கடந்த 25 ஆண்டுகளாக எமது
நாட்டில் உள்ள தமிழ் மக்களின் துயரமோ
முடிவின்றித் தொடர்கிறது. ஒருவித காரணமுமின்றித் தமிழராகப் பிறந்த ஒரே
காரணத்துக்காக வன்னியில் எமது மக்கள் ஆயிரக் கணக்கில் கொல்லப்பட்டார்கள்.
கொன்றவர்கள் ஆணவத்துடன் கொலைகளை நியாயப்படுத்திக்கொண்டு நன்றாக வாழ்கிறார்கள்.
இவற்றைக் காணும் போது ஏற்படும் துயர் மிகுந்த கையாலாகாத நிலையில் கடவுள்
இருக்கிறாரா? என்ற கேள்வி எம் அனைவரது மனங்களிலும் எழுகிறது. தமிழரில் மிகப் பெரும்பான்மையானவர் சமயச்
சூழலில் வளர்ந்தவர்கள். இலங்கையில் கோயில்களுக்குக் குறைவில்லை. பிற்காலத்தில்
கம்யூனிசக் கொள்கைகளால் கவரப்பட்ட மிகச் சிலரைத் தவிர 99 வீதமானவர்கள் சமய
நம்பிக்கை உடையவர்களே. கிராமப்புறங்களில்
குடும்பங்களுக்கென்று தனியான பல கோயில்கள் இருந்தன. டச்சுக்காரர் இலங்கையை ஆண்ட
காலத்தில் இந்துக் கோயில்களை அவர்கள் அழிக்க முற்பட்டபோது தமிழர் கோயில்களில் இருந்த விக்கிரகங்களைப் பாதுகாப்பாகக் கிணற்றில்
போட்டுவிட்டு வீட்டு இறப்பைகளில் சூலாயுதங்களை
வைத்து இரகசிகமாக வழிபட்டு வந்தனர். அத்துடன் விரதத்தின்போது உணவு உண்பதற்காகப்
பயன்படுத்தப்பட்ட வாழையிலைகளை வீட்டுக் கூரைக்குள் செருகி மறைத்து வைத்தனர்.
இறைப்பைகளில் மறைத்து
வைக்கப்பட்ட சூலாயுதங்களே பின்னர் வைரவ கோயில்களாக பரிணமித்தன. மூலை முடுக்குகளில் எல்லாம் வைரவ கோயில்கள் எழுந்ததற்கு இதுவே காரணம். அதே
நேரத்தில் கிணற்றில் போடப்பட்ட விக்கிரகங்கள் பின்னர் எடுக்கப்பட்டு பிரசித்தி
பெற்றிருந்த கோயில்கள் மீண்டும் கட்டி எழுப்பப்பட்டன. கிழக்கில் கண்ணகி
கோயில்களும் மற்றைய பிரசித்தி பெற்ற கோயில்களும் காணப்படுகின்றன. மன்னாரிலும்
திருகோணமலையிலும் பாடல்பெற்ற மிகப்பழைய கோயில்கள் அமைந்துள்ளன. விஜயன் இலங்கையின்
நாற்புறத்திலும் சிவன் கோயில்களைக் கட்டுவித்தான் என்று வரலாறு சொல்கிறது. வடக்கே
நகுலேஸ்வரத்தையும் தெற்கே இலங்கையின் கீழ்
எல்லையில் தேவிநுவரை சிவன் கோயிலையும் மேற்கில்
சிலாபத்தில் முனீஸ்வரத்தையும் கிழக்கில் திரிகோணமலையில் திருக்கோணேஸ்வரத்தையும்
கட்டுவித்தான். தமிழ்நாட்டில் நிறைந்திருக்கிற கோயில்கள் பற்றிச் சொல்லவே
வேண்டியதில்லை. தமிழர் புலம்பெயர்ந்த நாடுகளில் எல்லாம் எழுந்துள்ள கோயில்கள் பற்றி நாம் அறிவோம்.
சுருக்கமாகச் சொல்வதானால் தமிழர் கோயிலில்லாத ஊரில் குடியிருக்காதவர்கள். சமயம்
சார்ந்து கடவுளில் நம்பிக்கை
கொண்டு காலம் காலமாக வாழ்ந்து வருகிறவர்கள். கடவுள் பற்றியும் கடவுள் நம்பிக்கை
பற்றியும் நாம் சிறிது சிந்திக்கலாம்.
எம்மில்
பெரும்பான்மையானவர் சிறுவயது முதல் கடவுள் நம்பிக்கையுடன் வளர்க்கப்படுகிறோம்.
நல்ல பிள்ளையாக இருக்கவேண்டும், நன்றாகப் படிக்க வேண்டும் கை நிறைய உழைக்க வேண்டும்
என்றெல்லாம் பெற்றோர் கூறியது பலருக்கு நினைவிருக்கலாம். தவறு செய்தால் கடவுள்
கோபிப்பார் என்று வேறு சொல்லி கடவுளுக்கு நாம் பயப்படவேண்டும் என்ற மனநிலையைச்
சிறுவயதிலேயே பெற்றோர் ஏற்படுத்தி விடுகிறார்கள். தமிழ் நாட்டிலே பொய் சொன்னால்
சாமி கண்ணைக் குத்தும் என்ற கூறிப் பிள்ளைகளை அச்சமூட்டி வளர்க்கிறார்கள். இதனால்
கடவுள் என்ற பயம் வளர்ந்த பின்னரும் பலருக்கு இருக்கிறது. அது ஒரு வகையில் பெரிய
தவறுகளைச் செய்யவிடாது மனிதர்களைத் தடுக்கின்றபோதும் மனிதர்களை சுயநலமில்லாது, அன்பு வழியில்
எடுத்துச் செல்வதில்லை. கடவுள் அன்பானவர், அவரோடு நாம் ஒரு
நண்பர் போல எங்கள் இன்பதுன்பங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். நாம் எல்லோருடனும்
அன்புடனும் நேர்மையுடனும் நடப்பதையே கடவுள் விரும்புவார் என்று பிள்ளைகளுக்குப் பல
பெற்றோர் சொல்லிக் கொடுப்பதில்லை.
மனித இனம் தோன்றிய நாள்
முதற் கொண்டு மனிதர்களுக்கு எழும் ஒரு முக்கிய வினா கடவுள் என்று ஒருவர் இந்தப்
பிரபஞ்சத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் எங்கேயாவது இருக்கிறாரா? அல்லது எல்லாமே
சுயமாகத் தோன்றி இயங்குகின்றனவா? என்பதாகும். இது தொடர்பாக எழும் மற்றைய
கேள்விகள் - நாம் ஒரு தற்செயல் நிகழ்ச்சியால் உருவானவர்களா? நாம் எங்கிருந்து
வந்தோம்? ஏன் இங்கே இருக்கிறோம்? எங்கே போகப்
போகிறோம்? எங்கள் வாழ்வுக்கு ஏதாவது அர்த்தமும் நோக்கமும் இருக்கிறதா? அதில் கடவுளின் பங்கு என்ன? என்பனவாகும். இவை
எல்fலா வினாக்களுமே ஒன்றோடு ஒன்று தொடர்பானவை. இவை இந்த உலகில்
எமது இருப்பையும் அதற்கு ஆதார சக்தியாக இருப்பது பற்றியதுமான வினாக்களாகும்.
கடவுள் என்று ஒருவர் இல்லை என்று நாம் எண்ணினால் ஏனைய கேள்விகளும் கருத்திழந்து
போகக்கூடும்.
கடவுள் இருக்கிறார்
என்றால் அதனை எவ்வாறு நிரூபிக்கமுடியும்? என்பது அடுத்து
எழும் வினா. இதற்கான விடையை இன்று வரை மனித இனம் முற்று முழுதாகக் கண்டறிந்து
விட்டதாகக் கூற முடியாது. பெரும்பாலான சமயங்கள் கடவுள் இப்படித்தான் இருக்கிறார்
என்று தத்தமக்கேற்ற வகையில் கூறுகின்றனவே தவிர இவர்தான் நாம் வழிபடும் கடவுள்
என்று அவரது உள்ளதன்மையை நிரூபிக்க முடியாத நிலை பெரும்பாலும் காணப்படுகிறது.
இதற்குக் காரணம் கடவுளை ஒருவரும் கண்ணால் காண்டதில்லை. முன்னோர் எழுதி வைத்த
குறிப்புக்களின்
அடிப்படையிலும் தமக்கு ஏற்படும் விவரிக்க முடியாத அல்லது அர்த்தம் கூற முடியாத
நிகழ்ச்சிகளாலும் மனித இனம் சந்ததி சந்ததியாகக் கடவுள் இருப்பதாக நம்பி வருகிறது.
