கடிதம் எழுதுவது என்பது
ஒரு கலை. மின் கடிதம் என்ற ஒன்று அறிமுகமான பின்னர் கையெழுத்தில் அமைந்த அழகான
கடிதங்கள் பெருமளவில் காணாமல் போய்விட்டன. முன்னர் இளம் வயதில் யாழ்ப்பாணத்தில்
வசித்த போது பாடசாலை விடுமுறை நாட்களில் தோழிகளின் கடிதத்திற்காக தபால்காரரை எதிர்பார்த்து தவமிருப்போம்.
சில வேளைகளில் தபால்காரர்
வருவார். சிலவேளைகளில் எம்மை
ஏமாற்றத்தில் ஆழ்த்திவிட்டு எம் படலையைக் கடந்து போவார். கடிதம் வந்தால், வந்த கையுடன்
படித்து அதற்குப் பதில் எழுதித் தபாலில் அனுப்பிவிட்டுத்தான் அடுத்த வேலை. அது ஒரு பொற்காலம் போல இப்போது
தோன்றுகிறது. இப்போது இங்கு bills உம் உத்தியோகபூர்வமான
கடிதங்களும்தான் தபாலில் வருகின்றன. அழகாக கடிதம் எழுதுவாரும் இல்லை. அதற்கு பதில்
எழுத வேண்டிய தேவையும் இப்போது இல்லை.
கடிதம் எழுதுபவர்களும்
ஓரிரண்டு வரிகளில் சாட்டுக்கு
கடிதம் எழுதுபவர்களாகவே இருக்கின்றனர்.
கடிதம் எழுதுபவர்களை நாம் வகைப்படுத்தலாம். கடிதங்களில் ஊர் செய்திகள், ஊர் வம்புகள் எழுதுபவர்கள் ஒரு வகை. காதல் வசப்படும் போது
பக்கம் பக்கமாகக் கடிதம் எழுதி பின் முற்றாகவே கடிதம் எழுதுவதை நிறுத்தி
விடுபவர்கள் இன்னொரு வகை. நெப்போலியன் தனது மனைவியான Josephine, தனக்கு அன்பையும் காதலையும் கொட்டி கடிதம் எழுதுவதில்லையே
என்று குறைப்பட்டு அவளுக்கு கடிதம் எழுதியதாகப் படித்திருக்கிறேன். தனது இதயத்தை
நிறைக்கும்படி பக்கம் பக்கமாகப் பதில் எழுதும்படி அதில் அவன் மனைவியை
யாசித்திருக்கிறான். இன்னும் இலக்கியக் கடிதங்கள், அரசியல் கடிதங்கள் என்று பல வகையான கடிதங்கள் உள்ளன.
நேரு சிறையில் இருந்தபோது மகளுக்கு எழுதிய கடிதங்கள் மிகப் பிரபலியமானவை. இந்திரா
காந்திக்குப் பயனுள்ளவை.
எது எவ்வாறிருந்த
போதும் Sealed
with affection
என்றொரு சிறு கட்டுரை படித்தேன். உறவு முறை பற்றிய அந்தக்
கட்டுரையை எழுதியவர் Jacqui Taffel என்ற பெண். விஷயங்கள், நகைச்சுவை, அன்பு, அனைத்தும் கலந்து fountain பேனாவால்
தொடுத்து எழுதப்பட்டு தனக்கு அண்மையில் வந்த ஒரு கடிதம் பற்றி அவர் அதில்
குறிப்பிட்டிருந்தார். அந்தக் கடிதத்தை வாசித்து மகிழ்ச்சியடைந்த வேளையில் பலர்
இப்போது இவ்வாறு கடிதம் எழுதுவதில்லை என்ற ஆதங்கமும், துயரமும் தனக்கு
ஏற்பட்டதாக அவர் கூறியிருக்கிறார். வேகம் நிறைந்த இந்த யுகத்தில் மின் கடிதமும் text messaging உம் முக்கிய
இடத்தைப் பெற்றுவிட்டதால் நல்ல கடிதம் எழுதும் கலை சிறிது சிறிதாக மறைந்து
போகிறது. தான் ஜேர்மனியில் வசித்த போது தனது ஒன்பது வயதில் தனது grandparents க்கு எழுதிய கடிதங்கள் இன்னும் தன்னிடம்
இருப்பதாகவும் தனது பதின் வயதில் தனக்கு உலகம் முழுவதும் பேனா நண்பர்கள்
இருந்ததாகவும் இன்னும் Prague இல் உள்ள ஒரு
பேனா நண்பருக்கு கடிதம் எழுதுவதாகவும் குறிப்பிடுகிறார். 1991 இல் சிட்னியில்
சந்தித்துப் பின்னர் இங்கிலாந்து போய்விட்ட தனது காதலரும் தானும் இரண்டு
வருடங்களுக்கு மேலாக கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்ததாகவும் இப்போது கணவராகிவிட்ட
அவரும் தானும் அக்கடிதங்களை சேமித்து வைத்திருப்பதாகவும் அவர் சொல்கிறார். அந்த
நேரத்தில் தாம் மின் கடிதம் மூலம் தொடர்பு கொண்டிருந்தால் அவற்றை இவ்வாறு பெட்டிகளில் சேமித்து கட்டிலுக்குக் கீழ் வைத்திருந்திருக்க மாட்டோம்
என்கிறார் அவர்.
