Monday 26 December 2016

கிறிஸ்மஸ் – வரலாறு


மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று பகவத் கீதையில் கிருஷ்ணர் கூறுவது போல மார்கழி மாதம் பல விதங்களில் இனிமையானது தான். எமது நாட்டில் விடியலில் உடலை நடுக்கும் பனிக் குளிரும் அதனிடையே வீதியில் திருவெம்பாவை பாடிச் செல்லும் பஜனைக் கோஷ்டியின் சங்கொலியும், தொலைவில் கோயிலில் கேட்கும் மணியோசையும் வீட்டு வாசல்களை அலங்கரிக்கும் கோலங்களும், செம்பரத்தம் பூக்களும், பகலில் குளிருக்கு இதமான வெய்யிலும், நத்தாரன்று இரவு ஆராதனைக்கு தேவாலயம் போய்விட்டுத் திரும்பும் மக்கள் கூட்டமும், பக்கத்து வீட்டுக் கிறீஸ்தவ நண்பர்கள் tray இல் ஏந்தி வரும் கிறிஸ்மஸ் கேக்கும் பலகாரங்களும், பாடசாலை விடுமுறையில் வீட்டில் நிற்கும் பிள்ளைகள் அடிக்கும் லுட்டியும், விடுமுறைக்கு கொழும்பிலிருந்து வந்து நிற்கும் உத்தியோகத்தர்களும்... அந்த நாட்களில் மகிழ்ச்சிக்கு குறைவேது. இலங்கையை விட்டு வெளியேறியதும் அந்தச் சிறிய சிறிய சந்தோஷங்களை எல்லாம் இழந்த போதும் இங்கு கிறிஸ்மஸ் காலத்தில் ஏற்படும் புதிய ஆரவாரங்கள் மனதுக்கு வேறு வித மகிழ்ச்சியை அளிக்கின்றன.
டிசம்பர் மாதம் பிறந்ததும் ஆரவராமும் கடை தெரு எங்கனும் அலங்காரங்களும் அலங்கார விளக்குகளும் நிறைந்து கிறிஸ்மஸ் வருகிறது என்று கட்டியம் கூறுகின்றன. கிறிஸ்மஸ் கீதங்கள் எங்கெனும் காதை இனிமையாக நிறைக்கின்றன. Santa Claus எனப்படும் கிறிஸ்மஸ் பப்பா சிவப்பு நிறப் பை நிறைய பரிசுப் பொருள்களுடன் வரப் போகிறார் என்று பிள்ளைகள் ஆவலுடன் காத்திருக்கும் காலம் இது. அவருடன் பிள்ளைகள் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காக கிறிஸ்மஸ் அலங்காரங்களுடன் புதிய சிறு கூடங்கள் ஆங்காங்கே முளைத்திருக்கின்றன. வீடுகள் மின் விளக்கு அலங்காரப் போட்டிக்காகத் தம்மை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. சிறிதும் தயக்கமும் மனச் சஞ்சலமும் இன்றிப் பணத்தைச் செலவு செய்வதற்கு மக்கள் தயாராகி கடைத் தெருவை முற்றுகையிடுகிறார்கள். எங்கும் மகிழ்ச்சிக்குக் குறைவில்லை. எனவே இன்று நத்தார் என்று தமிழில் வழங்கப்படும்  கிறிஸ்மஸின் வரலாறு பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் சற்று நோக்குவோம்.
கிறிஸ்மஸின் வரலாறு 4000 வருடங்களின் முன்னரே ஆரம்பித்துவிட்டது. கிறீஸ்து பிறக்க பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் உள்ள பல மரபார்ந்த பகுதிகள் தொடங்கிவிட்டன. 12 நாள் விழா, பிரகாசமான தீ , yule log, பரிசளித்தல், களியாட்ட ஊர்வலங்கள், வீடு வீடாகச் சென்று பாடும் Carole,  விடுமுறை விருந்துஅத்துடன் தேவாலய ஊர்வலங்கள் என்பன ஆரம்ப கால மொசப்பத்தேமியரிடம் காணப்பட்டன. இந்த மரபுகள் மொசப்பத்தேமியரின் புதுவருட கொண்டாட்டங்களுடனே ஆரம்பித்தன. அவர்கள் பல தெய்வங்களில் நம்பிக்கை கொண்டிருந்தனர். அவர்களது பிரதான தெய்வம் Marduk.. ஒவ்வொரு குளிர் காலத்திலும் இந்த தெய்வம் குழப்பம் விளைவிக்கும் அசுரருடன் போராடுவதாகவும், அதற்கு உதவுவதற்காகவே மொசப்பத்தேமியர் புது வருடத்தன்று கொண்டாட்டங்களை நடத்தினர் என்றும் கூறப்படுகிறது.  Zagmuk எனப்படும் இந்த புதுவருட கொண்டாட்டங்கள் 12 நாட்கள் நீடித்தன. பேர்ஷியரும் பபிலோனியரும் இதே போன்ற விழாவைக் கொண்டாடினர். அது Sacaea எனப்பட்டது. கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக அடிமைகள் எஜமானனராகவும் எஜமானர் அடிமைகளாகவும் இடம் மாறுவார்கள்.
ஆரம்ப ஐரோப்பியர் கெட்ட ஆவிகள், பேய்கள், அசுரர் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டிருந்தனர். நீண்ட குளிர் இரவுகளையும் குறுகிய பகல்களையும் கொண்ட குளிர் காலம் வரும் போது சூரியன் இனி திரும்பவும் வராது என பலர் அச்சமுற்றனர். பின்னர் சூரியன் வரும் போது அதனை வரவேற்கும் பல கிரியைகளும் கொண்டாட்டங்களும் நடை பெற்றன. ஸ்கந்திநேவிய நாடுகளில்  குளிர் கால மாதங்களில் சூரியன் பல நாட்களுக்கு முற்றாக மறைந்திருக்கும். 30 நாட்களின் பின் சாரணர்கள் சூரியனது வருகையைப் பார்ப்பதற்காக மலை உச்சிகளுக்கு அனுப்பப்பட்டனர். முதல் வெளிச்சத்தைக் கண்டதும் சாரணர்கள் நல்ல செய்தியுடன் ஊர் திரும்புவார்கள். பின்னர் Yuletide எனப்படும் பெரிய விழா கொண்டாடப்படும். Yule log எரிக்கப்படும் தீயில் விசேட விருந்து வழங்கப்பட்டது. வஸந்த காலமும், கோடை காலமும் மீண்டும் வரும் என்பதை நினைவூட்ட சில இடங்களில் மரங்களில் அப்பிள் பழங்களைக் கட்டித் தொங்கவிட்டனர். தமது தெய்வமாகிய Kronos, Zeus உடன் செய்யும் போருக்கு உதவுவதற்காக கிரேக்கரும் இவற்றைப் போன்ற விழாக்களை இக்காலத்தில் கொண்டாடினர்.