கடவுள் ஒன்று உள்ளது என்று நம்புகிறவர்கள் பூமியின் அமைப்பாலும், அது
பிரபஞ்சத்தில் அமைந்திருக்கும் முறையாலும், வேறு தர்க்க
வாதங்களாலும் கடவுளின் இருப்பை
நிரூபிக்க முயல்வது வழக்கம். அதாவது தூரத்தில் புகையைக் காணுப்போது நாம் தீயைக்
காணாவிடினும் அங்கே தீ எரிகிறது என்று தெரிந்து கொள்கிறோம். அது போலவே
பிரபஞ்சத்தில் உள்ள சில விஷயங்களைப் பார்த்து கடவுளின் இருப்பைத் தெரிந்து கொள்வதாகும். Biogenesis என்ற விஞ்ஞான
விதியின்படி உயிருள்ளவை உயிருள்ள ஒன்றாலேயே தோற்றுவிக்க முடியும். அதாவது உயிரற்ற
ஒன்றால் உயிருள்ளதை உருவாக்க முடியாது. எம்மைச் சுற்றி உயிருள்ள ஜீவராசிகள்
கோடிக்கணக்காக உள்ளன. எனவே, அவை
தோன்றுவதற்கு மூல ஆதாரமாக ஓர் உயிர் இருக்க வேண்டும். அதுதான் கடவுள். நுட்பமான
ஒரு சிற்பத்திற்கு அதை உருவாக்கிய சிற்பி
ஒருவர் இருப்பதைப் போல மிக நுட்பமாக சிக்கல் நிறைந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த
உலகத்தை உருவாக்கிய ஒருவரும்
இருக்க வேண்டும்.
விஞ்ஞானிகள்
பிரபஞ்சத்தின் 47 இயல்புகளை அடையாளம் கண்டுள்ளனர். அதில் ஒன்று ஈர்ப்புச் சக்தி.
கிரகங்கள் தமது போக்கில் இருந்து மிகச் சிறிதளவு அகன்றிருந்தாலும் பூமியில்
உயிரினம் வாழ்வது கடினமாகிப் போயிருக்கும். இதனால் இவற்றைக் கண்காணிக்கும் ஒருவர்
அதாவது கடவுள் இருக்க வேண்டும். விஞ்ஞானரீதியாக சூனியத்திலிருந்து ஒன்றும் உருவாக
முடியாது. பேரதிர்வான big bang இல் இருந்து இந்த
உலகம் உருவானதானால் அதை நடத்தியவர் யார்? உலகில் உள்ள
எல்லாம் ஒரு ஒழுங்கு முறையில் நடப்பது கடவுள் என்ற ஒருவரால்தான் என்கின்றனர்
கடவுளை நம்புவோர். கடவுளை நம்பாமை என்பது எதிர்காலத்துக்கான நம்பிக்கையைத்
தருவதில்லை. கடவுள் ஒருவரே வாழ்விற்கு ஒரு நோக்கத்தையும் நாளைக்கான
நம்பிக்கையையும் தருகிறார். Holocaust தொடக்கம் இன்று வரை கோடிக்கணக்கான மக்கள்
போரால் இறந்துள்ளனர் இன்றும் இறக்கின்றனர். இது கடவுள் இல்லை என்போர் உருவாக்கிய
பலவானே வாழமுடியும் (survival of the fittest) என்ற கோட்பாடாகும். இதில் சரி பிழை என்பது
கிடையாது. கடவுளை நம்பாவிடின் இவ்வாறு நடக்கும். மனிதன் பிறக்கும் போது கடவுளiன்
நல்லியல்புகளுடன் பிறக்கிறான். பின்னர் கடவுளை நம்பாது வேறு கோட்பாடுகளால்
செல்வாக்குறும்போது சரி பிழைகளின் வேறுபாடுகளைப்
புரிந்து கொள்ளத் தவறுகிறான். இவ்வாறு கடவுள் இருக்கிறார் என்று கூறுபவர்கள்
வாதிக்கின்றனர்.
மேலும் மற்றைய
கிரகங்களுடன் ஒப்பிடும்போது பூமியின் அளவு, அது
அமைந்திருக்கும் நிலை என்பன மனித வாழ்வுக்கு ஏற்ப கனகச்சிதமாக உள்ளது. பூமியில்
உள்ள அனைத்து வாயுக்களும் சூழலும் சமநிலையைப் பேணும் வண்ணமாக உருவாக்கப்பட்டுள்ளன.
சூரியனும் பூமிக்குப் பயனளிக்கும் வகையில்
சரியான தொலைவில் உள்ளது. சிறிது விலகியிருந்தாலும் உயிரினங்கள் குளிரில் விறைத்து அழிந்திருக்கும் என்றும் இன்னும்
நெருங்கியிருந்தால் வெப்பத்தால் அழிந்திருக்கும் என்றும் கூறப்படுகிறது. அது போல
சந்திரனும் சரியான அளவில் சரியான தொலைவில் அமைந்திருப்பதாக கூறப்படுகிறது. நிறமற்ற
மணமற்ற சுவையற்ற நீர் போதியளவு உள்ளது. உடலில் உள்ள நீர் எந்தச் சூழ்நிலையிலும்
வாழ்வதற்கு உதவுகிறது. மனித உடலினதும் மூளையினதும் அமைப்பும் மிகச் சிக்கலானது.
இவ்வளவு நுணுக்கங்களுடன் கூடிய ஒன்று எவ்வாறு சுயமாக உருவாக முடியும்? எனவே இவற்றைப்
படைத்தவன் ஒருவன் உள்ளான் என சமயங்கள் வற்புறுத்துகின்றன.
எவ்வாறு ஒருவர் எந்தக்
கடவுளை வழிபடுகிறார்? ஒருவர் எந்தச் சமயத்தைச் சேர்ந்த
பெற்றோருக்குப் பிறக்கிறாரோ அந்த சமயத்தைச் சார்ந்து அதற்குரிய கடவுளை வழிபட்டு
வாழ்வதே மிகப் பெரும்பான்மையாக இருக்கிறது. மிகச் சிலர் அந்தச் சமயத்தில்
திருப்தியடையாது வேறு சமயங்களுக்கு மாறி வருவதையும் நாம் கண்டு வருகிறோம். தியானம்
முக்கியமடைந்து வருவதால் அதனை அடிப்படையாகக் கொண்ட சமயங்களுக்குப் பலர் மாறுவதும்
காணப்படுகிறது. மேலை நாடுகளiல் பலர் சமயம் சாராதவர்களாக இருந்து
வருகிறார்கள்.
பெரும்பான்மையான மக்கள்
தமக்கு மேற்பட்ட சக்தி ஒன்று இருக்கிறது என்பதை நம்பி வருகின்றனர். வரலாறு
முழுவதையும் பார்த்தோமானால் எல்லாப் பண்பாடுகளிலும் உள்ள மக்கள் கடவுள் இருக்கிறார் என்பதை ஏற்றுக்
கொண்டுள்ளனர். மானிடவியலாளர்கள் மிகப் பழைய சிறு குழுக்கள் கூட சமய நம்பிக்கை
கொண்டவராக இருந்துள்ளானர் என்று சுட்டிக் காட்டியுள்ளனர். பல கடவுளரை இன்று
ஏற்றுக் கொள்வோர் கூட ஆரம்பத்தில் படைத்தவன் ஒருவனே என்று ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இவ்வாறு உலகத்தில் உள்ள சமயங்களில் மிகப்
பெரும்பான்மையானவை கடவுள் ஒருவரை ஏற்றுக் கொள்கின்றன. இந்தியாவில் உருவான சமணம், பௌத்தம் போன்ற, கடவுளை ஏற்றுக்
கொள்ளாத சமயங்களும் இல்லாமல் இல்லை. விஞ்ஞான ரீதியாக கடவுளின் இருப்பை நிரூபிப்பது என்பது முடியாத காரியம். ஏனெனில்
கண்ணால் காண்பதற்கோ அல்லது ஆய்வுகளால் ஆராய்வதற்கோ முடியாத வகையில்
எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவராக இறைவன் உள்ளதாக நம்பப்படுகிறது. மெய்ஞானம்
ஒன்றின் மூலமே கடவுளின் இருப்பை
உணர்ந்து கொள்ள முடியும் என்று சமயவாதிகள் நம்புகிறார்கள். கண்களால் காணாத ஒன்றை
எவ்வாறு நம்புதல் கூடும் என்பதே நாஸ்திகவாதிகளின் அடிப்படை வாதம். கடவுள் உள்ளாரா என்ற கேள்விக்கு இரண்டே
இரண்டு பதில்கள்தான் உள்ளன. ஒன்று ஆம் மற்றது இல்லை என்பதாகும். அஸ்தி என்ற
சமஸ்கிருதச் சொல்லுக்கு உள்ளது என்று பொருள். அஸ்திக்கு முன் ந என்ற எதிர்மறையைக்
குறிக்கும் எழுத்துச் சேரும் போது நாஸ்த்தி என்று அது இல்லை என்பதைக் குறிக்கிறது.
இவ்வாறே கடவுளை நம்புகிறவர் ஆஸ்திகவாதி என்றும் நம்பாதவர் நாஸ்திகவாதி என்றும்
அழைக்கப்படுவது வழக்கமாயிற்று. ஆங்கிலச் சொல்லான atheist என்பது கடவுள்
இல்லை, கடவுள் மறுப்பு, கடவுள் சாராத
என்று பொருள்படும் கிரேக்க சொல்லான atheos என்பதிலிருந்து
உருவானது. ஒரு சமயத்தைச் சார்ந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான சமய அனுபவத்தைப்
பெறுகின்றனர். எனவே கடவுள் உண்டு என்று நம்புவோர் மத்தியிலும் அது பற்றிய கருத்து
மனிதருக்கு மனிதர் மாறுபடுவதாகும். கடவுள் இல்லையென்றோ அல்லது இருக்கின்றது என்றோ
முற்றாக ஏற்காது இது குறித்த தேடுதல் அதிக பயன் தரும் என்று தற்போது பலர்
கருதுகின்றனர்.