அதற்காகத் தான்
மின்கடிதத்திற்கு விரோதி இல்லை என்று கூறும் அவர், பேனாவைக் கையில் எடுக்காத பலருடன் மின்கடிதம்
மூலம் தொடர்பு கொள்ள முடிகிறது என்கிறார்.
சிலர் நல்ல மின் கடிதங்கள் எழுதுகிறார்கள். பெரும்பாலும் தொலைபேசி
அழைப்புக்கு பதிலாகவே பல மின்கடிதங்கள் எழுதப்படுகின்றன. கடிதம் எழுதும் கலைக்கு
மின்கடிதம் உதவக்கூடும் என்கிறார் நியூ சவுத் வேல்ஸ் மாநில நூலகத்தில் சிரேஷ்ட Curator ஆகக் கடமையாற்றும் Paul Brunton என்பவர்.
பேனாவால் தொடுத்து கடிதம் எழுதும் முறை வேண்டுமானால் இறந்து கொண்டிருக்கின்றது
என்று கூறலாம், ஆனால் கடிதம்
எழுதும் கலை மறைகிறது என்று கூறுவது தவறு. ஏனெனில் மின்கடிதம் வந்த பின்னர்
கடிதங்களின் அளவு
பெருமளவில் அதிகரித்துவிட்டது. கையால் எழுதும் கடிதங்களை மின் கடிதங்களுடன்
ஒப்பிடும் போது கையால் எழுதும் கடிதங்களில் இருக்கும்
அன்பும் கரிசனமும் மின் கடிதங்களில் இல்லை என்பது உண்மைதான். கையால் எழுதும் போது என்ன
எழுதப் போகிறோம் என்பது பற்றி முன்கூட்டியே சிந்திக்கிறோம். ஆனால் மின்கடிதம் எழுதும்
போது சிந்திக்காது எழுதுவதால் குப்பைகளையே பலர் எழுதுகிறார்கள். ஏனெனில் அது மிக
விரைவானது. இதனாலேயே பல தடவைகள் அவை தவறாக விளங்கப்படுகின்றன. எழுதுவதற்கும்
பேசுவதற்கும் இடையில் உள்ள வேறுபாட்டைப் பலர் புரிந்து கொள்வதில்லை. மின் கடிதம்
எழுதுவதைவிட பேனாவால் எழுதும் கடிதத்திற்கு அதிக முயற்சி வேண்டும் என்பது உண்மை.
ஆயினும் தாம் நன்றாக எழுதமாட்டோம், தாம் எண்ணுவதை முழுதாக விவரிக்கும் ஆற்றல் தமக்கில்லை என்று
கருதி பலர் பேனாவால் கடிதமெழுத அஞ்சுகிறார்கள். ஆனால் யாரும் மின்கடிதத்தை
எழுதலாம். இலக்கியத் தரம் வாய்ந்த மின்கடிதங்களை யாரும் எதிர்பார்ப்பதில்லை
என்கிறார் அவர். மின்கடிதங்களை எழுதுதல் என்பது முறையான கடிதங்களை எழுதப் பலரைத்
தூண்டக்கூடும். தையலில் பூ வேலை செய்வது போல, கம்பளி ஆடைகளைப்
பின்னுவது போல கையெழுத்தில் கடிதம் எழுதுவது இன்பகரமானது. அத்துடன் கடிதங்களைப் படிப்பதும்
மகிழ்ச்சிகரமான அனுபவம் என பலர் விரையில் கண்டறியப் போகிறார்கள் என்று Paul Brunton குறிப்பிடுகிறார்.
