சர்வதேச மகளிர் தினம் வருடம்தோறும் மார்ச் 8 ஆம் தேதியில்
வந்து போகிறது. ஆனால் உலகில் நடைபெறும் சம்பவங்களைப் பார்க்கும்போது பெண்கள்
எப்போதும் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்ற கேள்வியே மிஞ்சி நிற்கிறது.
ஆரம்பத்தில் பெண்கள் இருந்த நிலையில் இருந்து இன்று பல துறைகளில் அவர்கள் நிறைய முன்னேற்றம் கண்fடுள்ளனர்
என்பதில் சந்தேகம் எதுவும் கிடையாது. ஆயினும் பெண்ணின் பாதுகாப்பு நிலை பெரிதளவில்
மாறியதாகத் தெரியவில்லை. மார்ச் மாதத்தில் பெண்களின் சாதனைகளைக் கொண்டாடும் அதே வேளையில், எதிர்காலத்தில் நிலையான மாற்றங்களுக்காக விழிப்புணர்வுடனும் உறுதியுடனும்
இருக்க வேண்டியதும் அவசியமாகும். சர்வதேச மகளிர் தினம் என்பது உலகம் ழுழவதிலும் உள்ள பெண்கள் ஒன்றுகூடி
பெண்களின் சாதனைகளைக்
கொண்டாடுவது, சமத்துவத்தை அடைவதில் ஏற்பட்டுள்ள
முன்னேற்றத்தையிட்டு மகிழ்வது, இன்னும் உள்ள
சவால்கள் என்ன என்பதை அளவிடுவது ஆகும். அத்துடன்
உலகில் எந்த நாட்டில் உள்ள பெண்களாயினும் அவர்கள் அனைவரும் சமத்துவமாக வாழவேண்டும்
என்பதை அடைவதற்கான படிமுறைகளை கவனிப்பதும் இந்த விசேட நாளுக்குரியதாகும். சர்வதேச
மகளிருக்குரிய தினமாக
மார்ச் 8
குறிக்கப்பட்டிருந்த போதும் மார்ச் மாதம் முழுவதுமே உலகின் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பலவிதமான நிகழ்ச்சிகள்
இடம்பெறுகின்றன.
2017 ஆம் ஆண்டு அகில உலக பெண்கள் தினத்துக்கான தொனிப்பொருளாக
மாறிவரும் உலக தொழில்களில் பெண்கள் –
இப்புவியில் 2030 அளவில் 50-50 என்ற நிலை வரவேண்டும். அதாவது “Women in the
Changing World of Work: Planet 50-50 by 2030” என்பதாகும்.
தொழில்கள் உலகில் மாறி வருகின்றன. தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், உலகமயப்படுதல், ஆகியன அதற்காகத்
தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்பவர்களுக்கு வேலை எடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
மறுபுறத்தில் ஒழுங்குமுறை சாராத தொழில், வருவாயில்
சமத்துவமின்மை, மனிதகுல நெருக்கடிகள் காணப்படுகின்றன. இந்தப்
பின்னணியில் உலகில் 76 வீதமான
ஆண்களுடன் ஒப்பிடும்போது, 50 வீதம் மட்டுமே
வேலைசெய்யக்கூடிய வயதுடைய பெண்கள் தொழிலில் உள்ளனர். மிக அதிகளவு பெண்கள் முறைசாரா
வருவாய், மிகக் குறைந்தளவு ஆதரவு, வீட்டு வேலை, குறைந்த ஊதியம், குறைந்த திறமை தேவைப்படும் வேலைகள் ஆகியவற்றில் சமுக பாதுகாப்பின்றி
வாழ்கிறார்கள். உலக வேலைகளில் ஆண்பெண்
சமத்துவத்fதை ஏற்படுத்தி அழியவிடாத மேம்பாட்டை அடைவதே
நோக்கமாக இருக்கிறது. வேலையைப் பொறுத்த வரையில் 2030 இல் ஆண்-பெண் சமத்துவம் ஏற்பட்டு எல்லாப் பெண்களும் வேலைபெற வேண்டும்.
ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பின்வருமாறு இந்த ஆண்டுக்கான செய்தியை
வெளியிட்டிருக்கிறார்.