ரோமர் தமது தெய்வமான Saturn க்கு Saturnalia சற்றனலியா என்ற விழாவைக் கொண்டாடினர். அது டிசம்பர் மாத நடுப்பகுதியில் ஆரம்பமாகி ஜனவரி முதலாம் தேதி முடிவடைந்தது. இக்கொண்டாட்ட காலத்தில் விழாக்கால விருந்து, நண்பர் வீடுகளுக்குச் செல்லல், அதிஷ்டமளிக்கவல்ல பரிசுப் பொருட்களை பரிமாறுதல் ஆகியன இடம் பெற்றன. அத்துடன் தழைகளாலான மாலைகள், மெழுகுதிரிகளால் ஒளியூட்டப்பட்ட பச்சை மரங்கள் ஆகியவற்றைத் தமது வீட்டுக் கூடத்துள் நிரப்பினர். கூடவே அக்கொண்டாட்ட காலத்தில் அடிமைகள் எஜமானராகவும் எஜமானர் அடிமைகளாகவும் இடம் மாறி மற்ற நிலைகளில் உள்ள சந்தோஷங்களை அல்லது அதிகாரத்தை கஷ்டம் அல்லது துன்பத்தை உணர்ந்தனர். ஆரம்ப கிறீஸ்தவர்கள் தமது கிறீஸ்து குழந்தையின் பிறந்ததின விழாவை ஆரவாரமும் கொண்டாட்டங்களும் இல்லாத அமைதியான சமய விடுமுறையாக பேண விரும்பினர். ஆயினும் கிறீத்தவம் பரவ பரவ மதம் மாறியவர்களிடையே பண்டைய Saturnalia சற்றனலியா கொண்டாட்டங்களும் வழக்கங்களும் தொடரக் கண்ட கிறீஸ்தவர்கள் கலவரமடைந்தனர். ஆரம்பத்தில் தேவாலயம் இத்தகைய கொண்டாட்டங்களைத் தடை செய்தது. ஆனால் அது பயன்தராது போகவே காலப்போக்கில் கொண்டாட்டங்கள் மாற்றப்பட்டு, கிறீஸ்து நாதரின் பிறந்த தினத்துக்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட வேண்டும் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டது. 25ம் தேதி ரோமர்களுக்கு மட்டும் முக்கியமானதல்ல. மித்திரன் என்ற சூரிய தெய்வத்தை வழிபட்டு வந்த பேர்ஷியர்களுக்கும் அது முக்கியமான நாளாகும். மித்திர வழிபாடு ஆரம்ப காலத்தில் கிறீஸ்தவர்களுக்கு சவாலாக இருந்து வந்தது என்று கூறப்படுகிறது. காலப் போக்கில் கிறீஸ்தவம் Saturanilia சமயத்திலிருந்து விழா ஆரவாரத்தையும், விளக்கு ஏற்றுதலையும், பரிசு பரிமாற்றத்தையும் பெற்று அவற்றை கிறிஸ்மஸுக்கான கொண்டாட்டமாக மாற்றுவதில் வெற்றி கண்டது. கிறீஸ்து குமாரர் பிறந்த உண்மையான திகதி ஒரு போதும் குறிப்பிட்டுச் சொல்லப்பட்டதில்லை. கிபி 98ம் ஆண்டிலிருந்து கிறீஸ்துவின் பிறப்பு கொண்டாடப்பட்டு வருவதாக மரபுகள் தெரிவிக்கின்றன. கிபி 137ம் ஆண்டு ரோம் நகர Bishop கிறீஸ்துவின் பிறப்பு அமைதியாக கொண்டாடப்பட வேண்டுமென்று கட்டளையிட்டார். 350இல் என்னொரு Bishop ஆன முதலாவது Julius டிசம்பர் 25ம் தேதியை கிறிஸ்மஸ் தினமாக அறிவித்தார்.

கிறிஸ்மஸ் சின்னங்களிலும் மரபுகளிலும் Santa Claus எனப்படும் கிறிஸ்மஸ் பப்பாவே அதிகம் விரும்பப்படுபவர். மகிழ்ச்சி மிகுந்த முதியவர் reindeers ஆல் இழுக்கப்படும் sleigh எனப்படும் வண்டியில் உலகம் முழுவதும் உள்ள பிள்ளைகளுக்கு பொம்மைகளும் விளையாட்டுப் பொருள்களும் வழங்குவதாக பிள்ளைகளால் நம்பப்படுகிறது. அவர் உண்மையா பொய்யா என்ற ஆராய்ச்சிகளைவிட்டு சிறிய பிள்ளைகளை அவர்களது கற்பனை உலகில் சில காலம் வாழ நாம் அனுமதிக்க வேண்டும். இந்த நிதர்சன உலகின் கஷ்டங்களுக்குள் சிறு பிள்ளைகள் ஏன் பலாத்காரமாக இழுக்கப்படவேண்டும். அந்த அற்புதமான கற்பனை மன உலகில் அவர்கள் வாழ விடப்பட வேண்டும். கிறிஸ்மஸ் பப்பா பற்றிய கருத்து எவ்வாறு உருவாகி வளர்ந்தது என்று பார்ப்போம்.
Santa Claus பற்றிய வரலாறு சின்னாசியாவில் Myra மைரா (இந்த இடம் இப்போது Turkey யில் உள்ளது) என்ற இடத்தில் வாழ்ந்த Saint Nicholas என்பவருடன் ஆரம்பமாகிறது. அவர் தொண்டுக்கும் ஞானத்திற்கும் பெயர் போனவர். அவர் ஒரு செல்வந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும் தனது செல்வம் அனைத்தையும் ஏழைகளுக்கு வழங்கி மகிழ்ந்தார் என்று கூறப்படுகிறது. அவர் மந்திர சக்திகளைக் கொண்டிருந்தார் என்றும் நம்பப்படுகிறது. அவர் கிபி 340ல் காலமாகிய போது மைராவிலேயே புதைக்கப்பட்டார். 11ம் நுற்றாண்டின் பிற்பகுதியிலே சமயப் போர் வீரர்கள் அவரது உடலின் எஞ்சிய பகுதியை தம்முடன் இத்தாலிக்கு எடுத்துச் சென்றார்கள். தென் இத்தாலியில் உள்ள துறைமுக நகரமான Bari யில் அவரைக் கௌரவிக்க ஒரு தேவாலயம் கட்டினர். விரைவில் உலகமெங்கனும் இருந்து கிறீஸ்தவ யாத்திரிகர்கள் Saint Nicholas தேவாலயத்தை வழிபடச் செல்ல ஆரம்பித்தனர். அவர்கள் Saint Nicholas பற்றிய கதையைத் தத்தமது நாடுகளுக்கு எடுத்துச் சென்றனர். அக்கதைகள் அந்தந்த நாடுகளுக்குரிய இயல்புகளுடன் இணைந்து அங்கு நிலைபெற்றன.
ஐரோப்பாவில் 12ம் நூற்றாண்டில் Saint Nicholas க்குரிய தினம் பரிசு வழங்கல், வறியவருக்கு உதவுதல் என்பவற்றுடன் இணைந்த தினமாகியது. ஜேர்மனி, பிரான்ஸ், ஹொலன்ட் ஆகிய நாடுகள் டிசம்பர் 6ம் தேதியை சமய விடுமுறை தினமாக்கியதுடன் பிள்ளைகளுக்கும் வறியவருக்கும் அத்தினத்தில் பரிசுப் பொருட்களை வழங்கினர். டச்சுக் குடியேற்றவாதிகள் அமெரிக்காவுக்குச் சென்ற போது Bishop அணிவது போன்ற சிவப்பு ஆடையை அணிந்து வெள்ளைக் குதிரையில் செல்லும் Sinterklaas என்ற கருத்தையும் தம்முடன் எடுத்துச் சென்றனர். அமெரிக்காவில் இந்த எளிமையான Sinterklaas படிப்படியாக மகிழ்ச்சி நிறைந்த முதிர்ந்த குள்ளத் தோற்றம் உடைய உருவமாக மாறியது. Washington Irving என்பவர் தனது History of New York என்ற வேடிக்கை நூலில் Sinterklaas யை மொத்தமான சந்தோஷம் நிறைந்த டச்சு மனிதராக வர்ணித்துள்ளார். Sinterklaas/ St Nicholas இன்  இந்த உரு மாற்றம் 1823 ல் Clement Moor என்பவரின் கவிதையான A Visit from St. Nicholas (Twas the night before Christmas) இலும் தொடர்ந்தது. 1860 இல் cartoon வரைபவரான Thomas Nast என்பவர் illustrated Haper's Weekly என்ற சஞ்சிகையில் மொத்தமான இரக்கம் கொண்ட Santa Claus இன் படங்களை வரைந்து வெளியிட்டார். இந்த வடிவம் அமெரிக்க மக்களின் மனதில் இடம் பெறவே காலப் போக்கில் Santa Claus இன் இந்த வடிவம் பிரபலியம் அடைந்து உலகம் எங்கனும் பரவியது. Sinterklaas ஆக டச்சுக்காரரால் கொண்டு வரப்பட்ட வடிவம் புது உருவம் பெற்று மீண்டும் ஐரோப்பாவில் பரவியது. ஆயினும் பல நாடுகள் தத்தமது சொந்த நடைமுறைகளையும் மரபுகளையும் இன்றும் பேணி வருகின்றன.