Amelia
Cooper என்ற 22 வயது மாணவி மின்கடிதம் எழுதியே வளர்ந்தவர். கடந்த சில
வருடங்களுக்கு முன்னர் வெளிநாடுகள்
சிலவற்றுக்குப் போய் வந்த பின்னர் சில நட்புகளை உருவாக்கி வந்திருந்தார். அவர்களிடம் மின்கடித வசதி இல்லாததால் சில வாரங்களுக்கு ஒரு தடவை
தான் மூன்று அல்லது நான்கு கடிதங்களைக் கையால் எழுதி அனுப்புவதாகக் கூறுகிறார்.
கடிதங்கள் தனிப்பட்ட முறையில் அமைவதுடன் விஷயங்களை விவரிக்கும் போது ஒவ்வொரு கடிதமும்
ஏறக்குறைய ஒரு சிறுகதை போல அமைகிறது என்கிறார். மின்கடிதத்தின் வேகத்தைத் தான்
விரும்பிய போதும் தபாலில் வரும் கடிதங்களைக் கையில் வாங்கி பிரித்து படிக்கும்
போது மிகுந்த திருப்தி ஏற்படுகின்றது என்கிறார் Amelia.
தான் கடிதங்களை எழுதும்போது முதலில் எழுதி படித்துப்
பார்த்த பின் இறுதிப் பிரதியை எழுதி அனுப்புவதாக அவர் குறிப்பிடுகிறார். அவரின்
அவுஸ்திரேலிய நண்பர்கள் மின்கடிதமும் SMS உம்தான்
அனுப்புகிறார்கள். தான் கையால் கடிதம் எழுவது பற்றி அவர்களுக்கு கூறுவதில்லை.
ஏனெனில் அவர்கள் தன்னைப் பழைய பஞ்சாங்கம் என்று எண்ணக்கூடும். ஆயினும் தான்
தொடர்ந்து பேனாவால் கடிதம் எழுதவிருப்பதாகவும் அதில் தான் சிறப்புப் பெற
விரும்புவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
மின்கடிதம் வர முன்னர்
தொலைபேசி உரையாடல், கடிதம் எழுதும்
போக்கைக் குறைத்திருந்தது. எவ்வாறாயினும் கையால் எழுதும் கடிதங்கள் பெறுமதிமிக்க
சமூக வரலாற்று ஆவணங்களாகத் திகழ்கின்றன. நியூசவுத் வேல்ஸ் மாநில நூலகத்தில் (State Library) உள்ள 14 கிலோ மீற்றர் நீளமுள்ள கையெழுத்துப் பிரதிகளில் 5 கிலோ மீற்றர்
நீளமுள்ளவை பழைய கடிதங்கள் என்கிறார் Paul
Brunton. 1770 ஆம் ஆண்டு
தொடக்கம் இன்று வரை அவை தேதியிடப்பட்டுள்ளன. ஆரம்பகால அவுஸ்திரேலிய
குடியேற்றவாசிகளால் எழுதப்பட்ட கடிதங்கள் அக்காலத்தில் அவர்கள் எவ்வாறு வாழ்ந்தனர்
என்பதை மட்டுமல்ல அவை எவ்வளவு சக்தி வாய்ந்த தொடர்பு சாதனம் என்பதையும்
தெரிவிக்கின்றன என்கிறார் அவர். 1804 இல் நியூ சவுத் வேல்ஸில் பதில் அளவையாளர் நாயகமாக (Deputy Surveyor General) இருந்த George Harris என்பவர்
தனது சகோதரனுக்கான கடிதத்தில் பின்வருமாறு எழுதுகிறார். இந்த வாரம் தந்தது
போன்ற ஏமாற்றத்தையும் கோபத்தையும் எனது வாழ்வில் நான் ஒரு போதும் அனுபவித்ததில்லை.
