Monday 20 February 2017

சிவராத்திரி



சிவனுக்கு ஐந்து வித சிவராத்திரிகள் புனிதமானவை என்று கூறப்படுகிறது. யோக சிவராத்திரி என்பது யோகத்தின் மூலம் ஒரு யோகி தனக்கென ஒரு இரவை உருவாக்கி சிவனை வழிபடும் சிவராத்திரி,  நித்திய சிவராத்திரி என்பது தினமும் வருவது. பக்ஷ சிவராத்திரி என்பது இரு வாரங்களுக்கு ஒரு தடவை வருவது. மாச சிவராத்திரி என்பது மாதாந்தம் வருவதாகும். வருடத்திற்கு ஒரு தடவை வரும் சிவராத்திரி மகா சிவராத்திரி எனப்படுகிறது. மகாசிவராத்திரி என்ற சமஸ்கிருதச் சொல்லின் கருத்து சிவனுக்குரிய பெரிய அல்லது சிறந்த இரவு என்பதாகும். அது மாசி மாதத்தில் அதாவது February-March மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் அமாவாசைக்கு முதல் நாள் சதுர்த்தசியில் வருவதாகும். இது ஒரு பண்டைய சமய விழாவாகும். ஏனைய பல இந்து சமய விழாக்களிலிருந்து சிவராத்திரி மாறுபட்டுள்ளது. பெரும்பாலான விழாக்கள் விரதத்திலும் வழிபாட்டிலும் ஆரம்பித்து விருந்தில் நிறைவடைவனவாகும். ஆனால் சிவராத்திரியின்போது முழு நாளும் சிவ வழிபாட்டிற்காக ஒதுக்கப்படுகிறது. மனித வாழ்வில் நாளாந்தம் செய்யப்படும் இரண்டு முக்கிய செயல்கள் அதாவது உணவு உண்ணுதலும், இரவு உறக்கமும் அன்று சிவ வழிபாட்டிற்காக துறக்கப்படுகிறது.

மனம் போனபடி போகும் புலன்களைக் கட்டுப்படுத்துவதே விரதமிருப்பதன் அடிப்படை நோக்கமாகும். உணவை தவிர்க்கும் போது உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது எளிது என்று கருதப்படுகிறது. தினமும் நாம் அனுபவிக்கும் நித்திரை தாமத குணத்தின் வெளிப்பாடு என்றும், விழித்திருப்பதன் மூலம் அந்தக் குணம் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது என்றும் சொல்லப்படுகிறது. இவ்வாறு உணவையும் உறக்கத்தையும் கட்டுப்படுத்துவதன் மூலம் நாம் சாதாதரண  விழிப்பு நிலையையும், விழிப்பற்ற உறக்க நிலையையும் கடந்து மிக உயர்ந்த உணர்வு விழிப்பு நிலைக்குச் செல்கிறோம். சாதாரண விழிப்பு, உறக்க நிலைகள் இறைவனை உணர்வதற்குத் தடையாக இருப்பனவாகக் கருதப்படுகின்றன. தினமும் விழிப்பு நிலைக்கும் தூக்க நிலைக்கும் போய் வரும் நாம், உயர் விழிப்பு நிலை பற்றி உணர்வதேயில்லை. சிவராத்திரியில் விரதமிருந்து உறக்கத்தைத் தவிர்க்கும் போது எமது புலன்கள் கட்டுப்படுகிறது. அந்த நிலையில் நின்று இறைவனைப் போற்றி வழிபடும் போது எமது உணர்வுகள் வெண்ணை போல உருகி, நாம் உயர்ந்த விழிப்பு நிலைக்குச்  செல்ல வழிவகுக்கிறது. 