சில பண்பாடுகளில் Saint Nicholasக்கு உதவுவதற்கு ஒரு உதவியாளரும் இணைக்கப்பட்டுள்ளார். ஹொலண்டில் Sinterklaas கப்பலில் பிரயாணம் செய்து டிசம்பர் 6 ம் தேதி நாட்டை வந்தடைவார். அவர் டச்சுப் பிள்ளைகள் கடந்த வருடத்தில் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்று தெரிவிக்கும் ஒரு பெரிய புத்தகத்தையும் கொண்டு வருவார். நல்ல முறையில் நடந்து கொண்ட பிள்ளைகள் அதற்கு வெகுமதியாக பரிசுகளைப் பெறுவார்கள். அவ்வாறு நடக்காத பிள்ளைகளை அவரது உதவியாளரான Black Peter பிடித்துச் செல்வார். ஜேர்மனியில் Saint Nicholas தனது உதவியாளருடன்  (Knecht Ruprecht, Krampus, or Pelzbock பிரயாணம் செய்வார். அவர் வரும் போது முதுகில் ஒரு பையையும் கையில் ஒரு பிரம்பையும் கொண்டு வருவார். நல்ல பிள்ளைகள் பரிசினைப் பெற குழப்படிப் பிள்ளைகள் உதவியாளரிடம் இருந்து சில பிரம்படிகளைப் பெறுவார்கள். (பிள்ளைகளின் குழப்படியைக் கட்டுப்படுத்த நல்ல வழி கண்டு பிடித்திருக்கிறார்கள்)
இத்தாலியில் La Befana ஒரு நல்ல சூனியக்காரி. அவள் கறுப்பாடை அணிந்து ஜனவரி மாதம் 6 ஆம் தேதி பிள்ளைகளுக்கு பரிசுப் பொருட்களைக் கொண்டு வருவாள். ஸ்பானிய நாடுகளான ஸ்பெயின், Puerto Rico, மெக்சிகோ, தென் அமெரிக்கா ஆகியவற்றில் பிள்ளைகள் Three Kings தமக்கு பரிசுப் பொருள் கொண்டு வருவார்கள் என்று ஆவலுடன் காத்திருப்பார்கள். பிரான்சில் Father Christmas (or Pere Noel) பிள்ளைகளுக்கு பரிசு கொண்டு வருவார். சுவிற்சலாந்தில் Christkindl அல்லது கிறீஸ்து குழந்தை பரிசு கொண்டு வருவார். சில இடங்களில் Christkindl என்பது விண்ணிலிருந்து பரிசுகளுடன் இறங்கி வரும் ஓர் இளம் பெண் தேவதை என்று கருதப்படுகிறது. ஸ்கந்திநேவிய நாடுகள் பரிசுகள் கொண்டு வரும் ஒரு குள்ள உருவம் julenisse அல்லது juletomte என்று கொண்டாடப்படுகிறது. இங்கிலாந்தில் எளிமையான மெலிந்த உருவம் கொண்ட Father Christmas பரிசு கொண்டு வருவார். வட அமெரிக்காவில் நல்ல மொத்தமான உருவம் கொண்ட Santa Claus ஹோ ஹோ ஹோ என்று கூறியபடி எட்டு ரெய்ன்டியர்களால் இழுக்கப்படும் sleigh என்ற வண்டியில் பறந்து உலகம் முழுமையும் உள்ள பிள்ளைகளுக்கு பரிசளிப்பதாகக் கருதப்படுகிறது. அமெரிக்காவில் Santa Claus பற்றி எடுக்கப்பட்ட பல திரைப்படங்கள் அவரைப் பற்றிய பல கற்பனை விஷயங்களை உண்மை போல காட்டி பிள்ளைகளை மகிழ்வூட்டுகின்றன.
இனி கிறிஸ்மஸ் tree எனப்படும் கிறிஸ்மஸ் மரம் பற்றிப் பார்ப்போம். பொது இடங்களில் பிரமாண்டமான மரங்கள் வைக்கப்பட்டு அவை வர்ண விளக்குகளாலும் அலங்காரப் பொருட்களாலும் அழகுபடுத்தப்பட்டு காண்பவர் மனதைக் கொள்ளை கொள்கின்றன. அதில் கண் சிமிட்டும் வர்ண மின்விளக்குகள் கிறிஸ்மஸின் நீண்ட கால இனிய நினைவுகளை மனதின் மேற்றளத்திற்குக் கொண்டு வருகின்றன. இப்போதெல்லாம் செயற்கை மரங்கள் வந்து விட்டன. ஆயினும் பலர் வீடுகளில் பச்சையான உண்மை மரக் கிளைகளையே வைக்க விரும்புகின்றனர்.
Christmas Tree அனைவரது விருப்பத்துக்குரிய பொருளாகவும் விடுமுறையைக் குறிக்கும் அடையாளச் சின்னமாகவும் இப்போது மாறியுள்ளது. இந்த மரம் பற்றிய மரபுகள் மிகப் பண்டைக்காலம் முதல் காணப்படுவதுடன் அது பல நூற்றாண்டு காலமாக குளிர்காலக் கொண்டாட்டங்களில் மிக முக்கிய பங்கை வகித்து வந்துள்ளது. தமது கடவுளரையும் ஆவிகளையும் கௌரவிப்பதற்காக கிறீஸ்தவத்திற்கு முந்திய பல சமயங்களின் கொண்டாட்டங்களில் இம்மரங்கள் பயன்படுத்தப்பட்டன. குளிர் காலத்தின் இருளும் குளிரும் முடிவடையும், அத்துடன் வஸந்த காலத்தின் பச்சை எங்கும் பரவும் படி மீண்டும் வரும் என்பதை நினைவூட்டும் ஒரு சின்னமே இந்த என்றும் பச்சையாக உள்ள evergreen மரம் என்று Vikings கருதினர். பண்டைய இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த Druids தமது அறுவடை தெய்வங்ளை கௌரவிப்பதற்காக ஓக் மரங்களை பழங்களாலும் மெழுகுதிரிகளாலும் அலங்கரித்தனர். ரோமர்கள் தமது Saturnalia சற்றனலியா கொண்டாட்டங்களில் மரங்களை மெழுகுவர்த்திகளாலும் சிறு அணிமணிகளாலும் (trinkets) அலங்கரித்தனர்.