கோபத்துக்குக் காரணம் இந்த வாரத்தில் இங்கிலாந்தில் இருந்து வந்த இரு கப்பல்களில் என்னைத் தவிர அனைவருக்கும் கடிதங்கள் வந்திருந்தன. நான்
விசுவாசத்துடன் வீட்டுக்கு எப்போதும் கடிதங்கள் எழுதிய போதும், இவ்வாறு உங்களது
கரிசனமற்ற தன்மையும் விச்சிராந்தியான இயல்பும் எனது மனத்தை அதிகளவில்
காயப்படுத்திவிட்டது. இனி நான் உங்களுக்கு ஒரு போதும் கடிதம் எழுதப் போவதில்லை
என்று உறுதி எடுத்திருக்கிறேன். இவ்வாறு அவர் மனத்தாங்கலில் கடிதம் எழுதிய போதும்
பின்னர் கடிதங்களை மகிழ்ச்சியுடன் பெற்றும் எழுதியும் வந்தார்.
இது போல இன்று கையால்
எழுதப்பட்ட கடிதங்களைப் பெறுவது என்பது அரிதாக நிகழும் ஒரு நிகழ்ச்சியாகிவிட்டது.
அவுஸ்திரேலிய போஸ்ற் சராசரி நாளொன்றில் 21 மில்லியன் கடிதங்களையும் பார்சல்களையும் விநியோகிக்கிறது.
ஆனால் அவற்றுள் மிகப் பெரும்பான்மையானவை வர்த்தக கடிதங்கள். 5 வீதம் மட்டுமே
தனிப்பட்ட கடிதங்கள். கடந்த பத்து வருடங்களில் அவற்றின் தொகை 3 வீதத்தால் குறைந்துள்ளது. கிறிஸ்மஸ் காலம் மட்டும் இதற்கு
விதிவிலக்கு. வருடம் தோறும் அவுஸ்திரேலியாவுக்குள் ஏறக்குறைய 10 மில்லியன்
வாழ்த்து அட்டைகள் அனுப்பப்படுகின்றன. மின் வாழ்த்துக்களை மிக அதிகம் பேர்
விரும்புவதில்லை. 15 வருடங்களுக்கு
முன்னர் கிறிஸ்மஸ் கடிதங்கள் என்ற ஒரு பிரிவு மாநில நூலகத்தில்
ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொதுவாக அந்த வருடத்தில் வாழ்வில் நடந்த முக்கிய
நிகழ்ச்சிகள் அந்த கடிதங்களில்
குறிக்கப்பட்டுள்ளன. அவை மிக அழகாக எழுதப்பட்டுள்ளதுடன் சமூக வரலாற்று
ஆவணங்களாகவும் கொள்ளக்கூடியன என்கிறார் Paul
Brunton. மின்கடிதத்திலும் இவ்வாறான அம்சங்கள் இடம்பெறக்கூடும்.
அவற்றை அச்சிட்டு பாதுகாக்க வேண்டும். ஒருவர் தனது வாழ்க்கை பற்றிய குறிப்புகளைச்
சேமிப்பதற்கு அவர் பிரபலியமானவராக இருக்கவேண்டுமென்பது இல்லை. நூலகத்தில்
சேமிக்கப்பட்டுள்ள பிரபலியமானவர்களின் கடிதங்கள் சில
வாசிப்பதற்கு சுவாரஸ்யமானவை அல்ல. பல வெறும் பாராட்டுக் கடிதங்கள். அவற்றைவிட
வாழ்க்கையில் எதனையும் சாதிக்காதவர்கள் குறிப்பிட்ட சில சந்தர்ப்பங்களில் தாம் எவ்வாறு வாழ்ந்தோம் என்று கூறுவது சுவாரஸ்யமான
கடிதங்களாக அமையும் என்கிறார் அவர். நாம் போர்க்கால யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த போது
எழுதிய கடிதங்கள் அந்தக் கால வாழ்க்கையைக் காட்டும் ஆவணமாகக்கூடும். ஈழ வரலாற்றில் அவற்றிற்கு மிக முக்கிய இடம்
கிடைக்கலாம்.