பெண்களின் உரிமைகள்
என்பது மனித உரிமைகளாகும். ஆனால் இந்தக் குழப்பமான காலத்தில் இதுதான் நடக்குமென்று
எதிர்வு கூறமுடியாத நிலையில் குளறுபடியான நிலையில் உலகம் இருக்கிறது. இந்நிலையில்
பெண்கள் சிறுமிகள் ஆகியோரின்
உரிமைகள் குறைக்கப்பட்டு தடுக்கப்பட்டு பின்நோக்கிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
அவர்களுக்குச் சக்தி கொடுப்பதன் மூலம் மட்டுமே அவர்களது உரிமைகளைப் பாதுகாத்து
அவர்கள் தமது முழுத்திறமையையும் உணரச் செய்யலாம். ஆணுக்கும் பெண்ணுக்கமிடையில்
அதிகாரத்தில் உள்ள சமநிலையின்மை, சமுகத்திலும்
சமுகங்கள் நாடுகளிடையேயும் சமத்துவமின்மையை
வளர்ச்சியடையச் செய்கிறது. இது பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிராக வேறுபாட்டைத்
தோற்றுவித்திருக்கிறது.
உலகம் முழுவதும்
மரபு பண்பாடு, சமயம் ஆகியன தவறான பயன்பாடுகளால் பெண்களின் உரிமைகளைத் தடுத்து வருகின்றன. எங்கும் பெண்களின் சட்ட உரிமைகள் ஆண்களுக்குச் சமமானதாக இல்லை. இன்னும்
குறைந்து போகிறது. பெண்களுக்குத் தங்களது உடலிலேயே உரிமை இல்லாதவாறு
தடுக்கப்படுகின்றனர். உண்மை வாழ்விலும் இணைய வெளியிலும் அவர்கள் பாதிப்புக்குள்ளாகிறார்கள். சில தீவிரவாத
இயக்கங்கள் பெண்களை அடிமைப்படுத்துவதைச் சுற்றியே தமது கொள்கைகளைக்
கட்டியெழுப்பியிருக்கின்றன. அத்துடன்
வன்முறை, பாலியல் கொடுமைகள் செய்ய அவர்கள்
தனிமைபடுத்தப்படுகின்றனர். இதனால் நாம் இவற்றையெல்லாம் மாற்றி, எல்லாத் தரங்களிலும் பெண்களது
குரல்களைக் கேட்கச் செய்து, அவர்கள் தமது
வாழ்விலும் எதிர்கால வேலைகளிலும் கட்டுப்பட்டை
ஏற்படுத்த உதவவேண்டும். பெண்கள் சிறுமிகள்
ஆகியோரின் உரிமைகளை மறுப்பது தவறு மட்டுமல்ல அது கடுமையான சமுக பொருளாதார
பாதிப்புகளை ஏற்படுத்தும். அது அனைவரையும் பின்நோக்கி எடுத்துச் செல்லும். பெண்கள்
உரிமைகளுடன் சமத்துவமாக வாழ்தல் என்பது சமுகங்கள், பொருளாதாரம்
ஆகியவற்றில் நல்ல பாதிப்புகளை ஏற்படுத்தும். பெண்கள் கல்வி, சுகாதார சேவைகளைப் பெறுதல் என்பது அவர்களது குடும்பங்களுக்கு மட்டுமல்ல
எதிர்கால சந்ததிக்கும் நன்மை பயக்கும். மேலும் ஒரு வருடம் பெண் படிப்பது என்பது
அவளது எதிர்கால வருவாயில் 25 வீதத்தைக்
கூட்டும். பெண்கள் முழுமையாக வேலைகளில் ஈடுபடுவதால்
அது மேலும் வாய்ப்புகளை உருவாக்கி வளர்ச்சியை ஏற்படுத்தும். ஆண்பெண் இடைவெளியை வேலைகளில் குறைத்தால் 2025 அளவில் உலக GDP யில் 12 ரில்லியன்
டொலர்களை அது அதிகரிக்கும். பொது நிறுவனங்களில் பெண்களின் வேலைகளை
அதிகரிப்பதால் தீர்மானம் எடுத்தல், கண்டுபிடிப்பு, முழுச் சமுகங்களுக்கு நன்மைகள் ஆகியன அதிகரிக்கும். 2030 இல் அழிவிலா
முன்னேற்றம் அடையும் எமது குறிக்கோளுக்கு ஆண்பெண் சமத்துவம் மிக
முக்கியமானது. எமது சமாதான, பாதுகாப்பு வேலைகளில் பெண்களது
பங்கு அதிகரிக்க நான் உறுதி கொண்டிருக்கிறேன். சமாதானத்தை நிலைநாட்டுவதற்காக
வாதாடவும் பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்தாரம், இம்சை
ஆகியவற்றைக் குறைக்கவும் சமாதானத்தை ஏற்படுத்தும் வேலைகளில் ஈடுபடுத்தப்படவேண்டும். ஐநாவுக்குள் அனைத்து துறைகளிலும் பெண் சமத்துவம் ஏற்படுத்த திட்டமிட்டிருக்கிறோம். இது
மற்றவர்களுக்கும் முன்னுதாரணமாக அமையும்.