கிறிஸ்மஸ் மரத்தைப் பற்றி பல பண்டைய கதைகள் உள்ளன. ஒரு கதையின் படி ஒரு தடவை பண்டைய மதவாதிகள் ஒரு குழந்தையைப் பலி வழங்குவதற்காக ஒரு ஓக் மரத்தைச் சுற்றி நின்ற போது Saint Boniface என்ற ஆங்கில பாதிரியார் அங்கு சென்றார். பலியை நிறுத்திக் குழந்தையைக் காப்பாற்றுவதற்காக அவர் தனது முஷ்டியால் குத்தி அந்த ஓக் மரத்தை வீழ்த்தினார். அந்த இடத்தில் உடனே ஒரு ஊசியிலை மரமான fir தோன்றியது. அதனை அவர் வாழ்வு மரம் (tree of life) என்றும் அது கிறீஸ்துவின் வாழ்வைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் அங்கே கூடி நின்றவர்களுக்குக் கூறினார். இன்னொரு கதையின்படி புரொட்டஸ்ரன்ற் சமயத்தை உருவாக்கிய Martin Luther ஒரு பின்னரவில் மரங்களிடையே நடந்து சென்றார். வானம் அன்று நிர்மலமாக இருந்ததால் மரக் கொப்புகளிடையே தெரிந்த மின்னும் தாரகைகள் அவருக்கு கொப்புகளில் விளக்குகள் கண் சிமிட்டுவது போல தெரிந்தன.  அந்த அபரீதமான அழகால் கவரப்பட்ட அவர் ஒரு பச்சை ஊசியிலை மரக் கொப்பொன்றைத் தறித்து வீட்டிற்கு எடுத்துச் சென்றார். அதனை எரியும் மெழுகு திரிகளால் அலங்கரித்ததன் மூலம் தான் கண்ட காட்சியை மீண்டும் உருவாக்கினார்.
வீட்டிற்குள் கிறிஸ்மஸ் மரத்தை வைக்கும் மரபு ஜேர்மனியில் ஆரம்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கடும் குளிரிலும் மாறாத பச்சை இலையுடன் கூடிய மரங்களுக்கு அமானுஷ சக்திகள் உள்ளனவாகக் கருதப்பட்டது. இவற்றை வீட்டுக்குள் வைப்பதால் குளிர் கால தெய்வங்களின் கோபத்திலிருந்து தப்பலாம் என்ற நம்பிக்கையும் அவர்களிடையே இருந்தது.  ஜேர்மானிய கிறீஸ்தவர்கள் அலங்கரிப்பதற்காக இம் மரக்கிளைகளை வீட்டுக்குள் கொண்டு வந்தனர். சில இடங்களில் இந்த ஊசியிலை மரக் கொப்புகளைப் பெற முடியாததால் வீட்டிற்குள் ஒரு பிரமிட்டை உருவாக்கினார்கள். எளிமையான மர அமைப்பின் மேல் சிறிய மரக் கொப்புகளாலும் மெழுகுவர்த்திகளாலும் அலங்கரித்தனர். இந்த கிறிஸ்மஸ் மரம் வைக்கும் மரபு காலப் போக்கில் ஐரோப்பா முழுவதும் பரவியது. 1841ஆம் ஆண்டு Winsor Castle லில் முதலாவது கிறிஸ்மஸ் மரத்தை அலங்கரித்ததான் மூலம் அரச குடும்பத்தினர் இதனை இங்கிலாந்தில் பிரபலியமாக்கினார்கள். விக்ரோறியா மகாராணியின் கணவரான இளவரசர் அல்பேட் இந்த முதலாவது கிறிஸ்மஸ் மரத்தை மெழுகுவர்த்திகள், பழங்கள், இனிப்புகள், gingerbread ஆகியவற்றால் அலங்கரித்தார்.
ஜேர்மனியர் அமெரிக்காவில் குடியேறிய போது தமது கிறிஸ்மஸ் மரபையும் உடன் கொண்டு சென்றிருந்தனர். 1830களில் பல அமெரிக்கர் அதனை விசித்திரமாகவே பார்த்தனர். ஜேர்மானிய குடியேற்றவாசிகள் முதல் பொது இட கிறிஸ்மஸ் மரத்தை, அதாவது first public display of a Christmas tree, பென்சில்வேனியாவில் அமைத்தனர். அந்த நேரத்தில் பல அமெரிக்கர் அதனை பண்டைய சமயத்தவரின் சின்னமாகவே பார்த்தனர். 1800 களின் பின் அமெரிக்கர் மெதுவாக கிறிஸ்மஸ் மரத்தை ஏற்க ஆரம்பித்தனர். ஆரம்ப கிறிஸ்மஸ் மரங்கள் அப்பிள், nuts, cookies,  நிறமூட்டப்பட்ட சோளப்பொரி, மெழுகுவர்த்தி ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டன. 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அலங்கார மின் விளக்குகள் கிறிஸ்மஸ் மரம் வைக்கும் வழக்கத்தை அதிகம் பரப்பியது. இன்று அமெரிக்காவில் எல்லா சமூகத்தவரும் தமது சமூக பிரதிநிதித்துவமாக பொது இடத்தில் ஒரு கிறிஸ்மஸ் மரத்தை வைக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் அமெரிக்க ஜனாதிபதி Washington னிலும் New York இலும் தேசிய கிறிஸ்மஸ் மரங்களை ஒளியூட்டுவதன் மூலம் திறந்து வைப்பார்.  ஐரோப்பா முழுவதும் ஏன் உலகம் முழுவதும் கிறிஸ்மஸ் மரம் ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன் இன்று மிகவும் விரும்பவும்படுகிறது.
இனி கிறிஸ்மஸ் ஸ்ரொக்கிங்ஸ் எனப்படும் பரிசுப் பொருட்கள் நிறைப்பதற்காக கிறிஸ்மஸின் போது தொங்கவிடப்படும் உறைகள் பற்றிப் பார்ப்போம். இவை கிறிஸ்மஸ்பப்பா விரைவில் அங்கு வருவார் என்ற நம்பிக்கையுடன் புகைக்கூட்டருகில் தொங்கவிடப்படுகிறது. இந்த வழக்கம் தோன்றிமை குறித்து ஒரு சம்பவம் கூறப்படுகிறது.  ஒரு உயர்குடி மனிதரின் மனைவி நோயின் காரணமாக அவரையும் மூன்று மகள்களையும் துன்பத்தில் தவிக்கவிட்டு இறந்து போனாள். தவறான இடங்களில் முதலீடு செய்ததால் பணத்தையும் அவர் இழந்து போக மூன்று பெண்களும் அவரும் ஒரு சிறிய வீட்டில் வசிக்க நேர்கிறது. அங்கே அவர்களே சமையல், தையல், துப்பரவு செய்தல் ஆகிய வேலைகளைச் செய்ய நேர்ந்தது. அப்பெண்கள் திருமண வயதை அடைந்ததும் அவர்களுக்குத் திருமணம் செய்து கொடுக்கப் பணமில்லாததால் தந்தை பெரிதும் விரக்தியடைந்தார். ஒருநாள் இரவு பெண்கள் தமது ஆடைகளைக் கழுவிய பின் ஸ்ரொக்கிங்ஸ் எனப்படும் காலுறைகளை காய்வதற்காக தீ வளர்க்கும் இடத்திற்கு மேலாக புகைக் கூட்டருகில் தொங்கவிட்டிருந்தனர். Saint Nicholas அந்தத் தந்தையின் துக்கத்தை அறிந்தவராக அவர்களது வீட்டருகில் வந்தார். யன்னலினூடாகப் பார்வையிட்ட போது அனைவரும் நித்திரைக்குச் சென்றுவிட்டதையும் பெண்களின் காலுறைகள் தீ வளர்க்கும் இடத்திற்கு மேலாகத் தொங்குவதையும் அவதானித்தார். அவர்களுக்கு உதவ எண்ணிய அவருக்கு திடீரென்று ஒரு எண்ணம் உதயமாயிற்று. தனது பையிலிருந்து மூன்று சிறிய பொன் நாணயங்கள் நிறைந்த பொதிகளை எடுத்து காய்ந்து கொண்டிருந்த பெண்களன் காலுறை மூன்றுக்குள்  புகைக் கூட்டினூடாகப் போட்டார். அவை நேராக காலுறைகளுள் சென்று விழுந்தன. மறுநாள் காலை தமது திருமணத்திற்குப் போதுமான பொன் நாணயங்கள் அக்காலுறைகளுள் இருப்பதை அப்பெண்கள் கண்டனர். அந்தப் பொன் நாணயங்களைக் கொண்டு தந்தை தனது மூன்று பெண்களுக்கும் திருமணம் செய்து கொடுத்தார். அவர்கள் திருமணம் செய்து சந்தோஷமாக நீண்ட காலம் வாழ்ந்தனர். இந்த சம்பவத்தின் காரணமாக கிறிஸ்மஸின் போது புகைக் கூட்டுக்குக் கீழே காலுறைகளைத் தொங்கவிடும் பழக்கம் ஆரம்பமாகியது.