மனித இனம் தோன்றிய
காலத்திலிருந்து அது எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட சக்தி ஒன்று இயற்கையை வழி
நடத்துகிறது என்பதை ஏற்றுக் கொண்டது. மனிதன் தன்னால் முடியாத காரியங்கள் பல
இருப்பதை உணர்ந்த போது ஒரு மேலான சக்தி இருப்பதை உணர்ந்தான். அதை வழிபடுவதன் மூலம்
அந்த சக்தியைத் தனக்குச் சாதகமாக இயங்கவைக்க முடியும் என்று நம்பினான்.
அவ்வாறே சமயத்தின் தோற்றம் நிகழ்ந்தது.
கிரேக்க சமயத்திலும் சரி, ஆரியர் இந்தியாவிற்குள் புகுந்து கங்கைச் சமவெளியில் குடியேறி வாழ முற்பட்ட போதும் சரி இயற்கை சவாலாக
அமைந்தபோது அதன் ஒவ்வொரு அம்சத்துக்கும் ஒரு கடவுள் பொறுப்பாக இருக்கிறார் என்று
நினைத்து அவர்களுக்குப் பெயர்களும் இட்டனர். இந்தியாவுக்குள் நுழைந்த ஆரியர் மந்தை
மேய்ப்பதற்கும் தமது எதிரிகளுடன் போராடுவதற்குத் தேவையான ஒரு வீரர் நிறைந்த
சமுதாயத்தை உருவாக்குவதற்கும் தம்மிலும் மேலான சக்தியின் உதவியை நாடினர். இதுவே
வேத சமயத்தின் தோற்றுவாய். தீமை செய்யும் இயற்கையின் அம்சங்களை விலகிச் செல்லும்
படியும் நன்மை பயப்பவற்றை வந்து நலம் பயக்கும்படியும் வழிபட்டனர். தெய்வங்களை
மூன்றாக வகுத்தனர். விண்ணில் உள்ள தெய்வங்கள், இடைவெளியில் உள்ளவை, நிலத்தில்
உள்ளவை. இந்திரனை அவர்களின் எதிரிகளுடன் போரிட்டு அழிக்க
வல்ல வீரமிக்கவனாக ஆரியர் கண்டனர். இருக்கு வேதத்தின் கால் பகுதி இவனை நோக்கிய
வழிபாடாகவே அமைந்துள்ளதைக் காணலாம்.
நான் உன்னை அவி சொரிந்து
வழிபடுகிறேன் எனக்கு நல்ல வளமுள்ள மந்தையையும் வீரரான மைந்தரையும் தா என்பதே
பொதுவான வேத வழிபாடாக அமைந்தது. அவர்கள் அக்கினியில் சொரியும் அவியை அவ்வக்கினி
உரிய தேவர்களிடம் கொண்டு போய்
சேர்ப்பதாக நம்பினர். இடி மின்னல் போன்றவற்றுடன் தொடர்புடைய தெய்வமாக கருதப்பட்ட
உருத்திரனை அருகில் வரவேண்டாம் என்பதே பிரார்த்தனையாக இருந்தது. எனவே மிக
ஆரம்பத்திலிருந்தே பயமும் தேவையுமே மனிதனை இறைவனை நோக்க வைத்தது. இன்று வரை இதுவே
மனித இனத்தின் கடவுள் பற்றிய எண்ணத்துக்கும் வழிபாட்டிற்கும் அத்திவாரமாக
அமைந்திருக்கிறது. இதனாலேயே இந்து சமயத்தில் ஆகம முறைப்படி அமைக்கப்பட்ட கோவில்களில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள தெய்வ விக்கிரகங்களின் இரு கரங்கள் வரத
அபய முத்திரைகளைக் காட்டுவனவாக அமைந்துள்ளன. வரத முத்திரை கேட்பதைத் தருவேன்
என்பதைக் குறிக்க அபய முத்திரை பயம் வேண்டாம் நான் துணையிருப்பேன் என்பதைக்
காட்டுகின்றது. மனிதர் காலத்துக்குக் காலம் தமது தேவைகளுக்கு ஏற்ப தெய்வங்களையும்
அதன் இயல்புகளையும் அதனை வழிபடும் முறையைகளையும் உருவாக்கிக் கொண்டனர் என்று
ஓரளவில் கூறலாம். இதற்கு இந்து சமயம் நல்ல சான்றாக அமைந்திருக்கிறது.
வேதங்களில் பல தெய்வங்கள் வழிபடப்பட்ட போதும் தேவைக்கேற்ப ஒரு
தெய்வமே முக்கியத்துவப்படுத்தப்பட்டது. அதாவது மழை வேண்டி வருணனை வழிபட்ட போது
அவனே ஒரு தெய்வம் உள்ளான் என்பது போல சகல புகழ் மொழிகளும் பிரார்த்தனைகளும் அவனை
முதன்மைப்படுத்தும் வகையில் செலுத்தப்பட்டது. பின் தேவை மாறும் போது
அத்தேவைக்குரிய தெய்வம் முதன்மைப்படுத்தப்பட்டது. இது அடிப்படையில் ஒரு தெய்வமே
உள்ளது என்ற கருத்துக்கு எடுத்துச் சென்றது. இருக்கு வேதத்திலேயே, ஏகம் சத் விப்ரா
பகுதா வதந்தி அதாவது உள்ளது ஒரு பொருள் அது பல பெயர்களால் அழைக்கப்படுகிறது என்று
கூறும் பாடல் உள்ளது.
ஒரு காலத்தில் முதன்மை
பெற்ற தெய்வம் தேவைகளும் சூழ்நிலைகளும் மாறும் போது பின்னணிக்குத் தள்ளப்படுவதையும்
வேறு ஒன்று முதன்மை பெறுவதையும் இந்து சமயத்தில் பல சந்தர்ப்பங்களில் காண முடிந்தது. இருக்கு வேத காலத்தில் முதன்மை பெற்ற
இந்திரன் பின்னர் இந்திரலோகத்துக்குத் தலைவனாகிப் பின் ஒரு திக்கை மட்டும்
பரிபாலிக்கும் திக்கு பாலகன் என்ற வகையில் பின்னணிக்குச் சென்றதைக் காணலாம். அது
போல தமிழ்நாட்டில் போரை எதிர்பார்த்த கட்டங்களில் எல்லாம் முருகன் முதன்மைத் தெய்வமாக வழிபடப்பட்டதைக்
காணலாம். இந்த முறையிலேயே ஒரு புதிய சமயம் ஒரு இடத்தில் பரவும் போது அது அந்த
இடத்திலுள்ள சமயங்களன் முக்கிய அம்சங்களை உள்வாங்கி நிலை பெற்றதை வரலாற்றில் பல
நாடுகளல் காணலாம். இதனால் கடவுள் மாறுவார் ஆனால் வழிபடும் முறைகள் பெரும்பாலும்
அப்படியே இருக்கும். இது சீனாவில் பௌத்தம் பரவியபோதும் நடந்தது. தமிழ் நாட்டில்
கிறீஸ்தவம் பரவியபோதும் நடைபெற்றது. மக்கள் ஏற்கெனவே அறிந்திருக்கும் சொற்களில், கருத்துக்களில் புதிய சமயக் கருத்துக்களை அறிமுகப்படுத்துவது எளiது என்று
கருதியதே இதற்குக் காரணம்.
எளிமையாக இருந்த கடவுள் பற்றிய கருத்து மனித அறிவு முன்னேற
அதனால் சமயம் வளர சிக்கலடைந்தது. தத்துவ முறைகள் பல தோன்றின. இதற்கு இன்னொரு
காரணம் உள்ளது. இந்தியாவில் தோன்றி வளர்ந்த சமணமும் பௌத்தமும் தர்க்க வாதங்களால்
தமது கருத்துக்களை முன் வைக்கவே இந்து மதமும் தனக்கென தத்துவ சிந்தனைகளை
வளர்த்துக் கொள்ள வேண்டியதாயிற்று. வேதாந்தம் அதன் உட்பிரிவுகள், சைவ சித்தாந்தம் அதன் பல்வேறு பிரிவுகள் என
இந்து சமயத்தில் பல தத்துவ முறைகள் தோன்றின. இவற்றில் மனித உயிர் கடவுளை இறுதியில்
அடைவதற்குப் போக வேண்டிய வழியும் அதில் உள்ள தடைகள் பற்றியும் பேசப்பட்டது. இதனால்
கண்ணால் காண முடியாத கடவுளும் ஆன்மாவும் அழிவற்றவை ஏனைய அனைத்தும் மாயையால் ஆனவை
எனவே அழியும் தன்மை உள்ளவை என்ற கருத்து சைவசித்தாந்தத்தால் முன் வைக்கப்பட்டது.
இந்தியாவில் தோன்றிய
போதும் சமண பௌத்தம் இரண்டும் அடிப்படையில் கடவுளை ஏற்றுக் கொள்ளாத சமயங்கள்.
சீடர்கள் கடவுள் பற்றிக் கேட்டதற்கு புத்தர் மௌனம் சாதித்ததாகக் கூறப்படுகிறது.