சிவபுராணத்தின்படி மகாசிவராத்திரி வழிபாட்டில் ஆறு அம்சங்கள் சேர்க்கப்படவேண்டும். சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய வேண்டும். இது ஆன்மாவைத் தூய்மைப்படுத்துதலைக் குறிக்கும். லிங்கத்திற்கு குங்கும்  அணிவித்தல் நல்லியல்பையும் நல்ல பலனையும் வழங்கும். உணவு நிவேதித்தல் நீண்ட ஆயுளையும் விருப்பங்கள் நிறைவேறுவதையும் குறிக்கும். தீபமிடுதல் செல்வத்தை வழங்கும். எண்ணெய் விளக்கேற்றுதல் ஞானம் அடைதலைக் குறிக்கும். வெற்றிலை அளித்தல் உலக இன்பங்களiல் திருப்தியைக் குறிக்கும். இந்த ஆறு அம்சங்களும் வீட்டிலாவது கோயிலிலாவது சிவராத்திரியை அனுஷ்டிக்கும் போது இறைவனுக்கு வழங்கப்படவேண்டியவை என்று புராணம் கூறுகிறது.

சிவராத்திரி அன்று காலையில் எழுந்து புனித நீரில் நீராடி புத்தாடை தரித்து சிவனுக்கு நீராட்ட புனித நீரை குடத்தில் நிறைத்து ஏந்தியவாறு பக்தர்கள் கோயிலுக்குப் போகிறார்கள். உதாரணமாக இலங்கையில் திருக்கேதீஸ்வரம் என்ற பாடல் பெற்ற தலத்தில் சிவராத்திரியின் போது பக்தர்கள் தாம் பாலாவியிலிருந்து குடத்தில் நிறைத்து ஏந்தி வரும் நீரை தாமே அபிஷேகம் செய்வதற்காக கோயிலின் உட்பிரகாரத்தில் தாபிக்கப்பட்டிருக்கும் மிகப் பண்டைய லிங்கமான மகாலிங்கத்துக்கு எடுத்துச் செல்வர். கோயிலுக்குப் போகும் பக்தர்கள் இரவு முழுவதும் விழித்திருந்து கோயிலின் கருவறையில் உள்ள லிங்கத்துக்கு நடைபெறும் அபிஷேகங்களிலும் பூசைகளிலும் கலந்து கொள்கிறார்கள்.

சிவராத்திரியின் போது இரவு நான்கு யாமங்களாகப் பிரிக்கப்படுகிறது. அந்த நான்கு யாமங்களிலும் சிவலிங்கத்துக்கு விசேடமாக அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. அந்த யாமப் பூசைகளின் போது எவையெவற்றால் வழிபடவேண்டும் என்பதை புனித நூல்கள் எடுத்துக் கூறுகின்றன. முதல் யாமப் பூசையின் போது தாமரை மலரால் அர்ச்சித்து பொங்கலை நிவேதனமாக வழங்கி, இருக்கு வேதத்தை ஓதி வழிபடவேண்டும். இரண்டாவது யாமப் பூசைக்குரிய இலை துளசியாகும், அத்துடன் பாயாசத்தை நிவேதித்து யசுர் வேதத்தை ஓதி வழிபட வேண்டும். மூன்றாவது யாமத்தில் வில்வம் இலைகளால் சிவனுக்கு அர்ச்சனை நடைபெறுகிறது. எள்ளும் மாவும் கலந்த உணவை நிவேதித்து சாமவேதத்தை ஓதி வழிபட வேண்டும். நான்காவது யாமத்தில் நீலோத்பல மலர்கள் அர்ச்சனைக்குரியவை. அத்துடன் எளிமையான ஒரு பிரசாதத்தை நிவேதித்து அதர்வ வேதம் ஓதி வழிபடுவது சிறப்பானது. விரதம் அனுஷ்டிக்கும் பக்தர்கள் அடுத்த நாள் விடியும் வரை சிவனுக்கு நிவேதித்த பொருட்களையும் உண்ணுதல் கூடாது என்றும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்து விரதங்களினதும் கொண்டாட்டங்களினதும் பெருமையையும் சிறப்பையும் பழமையையும் உணர்த்த புராணக் கதைகளில் அவற்றின் மூலத்தைத் காண்பது போல, சிவராத்திரியின் ஆரம்பமும் புராணக் கதைகளுடன்f இணைக்கப்பட்டுள்ளது. தனது கணவனான சிவனை நினைத்து அவரது நலனுக்காகவும் தீமைகள் அவரை நெருங்காதிருப்பதற்காகவும் பார்வதி உணவைத் துறந்து பிரார்த்தனையிலும் தியானத்திலும் ஈடுபட்ட தினமே சிவராத்திரி என்கிறது ஒரு கதை. ஆண்களும் பெண்களும் சிவராத்திரியன்று விரதம் அனுஷ்டித்து சிவனை வழிபடுகின்ற போதும் இந்தக் கதையின்படி அது பெண்களுக்கு விசேடமாக உரிய வழிபாட்டுத் தினமாகவே கருதப்படுகிறது. இன்று திருமணமான பெண்கள் தமது கணவனதும் மகன்களதும் நலனுக்காக இவ்விரதத்தை அனுஷ்டிக்கிறார்கள். திருமணமாகாத பெண்கள் ஒரு நல்ல கணவன் கிடைக்கவேண்டும் என்பதற்காக வழிபடுகிறார்கள்.