கிறிஸ்மஸ் பப்பா பரிசுகளைப் போடுவார் என்ற எதிர்பார்ப்பில் உலகம் முழுவதும் உள்ள பிள்ளைகள் கிறிஸ்மஸின் போது புகைக் கூட்டின் கீழே காலுறை வடிவில் அமைந்த பைகளைத் தொங்கவிடுகின்றனர். பிரான்சில் அதிக காலத்தின் முன்னர் சிறுவர்கள் விவசாயிகள் அணியும் Boots களை அணிந்ததால் இன்றும் அவற்றையே புகைக் கூட்டின் கீழ் வைக்கின்றனர். ஹொலண்டில் Sinterklass இன் குதிரைக்காக பூட்ஸ்களுள் வைக்கோலையும் கரட்களையும் பிள்ளைகள் நிரப்பி வைக்கின்றனர். ஹங்கேரியில் உள்ள பிள்ளைகள் வாசலருகில் அல்லது யன்னலருகில் வைப்பதன் முன்னர் Boots களுக்கு பொலிஷ் போட்டுப் பளபளப்பாக்குகின்றனர். ஜனவரி ஐந்தாம் தேதி இரவு இத்தாலியப் பிள்ளைகள் La Befana என்ற நல்ல சூனியக்காரிக்காகத் தமது சப்பாத்துகளை வெளியே வைக்கின்றனர். Puerto Rico வில் உள்ள பிள்ளைகள் Three Kings ஏறி வரும் ஒட்டகங்களுக்காக இலைகளும் பூக்களும் நிறைத்த பெட்டியைத் தமது படுக்கைக்கு கீழ் வைக்கின்றனர். 

கிறிஸ்மஸ் காலத்தில் பலவித செடிகளின் இலைகள் அலங்காரத்திற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இவை அனைத்தும் வட துருவ நாடுகளில் காணப்படுபவை. அநேகமான செடிகள் அங்கு குளிர் காலத்தில் முற்றாக மறைந்து வஸந்த காலத்தின் போது மீண்டும் தலை காட்டுவன. ஆயினும் கிறிஸ்மஸில் பயன்படுத்தப்படும் செடிகள் அனைத்தும் கடும் குளிர் காலத்திலும் மறையாததுடன் பச்சை நிறமுடையதாகவும் இருக்கும். அதனால் அவற்றிற்கு அமானுஷ சக்தி இருப்பதாக பழைய காலத்தில் நம்பப்பட்டது. அதனால் மரக்கிளைகளை வெட்டி வந்து வீட்டிற்குள் வைத்தனர். காடுகளில் தாவர வாழ்வை உறுதிப்படுத்துவதற்காகவும், வீடுகளைக் குளிர்காலத் தெய்வங்களின் கோபத்திலிருந்து பாதுகாப்பதற்காகவுமே இவ்வாறு செய்தனர் என்று கூறப்படுகிறது.
அநேகமான கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டைகளை அலங்கரிக்கும் இன்னொரு கிறிஸ்மஸ் அலங்காரமானது பசிய முள் செறிந்த இலைகளையும், வெள்ளைப் பூக்களையும் சிவப்பு நிறப் பழங்களையும் கொண்ட holly என்ற தாவரம் ஆகும்.  இவை கெட்ட ஆவிகளை அகற்றும் என்ற நம்பிக்கை பண்டைய சமயங்களில் காணப்பட்டது. முதன் முதலாக ரோம நாட்டில் நடைபெற்ற விவசாயத் தெய்வத்துக்குரிய கொண்டாட்டமான Saturnalia சற்றனலியாவில் தெய்வத்தின் சிலைகளை அலங்கரிப்பதற்கு இவை பயன்படுத்தப்பட்டன. அத்துடன் அந்த இலைகள் அயலவருக்குப் பரிசளிப்பதற்காக வளையங்களாகப் பின்னப்பட்டன. கிறிஸ்தவத்தைப் பின்பற்றியவர்கள் கொல்லப்பட்ட போது, அதிகாரிகள் சந்தேகிக்காத வண்ணம் மக்கள் தமது வீட்டு வாசல்களில் இந்த இலைகளால் ஆக்கப்பட்ட வளையங்களைத் தொங்கவிட்டனர் என்று கூறப்படுகிறது. கிறீஸ்தவம் பின்னர் ரோம சாம்ராச்சியம் முழுவதும் பரவிய போது வாசலில் தொங்கவிடப்பட்ட இந்த வளையங்கள் அதன் அடையாளச் சின்னமாகியது. இன்றும் இந்த ஹொலியின் இலைகளாலான செயற்கை வளையங்கள் வாசலில் தொங்கவிடப்படும் மரபை நாம் காணலாம். முன்னர் இதன் பழங்கள் வெள்ளை நிறமாக இருந்தன என்றும் ஜேசு நாதரின் ரத்தத்தாலேயே இவை சிவப்பாக மாறின என்றும் நம்பப்படுகிறது.
கிறிஸ்மஸ் காலத்தில் உபயோகிக்கப்படும் இன்னொரு தாவரமான வெள்ளைப் பழங்களைக் கொண்ட குருவிச்சையினமான mistletoe என்பதும் பண்டைய வாழ்வுடன் தொடர்பானது. இதனுடன் தொடர்பாக பல கதைகள் உள்ளன. இது மரத்தின் மேற் கொப்புகளில் இருந்து கீழ் நோக்கி வளர்ந்ததால் இது எங்கிருந்தோ வளர்ந்து வருகிறது என்று கருதி அதற்கு மந்திர சக்தி உள்ளதென்று நினைத்தனர். அத்துடன் நோய் நீக்கும் தன்மையும் தீமையை ஓட்டும் சக்தியும் இருப்பதாக எண்ணினர். ட்டுயிட் இனத்தவர் இத்தாவரம் ஆரோக்கியத்தையும் நல்லதிஷ்டத்தையும் கொண்டு வரும் என்று நம்பினர். இத்தாவரத்தின் கீழ் முத்தமிடுதல் பற்றிய நம்பிக்கை வளத்துடன் தொடர்பாக ஆரம்பிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் இது இளமையில் திருமணம் நடக்கும் சந்தர்ப்பத்தை அதிகரிக்கும் என்றும் நம்பப்பட்டது. இந்த இலைகள் முற்காலத்தில் பிள்ளைகள் அற்ற பெண்களுக்கு மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டது.
கிறிஸ்மஸின் போது எல்லோரும் இணைந்து பாடும் வழக்கமும் பண்டைய மரபான குளிர்கால முடிவையிட்டுச் செய்யப்பட்ட இன்னொரு விவசாய நடவடிக்கையுடன் தொடர்புபட்ட களியாட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இந்கிலாந்தில் குடும்பங்கள் இணைந்து பாடிய படி அப்பிள் தோட்டத்திற்குச் சென்று அப்பிள் பழச் சாற்றிலான குடிவகையை அப்பிள் மரங்களின் வேரில் தௌித்தனர். இது நல்ல அப்பிள் பழ அறுவடையைத் தரும் என்ற நம்பிக்கையில் செய்யப்பட்டது.