கையால் எழுதப்படும்
கடிதங்களில் அன்பும்
கரிசனையும் உள்ளன என்பது உண்மையான போதும் இந்தப் பரபரப்பான உலகில் மின் கடிதத்தின்
மூலம் கடிதம் எழுதுவதே காரிய சாத்தியமான விஷயமாக உள்ளது. அதுபோல இணைய
வசதியில்லாமல் வாழ்வதும் சாத்திமானதல்ல. எமது நாட்டுச் செய்திகளையும் உலக
விவகாரங்களையும் சுடச் சுட அறிய முடிவது
முதல், எந்த விஷயம்
பற்றியும் அறிய இணையம் உதவுகிறது. Blogs என்பது ஒருவர் தமது
எழுத்தாற்றலைப் பலரறிய இலவசமாகப் பறைசாற்ற உதவுகிறது. மின் கடிதம், இணையம் மட்டுமல்ல
பல விஷயங்களுக்கும் ஆதாரமாக இருக்கிறது கணிப்பொறி. அது இல்லாமல் இயங்க முடியாத
நிலை தனிப்பட்ட பலருக்கும் இருக்கிறது. எது எவ்வாறாயினும், நான் இங்கே
தரவிருப்பது, கையால் எழுதிய
கடிதங்கள் மூலம் வளர்ந்த ஒரு காதல் கதை.
காதல் என்பது ஒருவரின்
தோற்றத்தைப் பார்த்து வருவதா? அல்லது மனதைப் புரிந்து வருவதா? இது காலம் காலம்
காலமாக கேட்கப்பட்டு வரும் ஒரு வினா. ஒருவரைப் பார்த்தவுடன் அவரது தோற்றம் முதலில்
எம்மை ஈர்க்கிறது என்பது உண்மைதான். ஆயினும் பழகப் பழக அவரது தோற்றம் மறைந்து போக
அவரது இயல்பே எம்மனதில் நிற்கிறது. பின்னர் தோற்றம் ஒரு பொருட்டாகவே தெரிவதில்லை. இந்த அழகற்ற தோற்றமுடைய பெண்ணை
இந்த அழகான இளைஞன் எப்படிக் காதலித்தான்? என்று இவ்வாறான ஒரு சோடியைக் காணும்போது நாம் மனதுக்குள்
எண்ணுகிறோம். அது எவ்வளவு தவறான எண்ணம் என்பதை அந்தப் பெண்ணுடன் நாம் பழகும் போது
அறிந்து கொள்வோம். ஒருவரது புற அழகுக்கும் அவரது இயல்புக்கும் எந்தவித தொடர்பும்
இல்லை என்பது முற்றிலும் உண்மை. பல வேளைகளில் மிக
அழகானவர்கள் பழகுவதற்கு மிகுந்த கடினமானவர்களாகவும் கர்வம் உள்ளவர்களாகவும்
இருப்பார்கள். எது எவ்வாறாயினும் இந்த சுவாரஸ்யமான காதல் கதையைப் படித்துப் பாருங்கள். இரண்டாம் உலகப்
போர் நடந்த காலத்தில் நடந்த ஒரு காதல் கதை இது. நீங்கள் யாரைக் காதலிப்பீர்கள்
என்பது அதன் தலைப்பு.