ஊழிக் காலத்தில் பிரபஞ்சம் அசைவற்றிருந்த போது தேவியின் வேண்டுகோளுக்கு இணங்கி சிவன் மீண்டும் இயக்கத்தை உண்டாக்கினார் என்றும் அப்போது முதலில் இயக்கம் பெற்ற உருத்திரர்கள் திருவைந்தெழுத்தை ஓதி சிவனை வழிபட்ட தினமே சிவராத்திரி என்று இன்னொரு கதை கூறுகிறது. எல்லாம் ஒடுங்கி சூனியம் மட்டும் இருந்த நிலையில் சிவன் யோக துயில் கொண்ட போது அவரது சொருப நிலையில் தேவி ஒன்றி நின்ற தினமே சிவராத்திரி என்கிறது மற்றொரு கருத்து. சிவ புராணத்தில் இன்னுனொரு கதையும் உள்ளது. பிரமாவும் விஷ்ணுவும் அடிமுடி தேடிக் காணாத போது லிங்கோத்பவ வடிவமாக அவர்களுக்கு அருள் செய்த நாளே சிவராத்திரி என்று அது கூறுகிறது. சிவன் லிங்க வடிவில் முதலில் தோன்றிய அந்த நாள் மாசி மாதத்து கிருஷ்ண பட்சத்தில் 14ஆம் நாளாக இருந்த காரணத்தால் அது லிங்க வடிவில் சிவனை வழிபடுவதற்கேற்ற நாளாக சிவராத்திரியாக மாறியது என்கிறது இந்தக் கதை. இவை அனைத்தையும் விட மிகப் பிரசித்தி பெற்ற புராணக் கதை பின்வருமாறு அமைகிறது.