2015 வருடத்துக்கான தொனிப்பொருள் Make it
Happen அதாவது பெண்களை முன்னேற்றுவதற்கான அடையாளப்படுத்துவதற்கான
செயலாற்றலை
ஊக்கப்படுத்துவதே அதன் பொருள். 2014 ஆம் ஆண்டுக்கான ஐக்கியநாடுகள் சபையின் தொனிப்பொருள் A promise is a promise: Time for action to end
violence against Women. அதாவது பெண்களுக்கெதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டு
வர செயலாற்றுதலுக்கான நேரம் என்ற வகையில் அமைந்துள்ளது. 2013 ஆம் வருடத்துக்கான தொனிப்பொருள் Empower
Rural women: End Hunger and poverty அதாவது கிராமப்
பெண்களுக்கு சக்தி கொடுப்பதுடன் அவர்களது பசியையும் வறுமையையும் முடிவுக்குக்
கொண்டு வருதல் என்பதாகும். கடந்த முப்பத்தெட்டு வருடங்களாக ஐக்கிய நாடுகள் சபை
ஒவ்வொரு மார்ச் மாதத்துக்கும் ஒரு தொனிப்பொருள் கொடுத்து
வந்துள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டு வருதல் இந்த முறை
மட்டுமல்ல கடந்த சில வருடங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் தொனிப்பொருளா௧
இருந்திருக்கிறது. 2009 இல் women
and men united to end violence against Women and Girls, அதாவது பெண்களுக்கும்
சிறுமிகளுக்கும் எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டு வருவதில் பெண்களும்
ஆண்களும் ஒன்றுபடவேண்டும்,
2007 இல் Ending
impunity for violence against women and girls, அதாவது சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் எதிராக
வன்முறை செய்வோருக்கான தண்டனை விலக்குரிமையை முடிவுக்குக் கொண்டு வருதல். 1999 இன் பேசுபொருள் World Free of Violence against
Women அதாவது
பெண்களுக்கெதிரான வன்முறையிலிருந்து உலகம் தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும்
என்பதாகும். மீண்டும் மீண்டும் ஐக்கிய நாடுகள் சபை எவ்வளவுதான் சொன்னாலும் உலகம்
பெண்களுக்கு எதிரான வன்முறையைக் குறைக்கவில்லை என்பது இதிலிருந்து தெரிகிறது.