வாழ்த்து இல்லாத கிறிஸ்மஸா? இன்று கோடிக்கணக்கில் உலகெங்கும் அனுப்பப்படும் இந்த வழக்கம் 1846ம் ஆண்டளவில் உருவானது என்று கூறப்படுகிறது. கிறிஸ்மஸ் என்றதும் நினைவுக்கு வரும் இன்னொரு முக்கிய விடயம் கிறிஸ்மஸ் விருந்தாகும். ஒவ்வொரு பண்பாட்டினரும் தமது நாட்டின் வளமைக்கும் சுவாத்தியத்திற்கும், தமது சுவைக்கும் அந்தந்த இடங்களில் கிடைக்கும் உணவு வகைகளுக்கும் ஏற்ப விருந்தைத் தயார் செய்கிறார்கள்.
ஜேர்மானிய மரபின் படி கிறிஸ்மஸின் முதல் நாள் நன்றாக உண்ணாவிடின் அவர்கள் அசுரர்களால் பாதிக்கப்படுவார்கள். இதனால் மிக அதிகமான உணவு வகைகளுடன் பெரிய விருந்து தயாரிக்கப்படுகிறது. அவர்களது சுவைக்கேற்ப எல்லாவித இறைச்சி வகைகளையும் தயாரிப்பார்கள். அத்துடன் வீட்டு அமைப்பில் செய்யப்பட்ட இஞ்சிப்பாண் உட்பட நிறைய இனிப்பு வகைகளையும் இந்த விருந்துக்கென செய்வார்கள். பிரான்சியர் நடு இரவு ஆராதனையின் பின் le Reveillon லெ ரெவெய்லன் என அழைக்கப்படும் உணவை உண்பார்கள். ஒரு காலத்தில் இந்தோ சீனா பிரான்சின் ஆட்சியின் கீழ் இருந்ததால் பல கிறீஸ்தவ வியட்நாமியரும் இந்த உணவையே கிறிஸ்மஸ் விருந்தின் போது உண்கின்றார்கள். கனடாவிலுள்ள பிரான்சியரும் இந்த உணவை கிறிஸ்மஸின் போது உண்பார்கள். ஆயினும் பிரான்சில் உணவு இடத்துக்கு இடம் மாறுபடும். தென் பிரான்ஸில் ((pain calendeau எனப்படும்) ஒருவித விசேட பாணைத் தயாரிப்பார்கள். அதன் முதல் slice யை வறியவர் ஒருவருக்குக் கொடுத்த பின்னரே வீட்டுக்காரர் அதனை உண்ண முடியும். சொக்லற் yule log கிறிஸ்மஸ் காலத்தில் உண்ணப்படும் ஒரு மரபு ரீதியான உணவு. பண்டைய கால சமயத்தில் குளிர் காலத்தின் நடுப்பகுதியில் கொண்டாடப்பட்ட விழாவின் போது வீடுகளில் எரிக்கப்பட்ட yule log யை நினைவு கூரும் விதமாகவே இந்த இனிப்பு செய்யப்படுகிறது. 
ஆங்கிலம் பேசும் உலகில் உள்ள மிக விசேட கிறிஸ்மஸ் உணவு Christmas pudding.. அதில் நூற்றுக்கணக்கான மாறுபட்ட வகைகள் உள்ளன. மரபு ரீதியான pudding bake செய்யப்படுவதில்லை, ஆவியில் வேக வைப்பதே. இது 14ம் நூற்றாண்டில் கிறிஸ்மஸின் முன்னர் உண்ணப்பட்ட பழக்கூழிலிருந்து உருவாகியது. கிறிஸ்மஸ் ராஜா, அல்லது ராணியைத் தெரிவு செய்வதற்காக pudding க்குள் ஒரு நாணயத்தைப் போடும் ஆரம்பகால மரபு பெரும்பாலும் பண்டைய கால சமயத்தில் காணப்பட்ட மரபிலிருந்து உருவாகியிருக்கலாம். அவர்கள் கதிர்திருப்பத்தின் ஆட்சியாளன் யார் எனக் கண்டு பிடிப்பதற்காக ஒரு நாணயம் அல்லது அவரை விதையை பாண் அல்லது பிஸ்கட்டுக்குள் வைத்துத் தயாரிப்பார்கள்.
ஐரோப்பியர் முதலில் அவுஸ்திரேலியாவிற்கு வந்த போது அவர்கள் தமது கிறிஸ்மஸ் மரபுகள் அனைத்தையும் கொண்டு வந்தனர். ஆனால் அவற்றில் பெரும்பான்மையானவை குளிர் சுவாத்தியத்திற்கு ஏற்ற மரபுகளே. பிரித்தானியாவில் இருந்து வந்தவர்கள் கிறிஸ்மஸின் போது சூடான உணவுகளை அகற்றி குளிரான இறைச்சி, கடலுணவு, salads ஆகியவற்றை உண்கிறார்கள். ஆயினும் turkey, pudding, fruit minced pies ஆகிய மரபுணவுகளும் இடம் பெறாது போகவில்லை. இங்கு குடியேறியவர்களால் அறிமுகம் செய்யப்பட்ட பல உணவு வகைகளும் கிறிஸ்மஸ் விருந்துகளில் இடம் பெறத் தவறவில்லை. கோடை காலத்தில் வரும் கிறிஸ்மஸ் பலரால் Beach இல் கொண்டாடப்படுவதுடன் கடலுணவும் விருந்தில் அதிகம் சேர்க்கப்படுகிறது.
இவையே கிறிஸ்மஸ் பற்றிய மரபுகள். கிறிஸ்மஸ் உலகம் முழுவதிலுமுள்ள கிறீஸ்தவர்களால் கொண்டாடப்பட்ட போதும் பல அம்சங்கள் பண்டைய ஐரோப்பிய சமயங்களின் சமய மரபிலிருந்து எடுக்கப்பட்டு தமது நாட்டிற்கேற்ப மாற்றப்பட்டப்பட்டனவே.  உலகின் வட பகுதியில் உள்ள நாடுகளில் ஏற்படும் கடும் குளிர் அதற்கேற்ற முறையில் கொண்டாட்டங்களை அமைத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியது. குளிர் இடத்தில் உருவான கிறீஸ்தவம் செல்வாக்குப் பெற்ற போது பண்டைய மரபிலிருந்த பல அம்சங்களை ஏற்றுக் கொள்ளுதல் தவிர்க்க முடியாததே. புதிய சமயம் பரவும் போது மக்களிடையே ஏற்கெனவே உள்ள வழிபாட்டு அம்சங்களை ஏற்றுக் கொள்ளுதல் என்பது உலக நாடுகள் பலவற்றின் சமய வரலாற்றில் பல தடவைகள் நடை பெற்றதொன்றே. எந்த வழிபாட்டு முறையும் அதனதன் சுவாத்தியம் விவசாய முறைக்கமைவாகவே தனது சமயக் கொண்டாட்டங்களை அமைத்துக் கொள்ளும். குளிரும் இருளும் அதிகரிக்க அதிகரிக்க ஒளியூட்டும் விழாக்கள் அதிகரிப்பது என்பது எந்த பண்பாட்டுக்கும் உரிய வழக்கமாகும். இதனால் கிறிஸ்மஸ் குளிர் காலத்தில் வருவதால் ஒளியூட்டுதல் அதன் மூலம் சிறிது வெப்பமூட்டுதல் என்பது கொண்டாட்டங்களின் அடிப்படையாயிற்று. கிறீஸ்தவம் உருவான இஸ்ரேலில் காணப்படும் ஜூயிஷ் சமயத்தில் இந்தக் காலத்திலேயே Chanukah என்ற festival of lights கொண்டாடப்படுகிறது. பண்டைய சமயத்தவரிடம் இருந்து தமது பெரிய கோயிலை மீட்டு உடனே ஏற்றிய விளக்கு ஒரு நாளுக்கு அளவான எண்ணெயில் எட்டு நாட்கள் எரிந்தமையை நினைவு கூரும் முகமாக இந்த கொண்டாட்டத்தின் போது menorah என்ற விளக்கை ஏற்றுவார்கள். குளிர் இடங்களில் எண்ணெய் உறைந்து கல்லாகப் போய்விடும் என்பதால் மெழுகுதிரியை அவர்கள் உருவாக்கி அதனால் ஒளியூட்டினர். வெப்பமான இடங்களில் எண்ணெய் விளக்கேற்றினர்
கிறிஸ்மஸின் போது ஏற்றப்படும் ஒளி அலங்காரத்தின் அழகைப் பார்க்க வேண்டுமானால் வட துருவ நாடுகளில் ஒன்றிற்குப் போகவேண்டும். கடை தெருக்களிலும் வீடுகளiன் வாசல்களiலும் யன்னல்களiலும் காணப்படும் வெளிச்ச அலங்காரத்தைக் காணக் கண் கோடி வேண்டும். எங்களுர் கோயில் வாசலில் கற்பூரம் எரியும் stand போன்றவற்றில் வழியெங்கும் குளிரைப் போக்குவதற்காக எண்ணெய் விளக்குகள்  ஏற்றப்பட்டிருக்கும். அவுஸ்திரேலியாவில் கடுங் கோடையில் கிறிஸ்மஸ் வருவதால் அதனுடன் கூடிய வெளிச்சங்களையும் அலங்காரங்களையும் வட உலகில் ரசிப்பதைப் போல இங்கு ரசிக்க முடியாது.