பௌத்தம் அநாத்மவாதம் பேசுகிறது. அதாவது அது ஆன்மாக்கள் நிரந்தரமாக உள்ளன என்பதை
ஏற்றுக் கொள்ளவில்லை. ஆயினும் பௌத்தம் புத்தரைத் தெய்வமாக்கி தன்னைச் சாதாரண
மக்கள் மத்தியில் நிலை நிறுத்திக் கொண்டது. சமணம் அவ்வாறு ஏற்றுக் கொள்ளாததால்
தனது செல்வாக்கைப் பெருமளவில் பின்னர் இழக்க வேண்டி நேர்ந்தது. பௌத்த சமயம் கடவுளை
ஏற்றுக் கொள்ளாத நிலை பற்றி பல வருடங்களின் முன்
போப்பாண்டவர் கூறிய கருத்துக்கு இலங்கையில் உள்ள பௌத்த பிக்குகள் எதிர் வாதம்
செய்தமை பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். நல்ல இயல்புகளின் மொத்த உருவமான கடவுளை ஏற்காத சமயத்தால் மக்களுக்கு அதிக
நன்மைகள் கிடைக்க முடியாது என்பதே போப்பாண்டவர் கூறிய விஷயம். அவர் கூறியதில் பல
உண்மைகள் அடங்கியிருக்கின்றன. கடவுளை வணங்குவது சாதாரண மக்களுக்கு பெரும் மனச்
சாந்தியை வழங்குவது போக, கடவுளை நோக்கிய பயணத்தில் அவருக்குள்ள
நல்லியல்புகளை ஏற்று தம்மை நல்லவராக்குவதற்கு கடவுள் கொள்கை வழி வகுக்கிறது. போட்டி
நிறைந்த அல்லது தேவைகள் நிறைந்த உலகில் சிறப்பாக மூன்றாம் உலக நாடுகளiல் கடவுள்
நம்பிக்கை வாழ்வதற்கு ஒரு நோக்கத்தை வழங்குகிறது.
இதையே வேறு வகையில் 1934 ஆண்டில் வெளிவந்த மணிக்கொடி பத்திரிகையில் தனது கட்டுரை ஒன்றில் புதுமைப்பித்தன்
பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
இந்த கடவுள் விஷயம் ரொம்ப
சுவாரஸ்யமானது. அது தனி மனிதனுக்கு ஒரு தைரியத்தை கொடுக்கிறது, சமூகத்திற்கு ஒரு
சக்தி கொடுப்பது போல். நாஸ்திகம் தர்க்கத்தில் நிஜமாக இருக்கலாம். அது
சுவாரஸ்யமற்றது. வாழ்க்கையில் ஒரு பிடிப்பை ஏற்படுத்த முடியாதது. அது தனிமனிதனுக்கு, அதாவது
விதிவிலக்கான தனிமனிதனுக்கு, சாந்தியை அளிக்கலாம். ஆனால் ரசனையற்றது, சுவையற்றது.
அதனால்தான் ஜைன மதம் அழிந்தது. வாழ்க்கையில் ஒரு வெறி ஏற்பட்டால்தான் பிடிப்புடன்
முன்னேறி வாழ முடியும். அதைச் சமயம் கொடுக்கிறது.
சில வருடங்களின் முன்னர் காலச்சுவடு பத்திரிகையின் அந்த வருடத்திற்கான
செப்ரெம்பர் ஒக்ரோபர் இதழில் ஜெயந்த் நார்லிகர் என்ற இந்திய விஞ்ஞானி ஒருவரின்
பேட்டி ஒன்றைப் படித்தேன். அவர் கணிதவியலில் கேம்பிறிஜ் பல்கலைக்கழகத்தில் MA பட்டம் பெற்று
அங்கு 1963 - 1972 வரை கடமையாற்றியவர். பின்னர் Inter-University Centre
for Astronomy and Astro Physics என்ற இந்திய நிறுவனத்தில் இயக்குனராக
இருந்தார். அவரிடம் கடவுள் நம்பிக்கையைப் பற்றிக் கேட்கப்பட்ட கேள்விக்கு மிக
விரிவாக பதில் அளித்திருந்தார்.
அதன் சாரம் என்னவெனில் பல்வேறு மதங்களைச் சார்ந்த ஞானிகள் கடவுள் என்று உணர்ந்தது
அறிவியல் பெற்றுள்ள கருதுகோள்களிலிருந்து
நிச்சயம் மாறுபட்டது என்று கூறும் இவர் விஞ்ஞானி என்ற முறையில் தான் இதற்கு விடை
அளிப்பது
சாத்தியமற்றது என்கிறார். அதே நேரம் எமது அனுபவங்கள் எல்லாவற்றையும் அறிவியல்
உண்மைகளின்
ஒழுங்கமைவுக்குள் பொருத்திக் குறுக்கிவிட முடியாது என்று குறிப்பிட்டு
ரவீந்திரநாத் தாகூரின் ஓர் அனுபவத்தையும் தந்துள்ளார். மழை
பெய்கிறது இலைகள் நடுங்குகின்றன என்ற வாக்கியத்தைச் சிறுவயதில் கேட்டபோது திடீரென
புது உலகைக் கண்டுவிட்டது போன்ற உணர்ச்சி தாகூருக்கு ஏற்பட்டதாகவும் வாழ்வில் கண்ட
நிகழ்ச்சிகள் திடீரென ஒன்றோடொன்று தொடர்புற்று உண்மை ஒளi பெற்று
விளங்கியதாகவும், எல்லாப் பொருள்களும் எல்லையில்லாத பெருங்கடல்
போன்ற ஒன்றோடு சம்பந்தப்பட்டதாக தௌிவாக
உணர்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். கடவுளின் இருப்பை
உணர்ந்ததையே தாகூர் இவ்வாறு கூறியுள்ளார்.
மிகச் சிறந்த பௌதிக
விஞ்ஞானி ஒருவர் இந்தப் பிரபஞ்சத்தில் கடவுள் இருக்கிறார் என்று நம்புவதற்கான
சன்றுகள் இப்போது தென்படவில்லை என்றும் அதே நேரம் விஞ்ஞானிகளால் இன்னும் அறிய
முடியாத விஷயங்கள் பிரபஞ்சத்தில் நிறைய இருக்கின்றன என்றும் குறிப்பிட்டிருந்தார்.
விஞ்ஞானிகள் எல்லோரும் கடவுள் இல்லை என்று கூறுவதில்லை என்றும் அவர்
குறிப்பிட்டிருந்தார். 40 வீதமான விஞ்ஞானிகள் கடவுளை நம்புவதாக ஒரு கணிப்பீடு
சொல்கிறது. கடவுளை நம்பாத நாடு என்று 1967 இல் உத்தியோகபூர்வமாக அறிவித்த ஒரே நாடு
(Albania) அல்பேனியாவாகும். கொம்யூனிச நாடுகள் கடவுளை ஏற்காத போதும்
தம்மை அவ்வாறு அறிவித்துக் கொண்டதில்லை. ஏன் ரஷ்யாவிலிருந்து வெளியேறிய Stalin னின் மகளான Svetlana வைக் கேட்டபோது
ஒருவரின் இதயத்தில் கடவுள் இல்லாது இருப்பது முடியாத காரியம் என்று பதில்
உரைத்திருந்ததாக ஒரு விவரம் சொல்கிறது. ஒரு கட்டத்தில் லண்டனில் உள்ள பேருந்துகளில், உண்மையில் கடவுள் இல்லை. கவலையை விட்டு வாழ்வை
அனுபவியுங்கள் (there's probably no God. Now stop worrying and enjoy your
life.)
என்ற வாசகம்
எழுதப்பட்டிருந்தது. The God Delusion
என்ற நூலை
எழுதியவரும் கடவுளை நம்பாதவருமான பேராசிரியர் Richard Dawkins என்பவரும் The
British Humanist Association என்ற அமைப்பும் இந்த விளம்பரத்துக்குப் பணம்
கொடுத்திருந்தன. கடவுள் என்பது வேறெதுவுமல்ல மனிதரின் வெறும் கற்பனையே என்று
இவர்கள் குறிப்பிட்டுள்ளனர். நான்கு வாரங்கள் 30 பேருந்துகளில் இந்த விளம்பரம் வந்தன. இது அந்த பேருந்துகளில் சென்ற கடவுளை நம்புவோரது மனங்களை நிச்சயம்
புண்படுத்தியிருக்கும். மனிதன் கஷ்டம் வரும்போது கடவுளை நாடுகிறான். விரக்தி வரும்
போது கடவுள் இல்லை என்கிறான்.
பல வருடங்களின் முன்னர் இந்தியாவில் ஆய்வுக்காக ஒரு பலு}ன்
பூமியிலிருந்து 41 கிலோ மீற்றர் மேலே விடப்பட்டது. இது விமானங்கள் பறப்பதற்கும்
மேலே உள்ள வெளி. இங்கு பெறப்பட்ட
தகவல்கள் பலவித ஊகங்களுக்கு இடமளித்தது. பூமியில்
உயிரினங்கள் உருவாவதற்குக் காரணமாக அமைந்த பக்ரீரியாக்களை ஒத்த பக்ரீரியாக்கள்
அங்கே பெறப்பட்டன. அவை பூமியில் இருந்து மேலே கிளம்பிச் சென்றவையல்ல. அவை பூமியை
அடையாததற்கு காரணம் இடையில் உள்ள சூழலின் தன்மை தடையாக அமைந்துள்ளது என்று
குறிப்பிடப்பட்டது. முன்னர் பூமியை வந்தடைந்தவையும், தற்போது பலு}னால் பெறப்பட்ட
பக்ரீரியாக்களும் மேலிருந்து வந்த வால்வெள்ளிகளால் சொரியப்பட்டவை என நம்புவதற்கு இடம் அளிப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். சில ஆண்டுகளுக்கு
முன்னர் SBS தொலைக்காட்சியில்
ஓர் ஆவணப்படம் பார்த்தேன். அதில் வெறுமையாக இருந்த புவியின் மேற்றளத்தில் எவ்வாறு நீர்
மற்றும் உயிர்கள் வந்தன என்று காட்டப்பட்டது. வால் வெள்ளிகள் பூமின் மேற்றளத்தில் வந்து குத்தின. அந்த வால்வெள்ளிகளின் வெட்டு
முகத்தைக் காட்டினார்கள். அவற்றில் பனிக்கட்டிகளாக ஏராளமான நீர் இருந்தன. நடுவில்
ஒரு பேழை போன்ற ஒன்றில் உயிர்கள் உருவான பக்ரீரியாக்கள் இருப்பதாகக் கூறப்பட்டது.