வாரணாசியில் சுஸ்வர என்ற பெயருள்ள ஒரு ஏழை வேடன் இருந்தான். ஒரு சிறிய குடிலில் மனைவி பிள்ளைகளுடன் வாழ்ந்த அவன் காட்டில் வேட்டையாடி கிடைக்கும் பறவை விலங்கு ஆகியவற்றின் மூலம் தனது குடும்பத்துக்கு உணவளித்து வந்தான். ஒருநாள் அவன் வேட்டைக்குப் போன போது பல சிறிய விலங்குகளும் பறவைகளும் அவனது வேட்டையில் சிக்கின. வேட்டையால் கிடைத்தவற்றை ஒரு சாக்குப் பையுள் போட்டவனாக மேலும் விலங்குகள் கிடைக்கக்கூடும் என்ற ஆசையில் காட்டின் உட்பக்கத்திற்குச் சென்று விட்டான்.  நீண்ட நேரம் காட்டில் அலைந்து திரிந்ததால் இருள் சூழ ஆரம்பித்தது. இந்நிலையில் அடர்ந்த காட்டுக்குள் இருந்து வெளியே வரும் வழியை அவனால் அறிய முடியவில்லை. கொடிய விலங்குகள் அந்தக் காட்டில் இருந்ததால் அவன் தனது பாதுகாப்புக் குறித்து கவலையுற ஆரம்பித்தான். வேறு வழி அறியாத நிலையில் பாதுகாப்பு கருதி ஒரு மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டான். அவனது மணத்தால் கவரப்பட்ட விலங்குகள் மரத்தின் கீழ் வந்து கூடத் தொடங்கின. அவைகளைக் விரட்டலாம் என்ற நம்பிக்கையில் மரத்திலிருந்து சில சிறிய கொப்புகளை முறித்து கீழே நின்ற மிருகங்களின் மேலே எறிந்தான். அவை அகலவில்லை. இரவு முழுவதும் மரத்தைச் சுற்றியபடி நின்றன. எனவே மரத்திலேயே இரவைக் கழிக்க எண்ணி தூங்கி கிழே விழுந்துவிடாதிருக்க இலைகளைப் பறித்துக் கீழே வீசியபடி இருந்தான். விடிந்ததும் மிருகங்கள் அகன்று சென்றுவிட்டன. அவன் வேட்டைப் பொருட்களுடன் வீட்டுக்குச் சென்றான். சிறிது காலத்தின் பின்னர் அவன் இறந்த போது அவனுக்கு மோட்சம் கிடைத்ததாக கதை முடிகிறது. அவன் அன்று இரவு அவன் மிருகங்களுக்கு பயந்து ஏறியிருந்த மரம் வில்வ மரம் என்றும் அவன் இலைகளைப் பறித்துக் கீழே போட்ட போது மரத்தின் அடியில் இருந்த சிவலிங்கத்துக்கு மேலே அவை வீழ்ந்தன என்றும் கூறப்படுகிறது. இவ்வாறாக நித்திரை விழித்து வில்வம் இலைகளைப் போட்டதாலும் அன்று சிவராத்திரி என்பதாலும் அவனுக்கு மோட்சம் கிடைத்தது என்பது கதையில் கூறப்பட்ட முக்கியமான செய்தி.

சிவனுக்கு மிகவும் உகந்தது வில்வம் என்றும் அந்த மரத்தில் மகாலக்சுமி வாசம் செய்கிறாள் என்றும் ஒரு வில்வ மலர் ஒரு லட்சம் தங்க மலர்களுக்கு நிகரானது என்றும் சிவபுராணம் கூறுகிறது. ஒரு வில்வம் இலையை ஈசனுக்கு போட்டு பூசிப்பதன் மூலம் சகல பாவங்களும் நிவர்த்தியாகிறது என்றும் வில்வ மரத்தை வீட்டில் வளர்ப்பதன் மூலம் அஷ்வமேத யாகம் செய்த பலனையும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த பலனையும் கங்கை முதலிய புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய, சிவ தலங்களைத் தரிசித்த பலனையும் அடையலாம் என்றும் மேலும் வில்வத்தின் பெருமை கூறப்படுகிறது.