இன்று கிறிஸ்மஸை வர்த்தகர்கள் பரிசளிப்பதற்கும் அலங்கரிப்பதற்கும்  மட்டும் உரிய ஒரு காலம் என்று எண்ணும்படி மாற்றித் தமது பொருட்களை அதிகமாக விற்பதற்கேற்ற வகையில் ஆடம்பரமாக்கியுள்ளனர். அதனால் பலர் கிறீஸ்தவ சமயம் குறிப்பிடும் பல நல்லெண்ணச் செய்திகளை மறந்து வெறும் மரபார்ந்த கொண்டாட்டமாகவே நோக்குகின்றனர்.  கிறிஸ்மஸின் உண்மையான தாற்பரியம் உலகை ரட்சிக்க வந்த கிறீஸ்து நாதரின் பிறப்பை நினைவு கூருதலுடன் மகிழ்ச்சியையும் அன்பையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதே. குடும்பங்கள் ஒன்றிணைந்து விருந்துண்பதன் மூலம் குடும்ப ஒற்றுமையையும் ஒருவருக்கொருவரான கரிசனையையும் மீளமமைப்பதே. நண்பர்களும் மற்றவர்களும் இந்த வருடம் முழுவதும் செய்த உதவிகளுக்கு நன்றி தெரிவிப்பதே. அதே நேரம் அல்லது செய்தவர்களை பெரிய மனதுடன் மன்னிப்பதே. இந்த வர்த்தக ஆடம்பரங்களுக்கு மத்தியில் கிறிஸ்மஸைக் கொண்டாடுவதற்குப் பணமும் வசதிகளும் இல்லாதவர்களுக்கும் கண்களில் கனவுகளை மட்டும் தேக்கி நிற்கும் வறிய குழந்தைகளுக்கும் வழங்கி அவர்களது முகத்தில் மகிழ்ச்சியைக் காண்பதே. இவையே உண்மையில் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தின் தாற்பரியங்கள். அத்துடன் இவையே இன்பமும் திருப்தியும் தரும் செயல்களாகும்.
இன்று மனதைத் தொடும் ஒரு கதையுடன் இதனை நிறைவு செய்வோம். இக்கதை எமது உள்ளத்தைத் தொடுவதுடன் எம்மை சிந்திக்கவும் வைக்கும். பரிசு என்பது அக்கதையின் தலைப்பு. முதலில் கதையைக் கேட்போம். அது ஒரு குளிர் கால மாலைப் பொழுது. வெளியே வானத்தில் இருந்து வெள்ளை மலர்கள் உதிர்வது போல வெண்பனி காற்றில் மிதந்து மிதந்து உதிர்ந்து கொண்டிருந்தது. காலை முதல் உதிர்ந்த பனியால் நிலம் வெள்ளை மணல் பரப்பு போல மாறியிருந்தது. அன்று கிறிஸ்மஸ் eve.. குடும்ப அங்கத்தவர்கள் பரிசுப் பொருட்களை பரிமாறிக் கொள்கிற நாள். தனது சிறிய வீட்டின் பின் வளவில் பனிப்பரப்பின் மேல் யோசனையுடன் அமர்ந்திருந்த ஆறே வயது நிரம்பிய Bobby குளிருக்கேற்ற ஆடைகளையோ பூட்ஸையோ அணிந்திருக்கவில்லை. அவை அவனிடம் இல்லை என்பதே உண்மை. அவன் அணிந்திருந்த மிகச் சாதாரண சப்பாத்தில் கூட பல துவாரங்கள் இருந்தன. இதனால் குளிரிலிருந்து அவனது கால்களைப் பாதுகாக்கும் சக்தி அவற்றுக்கு அறவே இல்லை. மிக அதிக உபயோகத்தால் நைந்து போன கம்பளி ஆடைகள் அவனது உடலைக் குளிரிலிருந்து காப்பாற்றும் சக்தியைப் பெருமளவில் இழந்திருந்தன. ஆயினும் அந்த கடும் குளிர் அவனுடலைத் தாக்குவதே தெரியாத அளவுக்கு அவன் கடந்த ஒரு மணி நேரமாக யோசனையில் ஆழ்ந்திருந்தான். அம்மாவுக்கு இந்த கிறிஸ்மசுக்கு என்ன பரிசளிப்பது என்ற கேள்வியே அவனது மனம் முழுவதும் வியாபித்திருந்தது. என்ன வழங்குவது என்று தீர்மானித்தால்கூட அதனை வாங்குவதற்கு அவனிடம் ஒரு சதம் கூட இல்லை. என்ன செய்வது? அவனது தலையைக் குடையும் இந்த கேள்வியைத் தலையை ஆட்டி உதறப் பார்த்தான். அப்படியும் அது அவனை விடாது சுற்றிச் சுற்றிக் கொண்டிருந்தது.
மூன்று வருடங்களுக்கு முன் அவனது தந்தை இறந்த பின்னர் ஐந்து பேர் கொண்ட அந்த குடும்பம் வறுமையால் தத்தளித்துக் கொண்டிருந்தது. அவனது அம்மா இரவில் ஒரு வைத்தியசாலையில் வேலை பார்த்த போதும் அவள் கொண்டு வரும் பணம் ஐவரும் அரை வயிறு சாப்பிடவே சரியாகிப் போகும். அவர்களது சின்னஞ் சிறிய வீட்டில் எவ்வித பொருட்களோ பணமோ இல்லை. ஆனால் அன்பும் குடும்ப ஐக்கியமும் தாரளமாக இருந்தன. பொபிக்கு மூன்று அக்காமார்  இருந்தனர். அம்மா வேலைக்கும் போகும் நேரங்களில் குடும்பத்தைக் கவனித்துக் கொள்பவர்கள் அவர்களே. அவர்கள் மூவரும் இணைந்து தமது கைத் திறமையால் தம்மிடம் உள்ள பொருட்களை கொண்டு தாய்க்கு அழகான பரிசுப் பொருட்களை உருவாக்கி வைத்திருந்தனர். அவனிடம்தான் தாய்க்கு வழங்குவதற்கு எதுவுமில்லை. இது ஒருவிதத்திலும் நியாயமில்லை. அம்மாவில் தான் கொண்டுள்ள அன்பைக் காட்டும் வகையில் அவருக்கு ஏதாவது பரிசு கொடுக்க அவனிடம் பணமோ அல்லது குறைந்தது சகோதரிகள் செய்து வைத்திருப்பது போன்ற கைவினைப் பொருட்களோ கூட இல்லை. அவனை கவலை முற்றாக ஆட்கொண்டது. தனது ஆற்றாமையை நினைத்து நினைத்து அழுது கொண்டிருந்தான். 