ஆயினும் இது பற்றிய ஆய்வில் இன்னும் நெடுந் தொலைவு போகவேண்டியுள்ளது.
மனிதன் கடவுளுடன்
கொள்ளும் உறவுக்கு அடிப்படை அமைப்பது பிரார்த்தனை. பல்வேறு சமயங்களில் பல்வேறு முறைகளில் வழிபாட்டு
முறைகள் அமைந்திருந்தபோதும் அடிப்படையில் பக்தனையும் கடவுளையும் இணைப்பது
பிரார்த்தனையே. இதனாலேயே ஐக்கிய நாடுகள் சபை மார்ச் மாதம் ஆறாம் திகதியை உலக
பிரார்த்தனை தினமாக அமைத்திருக்கிறது. ஒன்றாகப் பிரார்த்திக்கும் குடும்பம் ஒன்றாக
இருக்கும் என்பது அடிக்கடி சொல்லப்படுவது ஒன்றாகும். இது குறித்துச் சுவையான சில
தகவல்களைத் தருகிறது Stephanie Dowrick எழுதியுள்ள Why Pray? என்ற
தலைப்பிலமைந்த சிறு கட்டுரை. அதன் சாரத்தை இங்கு தருகிறேன். உண்மையில் பிரார்த்தனை
மனிதரை இணைக்கும் ஒரு சங்கிலி. பிரார்த்னையில் குறிப்பிடக்கூடிய வகையில் என்ன
இருக்கிறது? மனித வரலாற்றிலும் அனுபவங்களிலும் பிரார்த்தனை சீரான ஒரு பகுதியாக அமைந்துள்ளபோதும் எமது
வாழ்வுக்கு ஒரு புனித பரிமாணத்தைத் தருவதும் எமக்கு அப்பால் ஒரு ஆன்மிக சக்தியுடன்
உறவு ஏற்படுத்த உதவுவதுமே பிரார்த்தனையின் அடிப்படையாகும். கடவுளை ஏற்றுக்
கொள்ளும் சமயங்களில் இந்த சக்தி
கடவுள் எனப்படுகிறது. இஸ்லாமிய சமயத்தில் தினமும் 5 தடவைகள் செய்யப்படும் தொழுகை
நம்பிக்கையுடையோரது வாழ்வை உருப்படுத்துகிறது. ஜூத சமயிகள் நாளுக்கு மூன்று
தடவைகள் பிரார்த்திக்கிறார்கள். கிறீத்தவர்கள் குறைந்தது நாளின் ஆரம்பத்திலும் முடிவிலும் பிரார்த்திக்கிறார்கள். கடவுளை
நம்பாத பௌத்தர்களும் மிகுந்த பக்தியுடன் பிரார்த்தனை செய்கிறார்கள். மிகப் பிரபலியமான
அன்பும் இரக்கமும் கொண்ட மெத்தா ((Metta) பிராத்தனையான
நாம் அனைவரும் நலமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பபோமாக (May we all
be well and happy) என்று மற்றவரில் கரிசனையையும் அன்பையும் பரப்புகிறது.
இந்துசமயக் கோயில்களில் பூசையின்
பின்னர் நடைபெறும் பிரார்த்தனையின் இறுதியில் லோகா சமஸ்தா சுகினோ பவந்து அதாவது
உலகத்தில் உள்ள அனைவரும் சுகமாக மகிழ்ச்சியாக இருக்கட்டும் என்று கூறப்படுகிறது.
கூட்டுப் பிரார்த்தனையின் இறுதியில் இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க என்று கூறுவதும்
மனித இனத்தில் அன்பு கொள்ளும் ஒரு பிரார்த்தனையே. கடவுளை நம்பாதவர்களும் கஷ்டமான
பொழுதுகளில் கடவுளை
உதவிக்காக அழைக்கிறார்கள். தமது அழைப்புக்கு கடவுள் செவிசாய்க்காத நேரத்தில்
அவரைக் குற்றஞ்சாட்டுகிறார்கள். உதவிக்கு அழைப்பதும் பின் குற்றஞ்சாட்டுவதும் எமது
உள்ளணர்வில் இணைந்திருக்கிறது.
மனிதர்கள் எவ்வாறு பிரார்த்திக்கிறார்கள்
எதற்காகப் பிரார்த்திக்கிறார்கள் என்பது அவர்களின் உள்ளே உள்ள கடவுளின் உருவின்
பிரதிபலிப்பாகவே அமைந்திருக்கிறது. ஒருவர் தனக்காகவும் தனது குடும்பத்துக்காகவும்
மட்டும் பிரார்த்திப்பதும், சமூகத்துக்காகவும் மக்களின் நலனுக்காகவும் பிரார்த்திப்பதும் கடவுளை அவர்கள் எவ்வாறு
உணர்ந்திருக்கிறார்கள் என்பதிலேயே தங்கியிருக்கிறது. பல்வேறு நம்பிக்கைகள் கொண்ட
மனிதர்கள் இணைந்து பிரார்த்திப்பது அவர்களிடேயே ஓர் இயைபை
ஏற்படுத்துவதுடன் மிகவும் மனதைத் தொடும் அனுபவமாகவும் அமையும். கடவுள்
நம்பிக்கையற்றுப் பிரார்த்திப்பது என்பது விரைவில் அலுப்படைந்து போகச் செய்யும்.
பிரார்த்தனை சொல்வதாகலாம், பாடுவதாகலாம் அல்லது மௌனமானதாக இருக்கலாம்.
எதுவாயினும் அது மென்மையானதாகவும், முக்கியமானதாகவும்
வாழ்க்கையை மாற்றுவதாகவும் அமையும்.
ஒரு முதிர்ந்த
பிரார்த்தனை நிறைந்த வாழ்க்கையை உருவாக்குவது என்பது சவாலுக்குரியது. ஆயினும் அது
நாம் எம்மை எவ்வாறு நோக்குகிறோம், கடவுள் எப்படி இருக்க வேண்டும் என்று
விரும்புகிறோம் என்பதை அது நிச்சயம் பிரதிபலிக்கும். நாம் கேட்பதைவிடக் கடவுள்
அதிகமாகச் செய்யவேண்டும் என்று எமக்குள் இருக்கும் குழந்தை அடிக்கடி
விரும்புகிறது. அதே நேரம் நல்ல மனிதர்களுக்கு கஷ்டங்கள் வரக்கூடாது என்றும் நாம்
தொடர்ந்து நம்பி வருகிறோம். அல்லது எமது பண்டைய புனித நூல்கள் கூறுவது போல அன்பு
நிறைந்த கடவுள் மனித விவகாரங்களில் நேரடியாகத்
தலையிடவேண்டும் என்றும் விரும்புகிறோம். பிரார்த்தனைகள் பயனளிக்கின்றபோதும் எதிர்பார்க்கின்ற முறையில் அல்ல. தெய்விக
தலையீடு என்பது மர்மம் நிறைந்ததாகவே இருக்கிறது. எம்மைக் கவலைக்குள் ஆழ்த்தும்
துன்ப விவகாரங்களைக் கடவுள் ஏற்படுத்துவதுமில்லை தீர்ப்பதுமில்லை. சொல்வதைவிட
மௌனமாகக் கேட்பதும் பின் காத்திருப்பதுமே நல்லது. கேட்பதைவிட பிரார்த்தனை எதனைக்
கொடுக்கிறதோ அதை ஏற்றுக் கொள்வதும் நல்லது. ஆயினும் கடவுளைக் கேட்பதை யாரும்
நிறுத்துவதில்லை. பிரார்த்தனை என்பது ஒரு சக்தி. அது பிரார்த்திப்பவருக்கும் அவர்
யாருக்காகப் பிரார்த்தனை செய்கிறாரோ அவருக்கும் மாற்றங்களை ஏற்படுத்தும். அதனால்
மற்றவர்களை, அவர்களது துன்பங்களைக் கவனிக்கிறோம் அந்த துன்பங்கள் தீர
பிரார்த்திக்கிறோம் என்ற நல்லியல்பும் எமக்கு ஏற்படுகிறது. மனிதர்கள் இணைந்து
அமைதி, ஆரோக்கியம், இயைபு, அன்பு
ஆகியவற்றுக்காகப் பிரார்த்திப்பது நல்லது.