மேலே கூறப்பட்ட கதை ஓர் உருவக கதையாகும். அதன் ஒவ்வொரு அம்சத்திற்கும் ஆன்மிக ரீதியில் விளக்கம் கொடுக்கப்படுகிறது. வேடன் காட்டு மிருகங்களை வேட்டையாடியதைப் போல ஆன்மிக வழியில் போக விரும்புபவர்கள் காமம், கோபம், பேராசை, ஒரு பொருளில் அல்லது மனிதரில் அளவில்லாத ஆசை வைத்தல், பொறாமை, வெறுப்பு ஆகிய விலங்கு குணங்களைக் கொல்லுதல் வேண்டும். மிருகங்களைக் கொல்லுதல் என்பது ஒருவர் தமது வாசனா மலத்தைக் கட்டுப்படுத்துதலையும் குறிக்கிறது. காடு என்பது வேண்டத்தகாத எண்ணங்கள் மனதில் அலைந்து திரிவதைக் குறிப்பதாகும். வேடனின் பெயர் சுஸ்வர. அதன் கருத்து இனிய ஸ்வரம் அதாவது இனிய இசை என்பதாகும். இந்த பெயர் எண்ணங்களினதும் பேச்சினதும் தூய்மையை அதாவது மனத் தூய்மையைக் குறிக்கிறது. வேடன் வாரணாசியில் பிறந்து வாழ்ந்தவன். வார என்பது நெற்றி, நாசி என்பது மூக்கு. மூக்கும் நெற்றியும் சந்திக்கும் இடம் வாரணாசியாகும். அந்த இடத்தில் இட, பிங்கள, சுஷம்ன என்ற மூன்று நாடிகள் சந்திக்கின்றன. ஒருவர் தனது மனத்தை அந்த இடத்தில் குவியச் செய்வாராயின் படிப்படியாக அவர் தனது புலன்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றலைப் பெற்றுக் கொள்கிறார்.

வில்வ மரம் முள்ளந் தண்டைக் குறிக்கிறது. வில்வ மரத்தின் இலைகள் விசேட அமைப்பைக் கொண்டுள்ளன. ஒரு தண்டில் மூன்று இலைகள் உள்ளன. அவை முன்னர் குறிப்பிட்ட மூன்று நாடிகளைக் குறிக்கின்றன. மரத்தில் ஏறுதல் என்பது மூலாதாரத்திலிருந்து குண்டலினி சக்தியை ஆக்ஞ சக்கரத்திற்கு ஏற்றுவதைக் குறிக்கின்றது. நித்திரை கொள்ளாது விழித்திருத்தல் என்பது ஒருமைத் தன்மையையும், உள்ளார்ந்த விழிப்பயும் குறிப்பதுடன், ஆன்மிகத்தை விரும்பும் ஒருவர் அடைய வேண்டிய இலக்கு என்பதையும் சுட்டி நிற்கிறது. அவர் ஒரு நிமிடம் கூட அசட்டையாக இருக்க முடியாது. சிவன் என்பவர் நடத்தல், கனவு காணுதல், ஆழ்ந்த நித்திரை கொள்ளுதல் என்ற மூன்று நிலைகளையும் பிரகாசமாக்கி மிக உயர்ந்த உணர்தலைக் குறித்து நிற்கிறார். மூன்று இலைகளைக் கொண்ட வில்வத்தை சிவனுக்கு அளித்தல் என்பது மூன்று நிலைகளையும் கடந்து நான்காவது நிலையாகிய துரிய நிலையை அடைதலைக் குறிக்கிறது. 



இந்தியாவில் வேறுபட்ட மானிலங்களில் சிவராத்திரியை அனுஷ்டிப்பதற்கு வேறு வேறுபட்ட புராணக் கதைகள் கூறப்படுகின்றன. சிவன் பேருழியின் போது முழு உலகையும் அழித்த போது பார்வதி சிவனை வழிபட்டு உலகை மீண்டும் படைக்கும்படியும், அந்நாளில் சிவனை வழிபடுபவர் முத்தியடைய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டதாகவும் ஒரு கதை அமைந்துள்ளது. அக்கதையின் படி தேவியின் வேண்டுகோளை சிவன் ஏற்றுக் கொண்டதாகவும் லிங்கத்தை மனிதர் வழிபடுவதற்காக தேவி கேட்டு கொண்ட இரவுக்கு சிவன் மகாசிவராத்திரி என்று பெயரிட்டதாகவும் அக்கதை கூறிச் செல்கிறது.