அந்த பிரமாண்டமான
புகையிரத நிலையத்தில் வருகின்ற போகின்ற மனிதர்களை நுணுக்கமாகப் பார்த்தவாறு John
Blanchard தான் இதுவரை அமர்ந்திருந்த இருக்கையிலிருந்து எழுந்து
நின்று தனது நேவி சீருடையைச் சரி செய்து கொள்கிறான். முன்னொரு போதும் காணாத ஒரு
பெண்ணை அவனது கண்கள் அந்த மனிதக் கும்பல்களுக்குள் தேடுகிறது. அவளை அவன் கண்fடிராத போதும்
அவள் எழுதிய கடிதங்களால் அவளது அழகான இதயத்தை அவன் புரிந்து கொண்டு அவளை உண்மையாக
நேசிக்க ஆரம்பித்திருந்தான். இன்றுதான் இருவரும் ஒருவரை ஒருவர் காணப் போகின்றனர். அழகான
இதயம் கொண்ட அவளுக்கு அழகான புறத் தோற்றமும் இருக்கும் என்று அவனது காதல் கொண்ட
மனம் நம்பியிருந்தது. தனது மனதைக் கொள்ளை கொண்டவளைக் காண அவனது மனம் ஆவலால்
துடித்துக் கொண்fடிருந்தது. இந்த
காதலுக்கான அத்திவாரம் 13 மாதங்களின் முன்னர் போடப்பட்டது. ஜோன் Florida வில் உள்ள ஒரு
நூலகத்தில் ஒரு புத்தகத்தை வாசிக்க எடுத்த போது அதிலுள்ள எழுத்துகளால் பெரிதும்
கவரப்பட்டான். புத்தகத்திலுள்ள எழுத்துகளால் அல்ல. அந்த புத்தகத்தைப் படித்த
ஒருவர் அதன் பிற்பகுதியில் பென்சிலால்
அழகாக எழுதியிருந்த எழுத்துகளாலே அவன் பெரிதும் கவரப்பட்டான். அந்த மென்மையான
எழுத்து சிந்தனையும் உள்ளார்ந்த அறிவும் கொண்ட ஒருவரைப் பிரதிபலித்துக் காட்டியது.
அவர் யார் என அறிய அவனது மனம் விழைந்தது. அந்த புத்தகத்தின் முன் பக்கத்தில் அதனை
முதலில் பயன்படுத்தியிருந்தவரின் பெயரைக் காணமுடிந்தது. அவரின் பெயர் Miss
Hollis Meynell என்றிருந்தது.
மிகுந்த முயற்சியின்
பின்னர் அவளது முகவரியை அவன் கண்டுபிடித்தான். முகவரியிலில் இருந்து அவள்
நியூயோர்க்கில் வசிப்பவள் என அறிய முடிந்தது. அவளுடன் கடிதத் தொடர்பு கொள்ள
விரும்பினான். எனவே அவன் தன்னை அறிமுகப்படுத்தி அவளுக்கு ஒரு கடிதம்
எழுதியிருந்ததுடன் தனக்கு பதில் எழுதும்படியும் அக்கடிதத்தில் கேட்டிருந்தான்.
அவன் நேவியில் பணியாற்றியதால் துரதிஷ்டவசமாக மறுநாளே இரண்டாம் உலகப் போரில் கடமையாற்றுவதற்காக
ஐரோப்பாவிற்கு போக வேண்fடியிருந்தது.
அவன் அந்த நூலகப் புத்தகத்தைத் தன்னுடனேயே எடுத்துச் சென்றிருந்தான். அவளது பதில்
திசை திருப்பப்பட்டு அவன் கடமையாற்றும் நாட்டுக்கு வந்து சேர்ந்தது. அழகாக
எழுதப்பட்ட அந்தக் கடிதத்தைக் படித்த போது அவளில் அவனுக்கு மேலும் ஈடுபாடு ஏற்பட்டது. அடுத்த 13 மாதங்களிலும் இருவரும் பல கடிதங்களைப் பரிமாறிக் கொண்டிருந்தனர்f. ஒவ்வொரு கடிதமும்
வளமுள்ள இதயங்களில் ஒரு விதையாக
வீழ்ந்து இரு நெஞ்சங்களிலும் காதல்
அரும்பத் தொடங்கியது. அவளது படத்தை அனுப்பும்படி அவன் ஒரு கடிதத்தில் கேட்டிருந்த
போதும் அவள் மறுத்துவிட்டாள். அவன் அவளை உண்மையாக நேசித்தால் அவளது தோற்றம்
எப்படியிருக்கிறது என்பது பற்றி அவன் கவலைப்பட வேண்டியதில்லை என்பது அவளது வாதம்.
