன் -உன்

கண்ணைக் கருத்தைக் கவர்ந்தவன் நாதன்           என்றும்



கைம்மை எனக் கூறி-அப்பெரும்

கையினிற் கூர் வேலால்

நம்மினப் பெண்குலத்தின்-இதய

நடுவினிற் பாய்ச்சுகிறோம்.                         என்றும் பாடுகிறார்



கவிஞர்கள் கண்ட கனவு பொய்க்கவில்லை. பெண்கள் சகல துறைகளிலும் முன்னேறியுள்ளார்கள். சுதந்திரமாக நடமாடவும் தாம் விரும்பியதை படிக்கவும் சாதிக்கவும் தம் மனதுக்குப் பிடித்த ஆடவனுடன் திருமணத்தில் இணையவும் என்று நிறையவே மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆயினும் பெண்ணைப் பற்றிய சில கருத்துகள் இன்னும் மாறவில்லை. அதனால் பெண்ணியவாதிகள் இன்னும் அதற்காகப் போராடி வருகிறார்கள். அதனைப் பிரதிபலிக்கும் கவிதைகள் தமிழிலும் வருகின்றன.

கனிமொழி கருணாநிதியின் விட்டில்கள் என்ற தலைப்பிலமைந்த கவிதையின் ஒரு பகுதி-

உரிமைகளுக்காக போராடியே, எமது உயிரணுக்கள் மடிந்து போயின

விலங்குடைக்க கோஷமிட்டே, குரல் உடைந்து போனது

கத்தியையும் புத்தியையும், தீட்டி தீட்டியே மூளையும் விரல்களும், காய்த்துப் போனது.



இவரது கருவறை வாசனை என்ற தொகுப்பில் ஒரு கவிதை குடும்ப அமைப்பில் பெண்ணை அடக்கி வைக்கும் அதிகார அமைப்புக்களைச் சாடுகிறது.

சட்டாம் பிள்ளையாய் அம்மா

சிறைக் காவலராய் அப்பா

அறிவுச் சலவைக்கு படிப்பு

கைகொட்டி சிரித்து அடக்கி வைக்கச் சுற்றம்

சிலுவையின் ஆணி தகர்த்து இறங்கி வந்தால்

கையில் தாலிக் கயிற்றோடு கணவன்

உன் கருவறைக்குள் மற்றுமொரு அடிமை.

அதே தொகுப்பில் உள்ள அவரது இன்னொரு கவிதை வெற்று முழக்கமிடும் பெண்களை எள்ளி  நகையாடுகிறது.

வாய் நிறைய விலங்குகள் முறிய கோஷங்கள் என்றாலும்

கண்கள் என்னவோ தூரத்து வானிலிருந்து

குதிரை மீது வந்து அள்ளிக் கொண்டு போகப் போகும்

இராஜகுமாரனிடம்தான்

அழகிய பெரியவன் என்ற கவிஞரின் செல்லக்குட்டிக்கு என்ற கவிதை பெண்ணின் வளர்ப்பு முறையே அவளை அடங்கிப் போகிறவளாக ஆபரணங்களுக்கு ஏங்குபவளாக அமைந்திருப்பதைக் கூறுகிறது-

நீ வளரும் போதே உன் கழுத்தை வளைத்துப் பழக்குவார்கள்

சலங்கை, சிலம்பு, வளையல் மெட்டி இப்படி விலங்குகளையே ஆபரணமாய் தருவார்கள்

உனக்கென சிந்திப்பார்கள் அவர்கள், அவர்களுக்கென நீ வாழ்வாய்



செல்மா பிரியதர்ஷனின் ஆத்மாவும் அழகுப் போட்டியும் என்ற கவிதை-

பூவோடு ஒப்பிட்ட நீங்கள் இப்போது காத்துக் கொண்டிருக்கிறீர்

புதிதாய் கண்டுபிடிக்கப்பட இருக்கின்ற அறிவியல் சாதனங்களைக்கூட

எமது பாகங்களோடு ஒப்பிடுவதற்காக

உறுப்புக்களiன் நீள அகலத்தையே அழகென்று வழக்கப்படுத்திய

உங்கள் அகராதியில் எமது ஆத்மாவிற்கிருக்கும்  அர்த்தமென்ன?