சிவராத்திரியன்று இறைவன் படைத்தல் காத்தல், அழித்தல் நடனத்தை ஆடுவதாகவும் எனவே பக்தர்கள் விழித்திருந்து சிவனைப் போற்றி பாடல்கள் வேண்டும் என்று இந்தியாவின் வேறு சில பகுதிகளில் நம்பப்படுகிறது. பாற்கடலில் எழுந்த விஷத்தை சிவன் உலகத்தின் நன்மைக்காக விழுங்கி அந்த விஷம் ஏற்படுத்திய தாக்கத்தால் அந்த இரவில் அவதிப்படுவதாகவும் அதற்காக அவனது உடலைக் குளிர வைக்கும் முயற்சியில் நான்கு யாமங்களும் அபிஷேகம் செய்யப்படுவதாக வேறு சில பகுதிகளில் நம்பப்படுகிறது.

சிவராத்திரி உருவானதைக் குறிக்கும் இவ்வாறான கதைகளுடன் அதன் முக்கியத்துவத்தைக் குறிக்கும் சில கதைகளும் காணப்படுகின்றன. எத்தனை பாவியாக இருந்தாலும் ஒருவர் சிவராத்திரியின் போது இறைவனை வழிபட்டால் அவர் பாவங்கள் அனைத்தும் நீங்கி முத்தி அடைவார் என அவை மிக அதீதமாக அதன் முக்கியத்துவத்தைக் கூறுகின்றன. சிவராத்திரியின் சிறப்பை அதிகரித்துக் காட்டுவதற்காக இந்தக் கதைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை. சிவராத்திரி மகாத்மியத்தில் பின்வரும் கதை கூறப்பட்டுள்ளது. சிந்து என்ற இடத்தை ஆண்ட குஞ்சரன் என்ற மன்னனிடம் ஒரு பிராமண உத்தியோகத்தர் இருந்தார். அவரது மகனின் பெயர் சுகுமாரன். அவன் பிரமண சாதியைச் சேராத ஒரு பெண்ணைத் திருமணம் செய்தது மட்டுமல்ல பிராமணியத்தையும் முற்றாகத் தலை மூழ்கிவிட்டான். ஒருநாள் அவன் தனது மனைவிக்கு ஒரு பூவை வழங்க எண்ணி அதனைப் பெறுவதற்காக சிவன் கோயிலுக்குப் போனான். அன்று மகாசிவராத்திரி. கோயிலில் அதற்குரிய சிறப்பு பூசை நடந்து கொண்டிருந்தது. பூ ஒன்றைப் பெறுவதற்காகக் கோயிலுக்குச் சென்ற சுகுமாரன் தவிர்க்க முடியாத நிலையில் அந்த விழாவில் கலந்து கொண்டான். அவ்வாறு நடந்து சில காலத்தின் பின்னர் அவன் இறந்த போது அவன் தனது சமயத்தையும் தர்மத்தையும் விட்டிருந்ததால் யமனின் தூதர்கள் நரகத்திலிருந்து அவனை அழைத்துச் செல்ல வந்திருந்தார்கள். அதே நேரம் சிவனது தூதர்கள் அவனைக் கைலாசத்ததுக்கு அழைத்துச் செல்ல வந்திருந்தனர். அவன் மனைவிக்குப் பூ பெறுவதற்காக கோயிலுக்குப் போய் சிவராத்திரியில் கலந்து கொண்ட காரணத்தால் சிவ தூதர்கள் யம தூதர்களை வென்று அவனை கைலாசத்திற்கு அழைத்துச் சென்றனர் என்று அந்தக் கதை நிறைவு பெறுகிறது. இன்னொரு கதையின்படி ஒரு பிராமண இளைஞன் அவனது தவறான நடத்தையால் நாடு கடத்தப்பட்டிருந்தான். பசியால் வாடிய அவன் அலைந்து திரிந்து உணவு தேடிய போது ஒரு சிவன் கோயிலில் கடவுளுக்கு நிவேதிக்கப்பட்ட உணவை எடுப்பதற்காக உள்ளே சென்றவன் அங்கிருந்த விளக்கு அணைந்து கொண்டிருந்த வேளை அதனைத் தூண்டி வெளிச்சத்தை அதிகரித்து அதில் நன்கு தெரிந்த உணவை எடுக்க முயன்ற வேளையில் பிடிபட்டான். அன்று சிவராத்திரி தினம். அவனை கோயிலில் ஒரு புறத்தில் தூணில் கட்டி வைத்து விட்டு அக்கோயிலில் சிவராத்திரியை கொண்டாடினார்கள். இரவு முழுதும் விழித்திருந்து வேத மந்திரங்களைக் கேட்டுக் கொண்டிருந்த காரணத்தால் பின்னர் கொல்லப்பட்டதும் அவன் சுவர்க்கத்தை அடைத்தான் என்று அக்கதை நிறைவு பெறுகிறது. சிவராத்திரி மகாத்மியம் சிவராத்திரியின் முக்கியத்துவத்தை அதீத நிலையில் வலியுறுத்துவதற்காக மட்டுமே இவ்வாறான கதைகளைக் கூறியுள்ளது. மற்றும்படி பாபத்தைச் செய்யத் தூண்டுவது அக்கதைகளின் நோக்கமல்ல.