பெண்களுக்கு
எதிரான வன்முறை என்றால் என்ன என்பதை ஐநா பிரகடனம் ஒன்று சொல்கிறது. பெண்ணுக்கு
எதிரான எந்தச் செயலும் உடல், பாலியல், உளவியல் பாதிப்புகளைச் செய்வதில் முடிந்தால் அது
வன்முறையாகும். அத்துடன் பெண்ணின் சுதந்திரத்துக்கு இடையூறு விளைவிக்கும்
தன்னிச்சியான செயல்கள், மற்றும்
அச்சுறுத்தல்கள் வீட்டில் நடந்தால் என்ன வீதியில் நடந்தால் என்ன அது
வன்முறையாகும். குடும்பத்தில் நடைபெறும் உடல், உளவியல் மற்றும் பாலியல் ரீதியாக பெண் பிள்ளைகளைத் தாக்குதல்
போன்றன வன்முறைகளாகும். சீதனம் தொடர்பான வன்முறைகள், பெண்களின் உள் உறுப்பைச்
சமயத்துக்காக முடமாக்குதல்,
கணவனால்
சம்மதமின்றிச் செய்யப்படும் கற்பழிப்பு, கணவனல்லாத குடும்பத்தவரால் செய்யப்படும் தாக்குதலும்
வன்முறையுள் அடங்கும். அல்லது சமூகத்தில் நடைபெறும் உடல், உள பாலியல்
வன்முறைகள் பாலியல் தாக்குதல், வேலையில் அல்லது
கல்வி நிறுவனங்களில் பெண்களை
அவமானப்படுத்துதல் அல்லது வேறு இடஙகளில் பெண்களைக்
கடத்திச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்துதல் போன்றனவும் வன்முறையுள்
அடங்கும்.
1908 ஆம் ஆண்டில்
இடம்பெற்ற முதல் சர்வதேச மகளிர் தினத்தில்
விதைக்கப்பட்ட விதை இன்று பெண்கள் பல வழிகளில் முன்னேற்றம்
அடைய காரணமாக அமைந்திருக்கிறது. ஆயினும் பெண்கள் வன்முறையின்றிப் பாதுகாப்பாக
வாழ்கின்றனர் என்று துணிந்து சொல்ல முடியவில்லை. பெண்களும் பெண் பிள்ளைகளும் ஆண்களினால் செய்யப்படும் வன்முறைக்குட்படுவது எங்கும்
காணப்படுகிறது. அதனால் கடும் காயங்கள், மரணம் ஆகியன ஏற்படுவதுடன் பாலியல் வன்முறையும்
இடம்பெறுகிறது. இதுவே மிகப் பாரதூரமானதும் பெண்களைக் கடும் பாதிப்புக்கு
உட்படுத்துவதுமாகும். ஆண்கள் போராலும் வேறு ஆபத்தான தொழில்களாலும் குடிபோதையில் செய்யப்படும்
வன்முறைகளாலும் பாதிக்கப்படுகின்றனர். இவை அனைத்தும் ஆண்களாலேயே உருவாக்காப்பட்டு
அவர்களே பாதிப்புமடைகின்றனர். இதனால்தான் பெண்கள் போர்களில் பங்கு பற்றாமலும் ஆண்கள் செய்யும் ஆபத்தான தொழில்களிலும் ஈடுபடாமலும் பாதுகாக்கப்பட்டனர். ஆனால் போர் நடைபெறும்போது
பாதிக்கப்படுவது பெரும்பாலும் பெண்களும் பெண் பிள்ளைகளும்தான். எதிரிகள் பாலியல்
பலாத்காரத்தை ஒரு போர்த் தந்திரமாகப் பயன்படுத்துவது ஏறக்குறைய எல்லா உள்நாட்டுப்
போர்களiலும் நடக்கின்றன.
பெண்களுக்கு
எதிரான வன்முறை காணப்படுகின்றதென்பதை ஆண்கள் ஒத்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலும்
பெண்கள் தமது ஆண் துணைவர்களாலேயே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். கிடைத்த தகவல்களiன்படி அவர்கள்
பெண்களின் தாடையை அல்லது
மண்டையை உடைத்தமை, இந்தியாவில்
உயிரோடு கொழுத்தியமை என்பன மிக அதிகமாக காணப்படுகின்றன. இந்தியா, பாகிஸ்தான், ஆபிரிக்காவுடன்
ஒப்பிடும்போது அவுஸ்திரேலியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை குறைவென்று
கூறினாலும் இங்கும் பெருமளவில் இருக்கின்றது என்பதற்கான தகவல்கள் காணப்படுகின்றன.