பிரார்த்தனை செய்வதன் மூலம்
கடவுளை பிரார்த்தனை செய்பவரை நோக்கித் திருப்ப முடியுமா? முடியுமா
முடியாதா என்பதல்ல. பிரார்த்தனை செய்பவர் மாறுகிறார் அதுவே முக்கியமான விஷயம். St Augustine
உடைய நண்பர்கள்
ஒரு வினாவை அவரின் முன்வைத்தனர். கடவுள் ஏற்கெனவே எமது தேவைகள் பற்றி
அறிந்திருக்கும்போது நாம் விரும்புவதை ஏன் கடவுளிடம் கேட்கவேண்டும்? அதற்கு அவர் அளித்த பதில் - நாம் கடவுளை மாற்றப் பிரார்த்தனை செய்வதில்லை.
ஆனால் எம்மை மாற்றப் பிரார்த்தனை செய்கிறோம். அப்போதுதான் கடவுள் எமக்குத் தருவது
குறித்து நாம் திறந்த மனதுடன் இருப்போம். நாம் கேட்பதைக் கடவுள் தருவதில்லை. ஆனால்
எமக்கு எது நல்லதோ அதனைக் கடவுள் தருகிறார்.
அனைத்துப்
பிரார்த்தனைகளுள் சிறந்ததும் பிரபலியமானதும் அழகானதும் Saint Francis ஆல்
ஏற்றுக்கொள்ளப்பட்டதுமான பிரார்த்தனை பின்வருமாறு அமைகிறது – கடவுளே, உனது அமைதியினைப்
பரப்பும் கருவியாக என்னை மாற்றுவாயாக. எங்கே வெறுப்பு உள்ளதோ அங்கே நான் அன்பை
விதைக்கச் செய்வாயாக. எங்கே காயம் உள்ளதோ அங்கே மன்னிப்பையும், எங்கே சந்தேகம்
இருக்கிறதோ அங்கே உறுதிப்பாட்டையும், எங்கே துன்பம்
இருக்கிறதோ அங்கே நம்பிக்கைகையும், எங்கே துயரம்
இருக்கிறதோ அங்கே மகழ்ச்சியையும், எங்கே இருள் இருக்கிறதோ அங்கே வெளிச்சத்தையும் உருவாக்க என்னைக் கருவியாக்கு. ஓ ஆண்டவனே, தேற்றப்படுதலுக்கான
தேவை இல்லாது நான் மற்றவர்களைத் தேற்ற வேண்டும். புரிந்து கொள்பவருக்குப் பதிலாக
புரிந்து கொள்ளப்பட்டவராக இருக்க வேண்டும். பெறுபவருக்குப் பதிலாகக் கொடுப்பவராக, மன்னிக்கப்படுபவருக்குப்
பதிலாக மன்னிப்பவராக, மீண்டும் நிரந்தரமான வாழ்வில் பிறப்பதற்காக
இறப்பவராக நான் இருக்க வேண்டும்.
இவை மட்டுமல்ல
பிரார்த்தனையால் விளையும் நன்மைகள் குறித்து விஞ்ஞானிகள் பல ஆய்வுகளைச் செய்து
வியத்தகு முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.
1996ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் American Arthritis and Pain Treatment Centre
இல் 60 நோயாளிகளுடன் ஒரு பரிசோதனை ஆரம்பமாகியது. Rheumatoid Arthritis
நோயுள்ளவர்களுக்கு
அவர்களது மூட்டுகளில் ஏற்படும்
வீக்கம் குறைவதை சுலபமாக அளந்து கொள்ளலாம் என்பதாலேயே இவர்களைத் தெரிவு செய்தனர்.
தெரிவு செய்யப்பட்ட நோயாளிகளில் மூன்றில் இரண்டு பகுதியினருக்கு மரபு ரீதியான கிறீஸ்தவ
முறைப்படி நான்கு நாட்கள் அவர்களது உடல்களில் கைகள் வைத்து
பிரார்த்தனை செய்யப்பட்டது. அவர்களில்
அரைப்பகுதியினர் இந்தப் பிரார்த்தனையுடன் தூரத்திலிருந்து செய்யப்படும்
பிரார்த்தனையை 6 மாதங்களுக்குப் பெற்றனர். மிகுதி மூன்றிலொரு பகுதியினர் எந்த
பிரார்த்தனையையும் பெறவில்லை. ஆனால் அனைவரும் சாதாரண மருத்துவக் கவனிப்பைப்
பெற்றிருந்தனர். இந்த ஆய்வின் முழுக் காலமும் நோயாளர்கள் அங்குள்ள வைத்தியரால்
பரிசோதிக்கப்பட்டனர். பரிசோதனை முடிந்தவுடனும்
ஒரு மாதத்தின் பின்னரும், 6, மற்றும் 12
மாதங்களின் பின்னரும்
நோயாளர்களைப் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. சில நோயாளிகள் உடனடி விளைவுகளை கண்டனர். ஒரு நோயாளி பரிசோதனையின் ஆரம்பத்தில் 49 மூட்டுகளில் நோயுற்றிருந்தார். கைகளை நோயாளியின் உடலில் வைத்துச் செய்யப்பட்ட பிராத்தனை நான்கு தடவைகள்
முடிந்தவுடன் அவருக்கு 8 மூட்டுகளில்தான்
நோவிருந்தது. ஆறு மாதங்களின் பின்னர்
அவருக்கு மருந்துகளே வேண்டியிருக்கவில்லை. அந்த ஆய்வை நடத்திய இணைப் பேராசிரியரான Dr Dale Matthews அனைத்து நோயாளiகளும் சாதகமான
பயனைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.
1997 ஆம் ஆண்டு 1,700
பேரில் அமெரிக்காவில் உள்ள Duke University
செய்த ஆய்வில்
சமய ஆராதனைகளில் கலந்து
கொள்பவர்களுக்கு அவ்வாறு கலந்து கொள்ளாதவர்களை விட உறுதியான நோய் எதிர்ப்புச்
சக்தி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அதே நிறுவனம் 2001 ம் ஆண்டு செய்த ஆய்வில் இறைவனிடம் பரிந்து அருள்
வேண்டும் பிரார்த்தனையும் touch therapy யும்
செய்யப்பட்டதில் 120 இதய நோயாளiகளின் நோய்
குணமடைதல் விரைவடைந்திருந்தது. 2002ம் ஆண்டு University of California வில் 6,525
பேரில் செய்த ஆய்வின் படி சமய ஆராதனைகளில் ஒழுங்காகக்
கலந்து கொள்பவர்கள் அவ்வாறு செய்தாதவர்களை விட அதிகளவில் நீண்ட காலம் வாழ்ந்தனர்
என்பது அறியப்பட்டது.
எமது ஆத்மாவைப் பேணுதல்
ஆரோக்கிய வாழ்வின் அத்திவாரம் என்ற நம்பிக்கையை இவ்வாய்வுகள் காட்டுகின்றன.
அவுஸ்ரேலியா சமயம் சாராத நாடானபோதும் இங்குள்ளோரில் 74 வீதமானவர்கள் தாம் மிக
உயர்ந்த சக்தியுடன் தொடர்பு கொண்டுள்ளதாகத் தெரிவித்திருக்கிறார்கள். ஆயினும் 1996
இல் செய்யப்பட்ட சனத்தொகைக் கணிப்பீட்டின்படி 0.05 வீதத்தினரே தாம் கடவுள்
நம்பிக்கை உள்ளவர்கள் என்று கூறியிருந்தனர். இது குறித்துச் செய்யப்பட்ட ஆய்வின்
படி கடவுளுடன் நல்ல வகையில் தொடர்பு வைத்திருப்பவர்களே ஆரோக்கியமானவர்கள் என்று
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் செயல் நோக்குள்ளவர்களாக அதாவது motivation
உள்ளவர்களாகவும் வாழ்க்கையில் உயர்
நோக்கத்தைக் கொண்டவர்களாகவும் காணப்பட்டனர். கடவுளை நம்பாதவர்களின் ஆரோக்கியம் மிகச் சீர்கெடுவதாக கண்டு
பிடிக்கப்பட்டுள்ளது. வாழ்க்கையில் உயர்ந்த நோக்கம் உள்ளவர்களாகவும் அதே நேரம்
கடவுளுடன் தொடர்பு கொண்டுள்ளவர்களே ஆரோக்கியமாக வாழ்பவர்கள். வழிபாட்டிடங்களுக்கு மட்டும் போவதால் எந்தப்
பயனும் விளையாது. அங்கு சென்று நல்ல முறையில் இறைவனுடன் தொடர்பு வைத்திருப்பதே
மேற்கூறிய நன்மைகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. ஆரோக்கியம் என்பது மரபு ரீதியான சமயத்தைப்
பின்பற்றுவதால் மட்டும் ஏற்படுவதன்று. இறைவனுடன் ஆத்ம பூர்வமாகத் தொடர்பு
வைத்திருப்பதாலே ஏற்படுவது. தமிழ்நாட்டில் தோற்றம் பெற்ற பல ஞானியர் இறைவனுடன்
நெருங்கிய தொடர்பு கொண்டு சமூகத்துக்கும் சேவை செய்து வாழ்ந்ததை நாம் பெரிய
புராணத்தில் சந்திக்கிறோம்.
வெளிநாட்டவர்கள் இந்து சமயத்தை ஒரு சமயமாக ஏற்றுக் கொள்வதில்லை.
அதற்குக் காரணம் ஏனைய சமயங்களைப் போல அதனைத் தோற்றுவித்த ஒருவர் இல்லை.
குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு புனித நூல் இல்லை. இதனால் அதனை ஒரு வாழ்க்கை
முறையாகச் சொல்லலாமே தவிர அது சமயம் என்ற வரையறைக்குள் அமையவில்லை என்பது அவர்களது
வாதம். பல வருடங்களின் முன்னர் ஒரு
விமானம் பிரயாணத்தின்போது ஓர் இந்துவுக்கும் அருகில் இருந்த பிறநாட்டவர்
ஒருவருக்கும் இடையில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஓர் உரையாடலின் தமிழ் வடிவத்தை
இங்கு தருகிறேன். அதனை எழுதியவர் அதற்கு - நான் ஏன் இந்து எனப்படுகிறேன் - என்று தலைப்பிட்டிருக்கிறார். - அவர் கூறியது
போலவே அப்பகுதி இங்கு தரப்படுகிறது – நான்கு வருடங்களின் முன்னர் ஒரு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நான்
நியுயோர்க்கில் இருந்து கனடாவுக்கு விமானத்தில் சென்று கொண்fடிருந்தேன். எனது
வலதுபுறத்தில் யன்னலுக்கு அருகிலுள்ள இருக்கையில் ஓர் அமெரிக்க இளம்பெண்
அமர்ந்திருந்தார். அது ஒரு நீண்ட ஏழு மணிநேரப் பயணம். பொதுவாக இளம் அமெரிக்கரில்
காணப்படாத வகையில் அந்த இளம் பெண்ணின் கையில் ஒரு விவிலியநூலின் பிரதி இருந்தது.
சிறிது நேரத்தின் பின்னர் அவர் என்னைப் பார்த்துச் சிரிக்க இருவரும் பரஸ்பரம்
எம்மை அறிமுகப்படுத்திக் கொண்டோம். உங்களது நம்பிக்கை எது? என்று அவர்
கேட்டார். என்ன? எனக்கு அவரது வினா புரியவில்லை. உங்களது சமயம்
என்ன? நீங்கள் கிறீஸ்தவரா? அல்லது
இஸ்லாமியரா? கேள்வியை சற்று மாற்றிக் கேட்டார். நான் கிறீஸ்தவருமல்ல, இஸ்லாமியருமல்ல.
அப்படியாயின் நீங்கள் யார்? அவர் கேட்டார். நான் ஓர் இந்து என்று நான்
பதில் கூறினேன். அவர் கூட்டுக்குள் அடைக்கப்பட்ட விலங்கைப் பார்ப்பதுபோல என்னை
விநோதமாகப் பார்த்தார். நான் என்ன கூறுகிறேன் என்று அவருக்குப் புரியவில்லை. நான்
இந்துவான பெற்றோருக்குப் பிறந்தேன். அதனால் நான் பிறப்பினால் ஓர் இந்து நான்
விளங்கப்படுத்தினேன். யார் உங்களது சமயத்தை உருவாக்கியவர் - இது அவரது அடுத்த
வினா. எமக்கு அப்படி ஒருவர் கிடையாது. எது உங்களது புனித நூல்? எமக்கு தனியாக
ஒரு நூல் கிடையாது. எம்மிடம் நூற்றுக்கணக்கான புனித நூல்களும் தத்துவ நூல்களும்
உள்ளன. அப்படியாயின் உங்களது கடவுளின் பெயரையாவது
கூறுங்கள். அதாவது கிறீஸ்தவருக்கு யேசு, இஸ்லாமியருக்கு
அல்லா, அது போல உங்களது கடவுளின் பெயர் என்ன? நான் சிறிது
நேரம் சிந்தித்தேன். உலகைப் படைத்து அதில் வாழும் உயிர்களில் அக்கறை கொண்ட ஒரு கடவுள் பற்றியே இவரது மன எண்ணம்
உருவாக்கப்பட்டுள்ளது. மற்றவற்றை ஏற்பது அவருக்குக் கடினம். நான் அவருக்கு
விளங்கப்படுத்த முயற்சித்தேன். ஒரு கடவுளை நம்பியும் இந்துவாக இருக்கலாம் பல
தெய்வங்களை நம்பியும் இந்துவாக இருக்கலாம். கடவுளை நம்பாமலும் இந்துவாக
இருக்கலாம். இது பைத்தியக்காரத்தனம் போல அவருக்குப்பட்டது. இவ்வாறு
ஒழுங்கமைக்கப்படாததும் ஆயினும் வெளிநாட்டுச்
சக்திகளால் தாக்குதலுக்குட்பட்டும் பல்லாயிரக் கணக்கான வருடங்கள் பழமையானதுமான ஒரு
சமயம் குறித்து அவர் கற்பனை செய்தும் பார்த்திருக்க மாட்டார். எனக்குப்
புரியவில்லை ஆயினும் இந்த விவரங்கள் என் ஆவலைத் தூண்டுகின்றன. நீங்கள் சமயத்தை
நடைமுறையில் பின்பற்றுகிறவரா? நான் ஒரு அமெரிக்க பெண்ணுக்கு எவ்வாறு இவற்றைப்
புரிய வைப்பேன் என்று எனக்கு மலைப்பாக இருந்தது.
நான் ஒழுங்காகக்
கோயிலுக்கு போகிறவன் இல்லை. நான் ஒழுங்காக எந்தக் கிரியைகளையும் செய்வது கிடையாது.
என் சிறு வயதில் நான் சில கிரியைகளை அறிந்து கொண்டேன். இடையிடை அதனைச் செய்வதில்
மகிழ்ச்சியடைகிறேன். அவருக்குத் திகைப்பாக இருந்தது. உங்களுக்குக் கடவுள் பயம்
கிடையாதா? கடவுள் என்பவர் ஒரு நண்பர். அவருக்கு நாம் ஏன்
பயப்படவேண்டும்? கிரியைகளைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்று யாரும் என்னை
வற்புறுத்தியது கிடையாது என்றேன். அவர் சிறிது நேரம் யோசித்தார். பின்னர்
கேட்டார். நீங்கள் எப்போதாவது வேறு சமயத்துக்கு மாறவேண்டும் என்று நினைத்தில்லையா? ஏன் நான் வேறு
மதத்திற்கு மாற வேண்டும்? இந்து சமயத்திலுள்ள சில கிரியைகளை நான்
விரும்பாவிட்டாலும் என்னை யாரும் வேறு மதத்திற்கு மாற்ற முடியாது. ஏனெனில் நான்
இந்துவாக இருப்பதால் எந்தக் கட்டுப்பாடுகளுமின்றி அது ஒரு நோக்கத்தோடும்
சுதந்திரமாகவும் என்னைச் சிந்திக்க அனுமதித்திருக்கிறது. நிர்ப்பந்தத்தால் நான்
இந்துவாக இருக்கவில்லை. என் சுயதெரிவால் நான் தொடர்ந்து இந்துவாக இருக்கிறேன்.
கிறீஸ்தவம், இஸ்லாம் போல இந்து சமயம் ஒரு சமயம் கிடையாது. ஆனால் அதற்கு
ஒரு தொகுதி நம்பிக்கைகளும் நடைமுறைகளும் உள்ளன. அது ஒருவரால் ஆரம்பிக்கப்பட்டதல்ல.
அதைக் கட்டுப்படுத்தும் எந்த நிறுவனமோ அதிகாரமுள்ளவரோ கிடையாது. அப்படியானால்
உங்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாதா? அவர் எல்லாவற்றையும்
அறிய விரும்பினார். நான் அதைச் சொல்லவில்லையே. கடவுள் உண்மையை நான் புறக்கணித்தது
கிடையாது. வேதங்கள், உபநிஷதங்கள், பகவத்கீதை போன்றன
எங்கள் புனித நூல்கள். பரபிரமத்தை அதாவது இந்த பிரபஞ்சத்தைப் படைத்த உயர்
தெய்வத்தை நாம் பிரார்த்திக்கிறோம். ஏன்
நீங்கள் தனியான ஒரு கடவுளை நம்பக்கூடாது? எமக்குள்ளது
தனியான கடவுள் அல்ல பரம்பொருள் அல்லது ஒரு கோட்பாடு. ஒரு அரசனைப் போல கடவுள் தன்னை
வழிபடாவிடின் தண்டிப்பார் என்பது சரியானதல்ல. இந்து சமயத்தில் சில பிரிவினர்
தனியான தெய்வத்தைக் கொண்டிருக்கின்றனர். ஏன் இயற்கை அம்சங்களை வழிபடுகிறவர்களும்
இன்னும் இருக்கின்றனர்.
தத்துவம் சார்ந்த
இந்துசமயம் மூடநம்பிக்கைகளை ஒதுக்கியுள்ளது. நல்லது கடவுள் இருக்கிறார் என்பதை
நீங்கள் ஒத்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் பிரார்த்திப்பதாகக் கூறினீர்களே? உங்களது
பிரார்த்தனை என்ன? அமெரிக்கப் பெண் கேட்டார். லோகா சமஸ்தா சுகினோ
பவந்து. ஓம் சாந்தி சாந்தி சாந்தி. நான் கூறியதும் அவர் சிரித்துவிட்டு
வேடிக்கையாக இருக்கிறது. இதற்கு என்ன கருத்து? என்று கேட்டார்.