இறுதியில் அவன்
ஐரோப்பாவிலிருந்து நாடு திரும்பும் நாளும் வந்தது. இருவரும் தமது முதல் சந்திப்பை
எங்கு வைத்துக் கொள்வது என்று தீர்மானித்திருந்தார்கள். அதன்படி நியூயோர்க் மத்திய
புகையிரத நிலையத்தில் மாலை 7.00 மணிக்குச் சந்திப்பதாக ஏற்பாடு. எனது ஆடையின் collar இல் நான்
அணிந்திருக்கும் சிவப்பு ரோஜாவிலிருந்து நீங்கள் என்னை அடையாளம் காண முடியும்
என்று அவள் தனது இறுதிக் கடிதத்தில் எழுதியிருந்தாள். அந்த நூலகப் புத்தகத்தைத்
தனது அடையாளமாக அவன் எடுத்து வருவதாகக் கூறியிருந்தான். அதனால் இன்று கையில் எப்போதும்
திருப்பித் திருப்பி அவளது எழுத்துகளைப் பார்த்ததால் நைந்து போன புத்தகத்தைக்
கையில் ஏந்திய வண்ணம் அவளைச் சந்திப்பதற்காக அவன் மனம் நிறைந்த இனிய பதட்டத்துடன்
மத்திய புகையிரத நிலையத்தில் காத்திருக்கிறான்.
திடீரென்று ஓா் அழகான பெண் அவனை நோக்கி வந்து கொண்டிருப்பதைக்
கண்டான். நீண்ட மெல்லிய அழகான உடலமைப்பை அவள் பெற்றிருந்தாள். அழகான சுருண்ட
பொன்னிறக் கூந்தல் நன்கு வடிவமைக்கப்பட்டிருந்த அவளது காதுகளின் பின் ஒதுங்கியிருந்தன. அவளது கண்கள் நீல மலர்கள் போல
அழகாக இருந்தன. அவளது இயல்பாகச் சிவந்திருந்த உதடுகளும் நாடியும் உறுதியானதாக
காட்சியளித்தன. இளம் பச்சை
நிறத்தில் அவள் அணிந்தி௫ந்த நேர்த்தியான
ஆடை அவளது அழகுக்கு மேலும் அணி சேர்த்தது. மொத்தத்தில் அவள் நடந்து வருவது வசந்த
தேவதை நடந்து வருவது போல மிக அழகான காட்சியாக இருந்தது. அவளது அழகில் அவன் மெய்
மறந்து இலயித்து தன்னையறியாமல் அவளை நோக்கி நடக்கத் தொடங்கினான். அவளது அழகைக்
கண்ட மயக்கத்தில் அவனது காதலி குறிப்பிட்fடிருந்தது போல கொலரில் ஒரு சிவப்பு ரோஜாவை அவள்
அணிந்திருக்கவில்லை என்பதை அவன் கவனித்திருக்கவில்லை. அவள் செல்லும் வழியில்
குறுக்காக வந்த அவனைப் பார்த்து பரிகாசமாக புன்னகைத்து -என்ன என் வழியில்
வருகிறாயே மாலுமியே - என்று கூறி அகன்று செல்ல முற்பட்டாள். அவன் அவளை நோக்கி இன்னோரடி
வைக்க முயன்ற வேளையில் தனது collar இல் ஒரு சிவப்பு ரோஜாவை அணிந்து வரும் Hollis Meynell ஐ அவன் கண்டான். அந்த
அழகிய பெண்ணுக்கு பின்னால் அவள் நின்றிருந்தாள்.
அந்த சிவப்பு ரோஜா அணிந்த
பெண் 40 வயதைக்
கடந்தவளாகவும் மொத்தமான உடலமைப்புக் கொண்டவளாகவும் காணப்பட்டாள். அதீத பாவனையால்
நைந்த தொப்பி ஒன்றை அணிந்திருந்தாள். அதன் கீழ் அவளது நரைத்த கூந்தல் தொங்கிக்
கொண்டிருந்தது. அவளது மொத்தமான கால்கள் குதிக்கால்களற்ற தட்டையான சப்பாத்தில்
திணிக்கப்பட்டிருந்தன. அவன் இந்தப் பெண்ணைப் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் அந்த
அழகான பெண் அவனைக் கடந்து சென்று மறைந்துவிட்டாள். அவன் தான் இரண்டாக பிரிந்து
விட்டது போல உணர்ந்தான். ஒரு பாதி அந்த அழகான பெண்ணின் பின் போய்விட்டது மற்றப்
பாதி அவன் கடிதம் மூலம் ஆத்ம ரீதியாகக் காதலித்த Hollis Meynell உடன் நின்றது.