கணவனால் அல்லது முந்திய கணவன் அல்லது காதலனால் பல பெண்கள் ஆண்டுதோறும்
கொல்லப்படுகிறார்கள் அல்லது முடமாக்கப்படுகிறார்கள் அல்லது வேறு வகைகளில் பாதிக்கப்படுகிறார்கள். இந்த வன்முறையையை நிறுத்தும்படி
அரசும் பல நிறுவனங்களும் வருடந்தோறும் மீண்டும் மீண்டும் கூறிவருகின்றன. ஆயினும்
இதில் அதிக முன்னேற்றம் வந்துவிடவில்லை என்பது மிகத் துரதிஷ்டவசமானது. பெண்களுக்கு
பாதுகாப்பளிக்கும் சட்டங்கள்
உருவாக்கப்பட்டமைக்கு இங்கு பெண்களுக்கெதிரான வன்முறையே காரணம் என்று கூறலாம்.
ஐநா பொதுச் சபை
நவெம்பர் 25 ஆம் தேதியை International Day for
Elimination of Violence Against Women, அதாவது
பெண்களுக்கெதிரான வன்முறையைக் இல்லாதொழிப்பதற்கான சர்வதேச
நாள் என நிர்ணயித்துள்ளது. அகில உலகிலும் பெண்கள் பாலியல் மற்றும் வீட்டு
வன்முறைகளாலும் மற்றும் ஏனைய வன்முறைகளாலும் பாதிக்கப்படுவது குறித்த
விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கம். இந்த
வன்முறைகளின் உண்மையான
இயல்பும் பிரச்சினைகளும் பெரிதும் மறைந்திருக்கின்றன. வரலாற்றுரீதியாகப்
பார்க்கும்போது 1960 இல் டொமினிக்கன்
குடியரசில் அங்குள்ள சர்வாதிகாரியான Rafeel Trujillo என்பவனது
கட்டளைப்படி Mirabal
sisters எனப்படும் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டிருந்த மூன்று
சகோதரிகள் மிகக் கொடுரமாகக் கொல்லப்பட்டனர். அவர்கள் கொல்லப்பட்ட தினமான நவெம்பர் 25 ஆம் திகதியை, 1981 ஆம் ஆண்டு தொடக்௧ம், பெண்ணியத்தில்
தீவிரமான கருத்துக்களைக் கொண்ட பெண்கள், பெண்களுக்கு செய்யப்படும் வன்முறைக்கு எதிராகப் போரிடும்
நாளாகத் தெரிவு செய்தனர். அது பின்னர் 1999 நவெம்பர் 17 ஆம் தேதி ஐநாவால் உத்தியோகபூர்வமாக பெண்களுக்கு எதிராக
நடைபெறும் வன்முறையை குறைப்பதைக் குறிக்கும் நாளாகத் தெரிவு செய்யப்பட்டது. அந்தத்
திகதி 16 நாள் தீவிர எதிர்ப்பைக் குறிக்கும் தொடக்க
நாளாக அமைக்கப்பட்டு டிசம்பர் 10ஆம் திகதி வரும் மனித உரிமைகள் நாளுடன் நிறைவு பெறுகிறது.
பெண்களுக்கெதிரான
வன்முறையைக் குறைத்தல் என்ற பிரகடனம் ஐநாவில் வாக்கெடுப்பின்றி ஒரு தீர்மானமாக 1993 டிசம்பர் 20 ஆம் திகதி
உருவாக்கப்பட்டது. பெண்களின் உரிமைகள், சமத்துவம்
தொடர்பான கோட்பாடுகள், பாதுகாப்பு, சுதந்திரம், கௌரவம் ஆகியவை
அவசரம் தேவை என்று அடையாளம் காணப்பட்டு இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. வன்முறை
இன்றிப் பெண் சுதந்திரமாக வாழவேண்டும் என்று சர்வதேசம் அடையாளம் கண்டது. அண்மைக்
காலத்துக்குரியது. வரலாற்று ரீதியாகப் பார்த்தால் பெண்கள் வன்முறையுடன் போராட
வேண்டி நேர்ந்தது. குற்றமிழைத்த ஆண்கள் தண்டனையின்றித் தப்பித்துக் கொண்டனர். ஐநா
பெண்களின் உரிமைகளைப்
பாதுகாப்பதில் கவலை கொண்டதேயின்றி 1993 வரை பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக அதிக கவனம்
எடுக்கவில்லை. அரசாங்கங்கள் வீட்டு வன்முறை தனிப்பட்டது அதில் தலையிடுவது சரியல்ல