இந்த உலகில் உள்ள உயிர்கள் எல்லாம் மகிழ்ச்சியாக இருக்கட்டும். ஓம் அமைதி, அமைதி, அமைதி. ஹும்ம்ம்
மிக சுவாரஸ்யமாக இருக்கிறது. இது ஜனநாயகம், சுதந்திரம்
விசாலப் போக்கு உள்ள சமயமாக உள்ளது. நான் இது குறித்து அதிகம் அறிய விரும்புகிறேன்
என்றார் அந்தப் பெண். இந்து சமயம் அதைச் சார்ந்தவர்கள் தமது மனப்போக்குக்கும்
தனித்துவத்துக்கும் ஆன்மிக முன்னேற்றத்துக்கும் தக விளங்கிக் கொள்ளவும்
பின்பற்றவும் அனுமதிக்கிறது. பல நூற்றாண்டுகளாக எழுந்த புனித இலக்கியங்களிலும் காலத்துக்கு காலம் எழுந்த ஞானிகளின் போதனைகளiலும் இந்து சமயம்
வேரூன்றியுள்ளது. சமூக ரீதியாக கோயில்களில் வழிபாடுகள்
நிகழ்ந்தாலும். ஆன்மிக முன்னேற்றம் என்பது தனித் தனி மனிதர்களுக்குரியது. எவ்வாறு
ஒருவர் இந்து சமயத்துக்கு மாறுவது? இது அவரது
மற்றயதொரு வினா. யாரும் ஒருவரை இந்து சமயத்துக்கு மாற்ற முடியாது? அதற்கான எதுவும்
இந்து சமயத்தில் கிடையாது. அதிகாரத்துக்குரிய ஒருவரோ அல்லது நிறுவனமோ இந்து
சமயத்தில் இல்லை என்று நான் ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறேன். அது ஒரு சமயமல்ல
வாழ்க்கைமுறை. என்று சொன்னேன். உண்மையாக ஒருவர் கடவுளைத் தேடுவாராயின் ஆண்டவரின்
ராச்சியம் உங்களுக்குள்ளேயே இருக்கிறது என்று உங்கள் பைபிள் குறிப்பிடுவது போல
ஒருவருக்குள்ளேயே தெய்வம் குடியிருக்கிறது. கிறீஸ்துவின் போதனைகள் சொல்வதுபோல நாம்
ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டுவதே உண்மையான சமய வாழ்வு. அதிலேயே வாழ்வில்
அர்த்தத்தைப் புரிந்து கொள்ளலாம். கடவுளின் படைப்பில்
உள்ள எல்லா உயிர்களையும் நேசிப்பதே உண்மையானது. ஈசாவஸ்யம் இதம் சர்வம் அதாவது
கடவுள் எங்கும் இருக்கிறார். இதனால் கடவுள் இல்லாமல் எதுவும் இல்லை. உயிருள்ள
உயிரற்ற எதனையும் கடவுளாகப் பார். இதுவே இந்து சமயத்தின் அடிப்படைக் கோட்பாடு.
தர்மத்தைக் கடைப்பிடிப்பதை அடிப்படையாகக் கொண்டுள்ளதால் இந்து சமயம் சனாதன தர்மம்
என்று அழைக்கப்படுகிறது. பரம்பொருள் காலத்தை வடிவத்தைக் கடந்ததாயினும் உயிர்களின் நன்மைக்காக அது தன்னைப் பல வடிவங்களில் வெளிப்படுத்துகிறது.
இதுதான் முக்கியமானது என இந்துசமயம் எந்தக் கருத்தையும் குறிப்பாகச் சொல்லாவிடினும் அதில் சரியாக
வாழ்வதற்கேற்ற கருத்துக்கள் நிறையவே உள்ளன. இந்து சமயத்தின் மூதாதையர்கள், முடிவான உண்மைகளிலும் பிரபஞ்சத்தின் விதிமுறைகளிலும் நம்பிக்கை வைத்திருந்தனர். அஹிம்ஸா ப்ரமோ தர்மா என்று
உயிர்களை வதைக்காமயை முக்கிய தர்மமாகப் போற்றினர். இந்த உண்மைகள் அதனைத் தேடும்
யாருக்காகவும் திறந்தேயுள்ளன. இப்போது சமயங்கள் வியாபாரமாகியுள்ளன. அதற்கு இந்து சமயமும்
விதிவிலக்கல்ல. தியானம், யோகா, ஆயுர்வேதம் போன்ற
இந்து சமயத்தின் அரிய பொக்கிஷங்கள் இன்று உலகில் வியாபாரப்
பொருள்களாகிவிட்டிருக்கின்றன. அதுமட்டுமல்ல ஆன்மிகம் மிக முக்கிய வியாபாரப்
பொருளாகிவிட்டது. அதனால் இன்று பணம் சோர்ப்பவர்கள் பலர். நான் கூறி முடித்தேன்.
இவ்வாறு அந்த அமெரிக்க இளம்பெண்ணுக்கு இந்து சமயத்தின் சில அடிப்படைகளை இவ்வாறு
தொட்டுக்காட்டியுள்ளார்.
ஒவ்வொரு சமயமும் தத்தமது
வழிபாட்டு முறைகளை அமைத்து வாழ்ந்தபோதும் சமயங்களிடையே மிகுந்த காழ்ப்புணர்ச்சி ஏற்பட்டுப் பெரும்
அனர்த்தங்கள் விளைந்ததை வரலாற்றில் அன்றும் கண்டோம் இன்றும் காண்கிறோம். தமிழ்
நாட்டு வரலாற்றில் பௌத்தம் சமணம் ஆகியவற்றுக்கும் சைவசமயத்திற்கும் இடையே ஏற்பட்ட
முரண்பாடுகள், சைவத்துக்கும் வைஷ்ணவ சமயத்திற்கும் இடையிலும் பின்னர்
இந்துக்களுக்கும் இஸ்லாமிய சமயத்தினருக்கும் இடையிலும் உலகத்தில்
கீறீஸ்தவத்துக்கும் இஸ்லாத்துக்கும், யூதர்களுக்கும்
இஸ்லாத்துக்கும் இடையிலும் என்று இவ்வாறு சமயங்களடையே முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
தமிழ் நாட்டில் 13 ஆம் 14 ஆம் நூற்றாண்டுகளில் வேதாந்தம்
சைவசித்தாந்தம் போன்றவற்றிடையே பெரும் போட்டி ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட
குழப்பங்களால் பின்னர் வந்த தாயுமானவர், வள்ளலார்
போன்றோர் சமரச சன்மார்க்கம் என்பது குறித்துப் பிரசாரம் செய்ய வேண்டி வந்தது.
பல்வேறு நதிகள் கடலைச் சென்றடைவது போல சமயங்கள் வேறாயினும் அவை கடவுளை அடைவதையே
நோக்கமாகக் கொண்டுள்ளது. கடவுள்களின் பெயர்கள்
மாறுபடலாம் ஆனால் அவர்களுக்கு அனைத்துச் சமயங்களும் ஒரே இயல்பையே கற்பிக்கின்றன.
அவருடன் தொடர்பு கொள்வதற்கு நாம் எவ்வாறு எம்மைத் தயார்படுத்த வேண்டும் என்பதுவும்
பெரும்பாலும் ஒன்றாகவே காணப்படுகிறது. வழிபாட்டு முறைகளும் அதற்காக அமைக்கப்படும்
தலங்களும் மட்டும்தான் வேறுபடுகின்றன. சமய சகிப்புத்தன்மையும் ஒன்றை ஒன்றும்
மதிக்கவும் கற்றுக்கொண்டால் முரண்பாடுகள் ஏற்படுவதற்கு வழி ஏற்படாது.
எமது பண்பாட்டில் சிறு வயதிலிருந்தே சமயத்தின்
முக்கியத்துவமும் கடவுளுடன் ஆத்மார்த்தமாகத் தொடர்பு வைத்திருத்தல் பற்றியும் நாம் அறிவுறுத்தப்படுகிறோம்.
அதனால் பெரும்பான்மையானவர் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக வளர்கின்றனர்.
மார்க்ஸியத்தில் நம்பிக்கை கொண்ட சிலர் சமய நம்பிக்கையைக் கைவிட்ட போதும் வயது
முதிரும் போது மீண்டும் சமயத்திற்குத் திரும்புகின்றனர். ஆனால் மேல் நாடுகளில் நிலமை இவ்வாறு இல்லை. சமயம் பலரது வாழ்விலிருந்து
என்றோ மறைந்து விட்டது. அழகிய தேவாலயங்கள் வெறிச்சோடிப் போய் கிடக்கின்றன. பொருளில் மீது பற்று மிகுந்து ஆன்மிகத்தை முற்றாக மறந்து
போயினர். ஆயினும் செல்வம் வரும்
போகும் என்று நினைத்து இன்று பொருள் மீது உள்ள பற்றைக் குறைத்து ஆன்மிகத்துக்குத்
திரும்ப வேண்டியதன் அவசியம் ஓரளவில் உணரப்பட்டு வருகிறது. அதுவும் உலக பொருளாதாரம்
சீர்கெட்டுள்ள இன்றைய நிலையில் இது நன்கு
உணரப்படுகிறது. சமயம் மனிதரது வாழ்விலிருந்து மறைந்திருந்த போதும் சமயம் கூறும் பல
நல்லியல்புகள் பல்வேறு வகைகளில்
அவர்களுக்கு கொடுக்கப்பட்டே வந்துள்ளன. நாம் முன்னர் குறிப்பிட்டதைப் போல
கடவுளுடன் ஆத்மிகத் தொடர்பு வைப்பது இப்போது ஊக்குவிக்கப்படுகிறது. இத்தொடர்பு
உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல உள்ள அமைதிக்கும், நிதானத்துக்கும் வாழ்வுக்கும் அதனால் சமூகத்துக்கும்
நாட்டிற்கும் உலகத்துக்கும் நல்லது.