அவன் சுதாகரித்துக் கொண்டு தனது உடலை நிமிர்த்திக் கொண்டு தன் முன்னே நிற்கும்
பெண்ணை நோக்கினான். அவளது வெளிறிய மொத்தமான
முகம் மென்மையாகக் காட்சியளித்தது. அவளது
புகை நிறமான கண்களில் கருணை
நிறைந்திருந்தது. அவன் தயங்கவில்லை. தனது அடையாளமாக அவன் கொண்டு வந்திருந்த நீல
நிற முகப்புள்ள அந்த நூலகப் புத்தகத்தைக் கைகளில் இறுக்கிப் பற்றிக் கொண்டான். அதனை இது வரை ஒரு
பொக்கிஷமாக அவன் பாதுகாத்திருந்தான். காதலை விட புனிதமான நட்பு இங்கு மலரலாம்.
அதற்காக அவன் அவளுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறான்.
அந்த புத்தகத்தை அந்த
முதிய பெண்ணிடம் நீட்டினான். அவளுடன் பேசிய போது அவளது முதிய அழகற்ற தோற்றத்தால்
அவனுக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தை மறைக்க முடியாது அவனது குரல் அடைத்தது. நான் Lieutenant
John Blanchard நீங்கள் Hollis Meynell ஆக இருக்க
வேண்டும். உங்களை இன்று சந்தித்ததில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நான்
உங்களை டினருக்கு அழைத்துச் செல்லாமா? அவன் கூறியதும் அந்தப் பெண்ணின் முகம் சிரிப்பினால்
அகலித்தது. மகனே, அந்தப் பெண்
மென்மையான குரலில் அவனை விளித்து பின்வருமாறு
கூறினாள். இது எதைப் பற்றி என்று எனக்குத் தெரியவில்லை. சற்று முன்னால் சென்ற
மெல்லிய பச்சை நிற ஆடையணிந்த இளம் பெண் இந்த சிவப்பு ரோஜாவை எனது collar இல் அணியும் படி
கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள். உங்களை டினருக்கு
வரும்படி அவன் அழைத்தால் நீங்கள் சம்மதிக்க வேண்டும். அத்துடன் வீதிக்கு எதிரே
உள்ள பெரிய உணவகத்தில் நான் அவனுக்காகக் காத்திருக்கிறேன் என்று நீங்கள் அவனுக்குச்
சொல்லவேண்டும். இது ஒருவிதமான பரீட்சை என்று அந்த அழகிய பெண் எனக்குச் சொன்னாள்.
குபீரென்று அவனது மனதில் ஒருவித ஆறுதலும் விவரிக்க முடியாத மகிழ்ச்சியும்
ஏற்பட்டது. Hollis Meynell இன் ஞானத்தை விளங்கிக் கொள்வதும் அதனை
ரசிப்பதும் கஷ்டமான காரியங்களாக அவனுக்குத் தெரியவில்லை. அவன் மனதில் உண்மையாக
உருவாகியிருந்த காதல்தான் அவளைப் பார்த்தவுடனேயே அவளை அடையாளம் காண உதவியிருக்க
வேண்டும். அவள் அவனது காதலைப் பரீட்சிக்க விரும்பிய போதும் அவனது மனம் அவளைக்
கண்டதும் அவள் பின்னேயே சென்றது. அவளைப் போல அழகான பெண்ணாக அவனது காதலி
இல்லாதுவிட்டிருந்தால் மகிழ்ச்சியுடன் அவன் ஏற்றுக் கொண்டிருப்பானா என்ற கேள்வி
அவனது அடி மனதில் எழாது விடவில்லை.
கவர்ச்சியற்ற ஒன்றைக்
காணும் போது எமது மனதின் உண்மை இயல்பை எம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. நீங்கள்
யாரை விரும்புகிறீர்கள் என்பதைச் சொல்லுங்கள் நீங்கள் யார் என்பதை நான் சொல்வேன்
என்ற ஒரு ஞானியின்
கூற்றில் உள்ள
உண்மை அவனுக்குப் புரிந்தது.
No comments:
Post a Comment