என்று ஒதுங்கியிருந்தன. 1993 இல் மார்ச் 8 இல் பெண்கள்
நாளுக்கான வேலையில் ஈடுபட்டிருந்தபோது அப்போதைய செயலாளர் நாயகமான Boutros
Boutros Ghali பெண்களின் உரிமைகளையும்
பாதுகாப்பையும் பேணுவதில் ஐநாவின் பங்கு குறித்த ஒரு விரிவான பிரகடனத்தைத்
தயாரிப்பதில் ஈடுபட்டதைக் குறித்து ஓர் அறிக்கையை வெளியிட்டார். அதில் பெண்களின் உரிமைகளுக்கான போராட்டமும், சமாதானத்தையும் பெறுமதிகளையும் முன்னேற்றவல்ல ஒரு புதிய ஐநா ஒன்றை
உருவாக்குதலும்தான். இன்று முன்னரெப்போதையும்விட
பெண்களின் பிரச்சினை
முழு மனித இனத்தின் பிரச்சினையாக மாறியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கங்களுக்கும்
அரசு சார்பில்லாத அமைப்புகளுக்கும் இந்த நாளில் பெண்களுக்கு நடக்கும் வன்முறைகளுக்கு எதிரான
விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்துமாறு ஐநாவும், Inter Parliamentary union உம் அழைப்பு விடுத்திருந்தன. UNIFEM எனப்படும் United Nations
Development Fund for Women அமைப்பு ஒவ்வொரு வருடமும் நிகழ்ச்சிகளை
நடத்துவதுடன் மற்றவர்களும் இதைப் பின்பற்றுவதற்கு ஆலோசனை வழங்கி வருகிறது.
கனடாவில் ஓவ்வொரு டிசம்பர் 6ஆம் தேதியும் 14 பேர் பெண்கள்
என்ற காரணத்தால் மட்டும் கொல்லப்பட்ட நாளைக் குறிக்கும் வகையில் White Ribbon நாளாகக்
அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நாளில் விழிப்புடன்
இருப்பதுடன் பெண்களுக்கெதிரான வன்முறை குறித்த கலந்துரையாடல்களும் நடைபெறுகின்றன. இந்த நினைவுநாள்
கனடா நாடாளுமன்றத்தால் 1991 இல் ஆரம்பித்து
வைக்கப்பட்டது. அந்த நாளில் கனடாவின் கொடி
ஒன்ராரியோ மாநிலத்தில் உள்ள ஒட்டாவாவில் உள்ள நாடாளுமன்றக் குன்றில் உள்ள Peace tower இல் அதாவது
சமாதான கோபுரத்திலும் வேறு கட்டிடங்களிலும் அரைக்கம்பத்தில்
பறக்கவிடப்படும். அத்துடன் வெள்ளை ரிபன் அணிவதற்கும் ஒரு நிமிட மௌனம்
அனுஷ்டிப்பதற்கும் கனடா மக்கள் ஊக்கப்படுத்தப்படுகின்றனர்.
இருபதாம்
நூற்றாண்டின் இறுதி வருட மகளிர் தினத்தில்
அப்போதைய செயலாளர் நாயகமான Kofi Annan பின்வருமாறு
கூறினார். பெண்களுக்கு எதிரான வன்முறை
என்பது மிக அவமானத்துக்குரியது, அது முறை திறம்பிய மனித உரிமை மீறுதலாகும். மனித உரிமையை
அனுபவித்து மகிழ்வது என்பது தனிப்பட்டவர், சமூகம், உலகம் ஆகியவற்றின் மேம்பாட்டுக்கும் நல்வாழ்வுக்கும்
இன்றியமையாததது என்பதை இந்த நூற்றாண்டில் மனித சமூகம் கற்றுக் கொண்டிருக்கிறது.
ஆயினும் மிக அதிகமான பெண்கள் இந்த அடிப்படை மனித உரிமை மறுக்கப்பட்டவர்களாக
இருக்கின்றனர். அடிக்கடி அவர்களது சுதந்திரமும் கௌரவமும் பாதிக்கப்படுகிறது.
பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது மிகவும் அவமானத்துக்குரியது. அதற்கு புவியியல், பண்பாட்டு, செல்வ வேறுபாடுகளோ
எல்லைகளோ கிடையாது. உலகில் உள்ள பெண்கள் பலர் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.