இலங்கையில் திருக்கேதீஸ்வரத்தில் சிவராத்திரி சிறப்பாகக் கொண்டாடப்படுவது போல நாயன்மாரால் பாடப் பெற்ற தலமான ஸ்ரீஷைலத்தில் அது மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தற்போது ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள இத்தலம் இந்தியாவில் உள்ள 12 ஜோதிலிங்கத் தலங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்கந்தபுராணம் ஒரு அத்தியாத்தை இத்தலத்தின் சிறப்பைக் கூற ஒதுக்கியுள்ளது என்பதும், ஆதி சங்கரர் தனது சிவானந்த லகிரியை இத்தலத்திலே பாடினார் என்பதும் இத்தலத்தின்f பெருமையை அதிகரிக்கச் செய்யும் செய்திகள். இக்கோயிலில் மகாசிவராத்திரியின் போது ஏறக்குறைய 100 ஆயிரம் பேர் கலந்து கொள்வதாகக் கூறப்படுகிறது.

விரதம் இருப்பதன் மூலம் காமம் குரோதம் பேரசை போன்ற தீய குணங்களை அகற்றி இறைவன் தனது மனத்தில் குடியேறும் வகையில் மனதைத் தூய்மைப்படுத்தி, மன வைராக்கியம் கொண்டு, இரவு விழிப்பதன் மூலம் புலன்களை அடக்கி ஆன்மாவை இறைவனுக்கு அர்ப்பணித்து உள்ளார்ந்த விழிப்பு நிலையை அடைந்து இறைவனைத் தன்னுள் நிறைய வழிவகுக்கும் சிவராத்திரி, எல்லாத் தரத்தில் உள்ளவர்களையும் அற முறையிலும் ஆன்மிக முறையிலும் ஒன்றுபடுத்துகிறது. இவ்வாறு அது சமூகத்தை ஒன்றுபடுத்துவதுடன் பக்தனுக்கு கடவுளுடன் உள்ள உறவைப் பலப்படுத்துகிறது. அதனால் சிவராத்திரி என்பது மனிதரின் ஆன்மீக வாழ்வில் அதிக முக்கியத்துவம் பெற்ற ஒரு தினம் என்பதில் சந்தேகமில்லை.

No comments:

Post a Comment