பெண்களுக்கெதிரான வன்முறை தொடரும் வரை சமத்துவம், மேம்பாடு, சமாதானம் ஆகியவை உண்மையில் முன்னேறியதாக நாம் சொல்ல
முடியாது. பெண்களுக்கெதிரான வன்முறையைத் தடுக்க நாடுகள் சர்வதேச பொறிமுறைகளைக்
கொண்டிருக்கின்றன. வன்புணர்ச்சி அல்லது கற்பழிப்பு என்பது இன ஒழிப்புக் குற்றம்
என்று 1998 செப்ரெம்பர்
மாதம் The
International Tribunal for Rwanda வரைவிலக்கணம் செய்துள்ளது. பல அரசுகள்
பெண்களுக்கெதிரான சகல வன்முறைகளையும் தடுக்கும் முறையில் தேசிய சட்டங்களை இயற்றியுள்ளன.
அத்துடன் எந்த விதமான வன்முறைகளும் சகிக்கப்பட முடியாதவை என்று பிரசாரம்
செய்யப்படுகிறது. இருந்த போதும் இன்னும் பல செய்யப்பட வேண்டியுள்ளன. ஐநா குடும்பம், அதன் அங்கத்துவ
நாடுகள் மற்றும் சமூகங்களை உள்ளடக்கிய மகளிர் தினத்தில்
நடைபெறும் இந்த மாநாட்டில் நாம் ஒன்றாக இணைந்து பால் அடிப்படையில் அதாவது gender
based குற்றங்களை ஒழிக்க ஒவ்வொருவரும் பொறுப்பாக
இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இக்குற்றங்களை இல்லாதொழிக்க நீதி
முறைமைகளும் நிறுவனங்களும் செயற்படக் கூடியன என்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும்.
வன்முறைகள் அடையாளம் காணப்பட்டு ஒடுக்கப்படவேண்டும் என்பதையும் நாம் உறுதிப்படுத்த
வேண்டும். அத்துடன் அவற்றை மீறி பெண்களுக்கெதிராக வன்முறை செய்பவர்கள்
தண்டிக்கப்பட வேண்டும். இறுதியாக இவை அனைத்தும் எம்மைப் பொறுத்தவை. எமது வீடுகளில்,
நாடுகளில்,
உலகத்தில்
சமூகங்களில் நாம்
பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் பாதுகாப்பான ஒரு உலகை உருவாக்க வேண்டும். அதில்
பெண்கள் சகல மனித உரிமைகளையும் அனுபவித்து மகிழ வேண்டும் என்று Kofi Annan தனது உரையில்
குறிப்பிட்fடிருந்தார்.
சர்வதேச
மன்னிப்புச் சபையும் பெண்ணுக்கெதிரான வன்முறையை நிறுத்து அதாவது Stop Violence Against
Women என்று இந்நாளில் உலகளவில்
பிரசாரம் செய்து வருகிறது. இது 2004 மார்ச் 5 ஆம் தேதி அதாவது
சர்வதேச மகளிர் நாளுக்கு
மூன்று நாட்கள் முன்னதாக ஆரம்பிக்கப்பட்டது. வீட்டில் நடைபெறும் வன்முறை மற்றும்
பாலியல் வன்முறை என்பன மனித உரிமைளை மீறும் செயல்கள் என்று மன்னிப்புச் சபை
கருதுகின்றது. பெண்களைப் பாதுகாக்கும்படியாகச் சட்டத்தை மாற்றும்படியும் வன்முறை
செய்வோருக்குத் தகுந்த தண்டனை அளிக்கும்படியும்
அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. நாட்டுக்குள் நடைபெறும் போரின்போது பெண்களுக்குச்
செய்யப்படும் வன்முறை கற்பழிப்பு ஆகியன குறித்து மன்னிப்பு சபை அதிக அக்கறை
கொண்டுள்ளது. இவ்வளவு செய்தும் இன்றும் பெண் பாதுகாப்பாக இல்லை என்பது மிகுந்த
கவலைக்குரிய விஷயமாகும்.
**
No comments:
Post a Comment