வீட்டின் பின்வளவில் வெறுமனே பனியில் அமர்ந்திருப்பதால் அதிசயம் ஏதும் நடக்கப் போவதில்லை. வெளியே போய் பார்த்தால் ஏதாவது வழி பிறக்கக்கூடும் என்று நினைத்து தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு எழுந்தான். மேனியில் கொட்டியிருந்த பனியை தன் உடலை குலுக்கி அசைத்து உதிர்த்துக் கொண்டு புறப்பட்டான். வீதியில் நடக்கும் போது பணம் இல்லாத அவனால் என்ன பரிசை வாங்கி விட முடியும் என்ற அவநம்பிக்கை அவனது அடி மனதில் இருந்து சதா எட்டி எட்டிப் பார்த்து அவனைச் சித்திரவதை செய்து கொண்டிருந்தது. ஆறு வயதே நிரம்பிய அவனுக்கு ஆலோசனை சொல்வதற்கு தந்தை இல்லாதது எவ்வளவு பெரிய கொடுமை. நினைக்க நினைக்க அவனுக்கு அழுகை அழுகையாக வந்தது.
கண்ணீரைத் துடைத்துக் கொண்டே கடை வீதியில் நடந்தான் பொபி. கடைசி நேர பரிசுகள் வாங்கும் மக்கள் கூட்டத்தால் கடைத் தெரு மிகுந்த ஆரவாரத்துடன் இருந்தது. கடைகளில் அழகழகான பரிசுப் பொருட்கள் அலங்காரமாக அடுக்கப்பட்டு அவை பிரகாசமான விளக்கொளியில் மினுமினுத்துக் கொண்டிருந்தன. பொபி கடைகளின் முன் நின்று ஆவல் மின்னும் கண்களுடன் பகட்டாக ஜொலிக்கும் அப்பரிசுப் பொருட்களை பார்த்துக் கொண்டிருந்தான். தத்தமது தந்தைமாரின் கரங்களைப் பற்றியவாறு சிறுவர் சிறுமிகள் கடைகளிலும் வீதிகளிலும் நிறைந்திருந்தனர். பொபி அவர்களை ஏக்கத்துடன் பார்த்தான். அவனது தந்தை இருந்திருந்தால் அவனும் அவரது கையைப் பற்றிக் கொண்டு இந்தக் கடை வீதியில் மகிழ்ச்சியாகச் சுற்றிக் கொண்டிருந்திருப்பான். அந்த நினைவில் அவனுக்கு கண்ணீர் பீறிட்டுக் கொண்டு வந்தது. கண்ணீரைத் துடைத்துக் கொண்டே ஒவ்வொரு கடை கடையாகப் பார்த்துக் கொண்டே வந்தவன் எந்த வழியும் பிறக்காததால் மிகுந்த துக்கத்துடன் வீட்டிற்குப் போகப் புறப்பட்டான். கடை வீதி உள்ள தெருவைக் கடந்து வீட்டிற்குப் போகும் வழியில் திரும்பும் போது தெருவிளக்கின் ஒளியில் தரையில் ஏதோ மின்னிக் கொண்டிருப்பதைக் கண்டான். மிகுந்த ஆவலுடன் குனிந்து எடுத்த போது அது ஒரு பத்து சத நாணயம் என்பதைக் கண்டு கொண்டான். அவனுக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. அந்த பத்து சதத்திற்கு அம்மாவுக்கு ஏதாவது பரிசுப் பொருள் வாங்கி விடலாம் என்ற நம்பிக்கை துளிர்த்தது. இந்த மகிழ்ச்சியால் அவனது உடலில் இதமான சூடு பரவியது. பெரும் செல்வம் கிடைத்துவிட்டது போன்ற மகிழ்ச்சியுடன் மீண்டும் கடைகள் உள்ள தெருவுக்கு ஓடினான்.
இந்த பத்து சதத்திற்கு எதுவும் வாங்க முடியாது என்று ஒவ்வொரு கடையில் உள்ள விற்பனையாளர்களும் கூறக் கூற அவனது ஆவலும் மகிழ்ச்சியும் மீண்டும் செத்து மடிந்தன. தொய்ந்து போன மனதுடன் இறுதியாக உள்ள பூக்கடையிலும் முயற்சி செய்து பார்த்துவிடலாம் என்று சற்றும் நம்பிக்கை இல்லாத மனதுடன் அதன் உள்ளே சென்றான். அங்கே பூக்கள் வாங்குவதற்காக நின்ற கியூவில் கையில் உள்ள பத்து சத நாணயத்துடன் அவனும் இணைந்து கொண்டான். அவனுக்கு முன்னே உள்ளவர்கள் அதிக பணத்தைக் கொடுத்து அழகழகான பூங்கொத்துக்களை வாங்கிச் சென்றனர். அவனது பத்துச் சதத்திற்கு ஒரு பூவைக்கூட வாங்க முடியாது என்பது அவனுக்கு புலப்பட்டது. அவனது முறை வந்தது. தம்பி, என்ன பூ வாங்க வந்திருக்கிறாய் என்று கடைக்காரர் அவனைக் கேட்ட போது அவனுக்கு மிகுந்த தயக்கமும் வெட்கமும் ஏற்பட்டது. தனது கையிலுள்ள பத்து சத நாணயத்தைக் கண்டால் முந்திய கடைக்காரர் போல இவரும் ஏதும் வாங்க முடியாது என்று கையை விரித்துவிடுவாரோ? பின்னர் ஒருவாறு தன்னை சமாளித்துக் கொண்டு  பத்து சதத்தை கடைக்காரருக்கு முன்னே நீட்டி எனது அம்மாவுக்கு கிறிஸ்மஸ் பரிசாக நான் ஒரு பூ வாங்கலாமா என்று தயங்கித் தயங்கிக் கேட்டான். கடைக்காரர் பொபியையும் அவனது கையில் உள்ள 10 சத நாணயத்தையும் மாறி மாறிப் பார்த்தார். அவனது கண்களில் தெரிந்த ஏக்கத்திலிருந்தும் அவனது ஆடையிலிருந்தும் அவனது நிலைமையைப் புரிந்து கொண்டவராக அவனது தோள்களில் ஆதரவாகத் கையை வைத்து தம்பி, சற்று விலகி இங்கேயே காத்திரு. உனக்கு எவ்வாறு உதவலாம் என்று நான் பார்க்கிறேன் என்றார் அன்பான குரலில்.
பொபியின் மனதில் சிறிது நம்பிக்கை பிறந்தது. கடைசியில் மிஞ்சும் ஒரு பூவையாவது தனக்குத் தருவார் என்று எண்ணிக் கொண்டான். ஆயினும் முதல் கடைகளில் கிடைத்த ஏமாற்றத்தால் அவன் அதிக மகிழ்ச்சி கொள்ளவில்லை. மனிதர்கள் வந்து வந்து வண்ண வண்ண பூக்கள் கொண்ட பூங்கொத்துக்களை வாங்கிச் செல்வதைப் பார்த்தபடி கடையின் ஒரு பகுதியில் பொறுமையாக நின்றிருந்தான். அவன் சிறுவனாக இருந்தாலும், மனிதர்கள் வாங்கிச் செல்லும் அழகான பூங்கொத்துக்களைப் பார்த்த போது ஏன் அம்மாக்களும் பெண்களும் பூக்களை விரும்புகிறார்கள் என்பது அவனுக்கு புரிந்தது. கடைசி வாடிக்கையாளனும் போக கடையின் கதவு பூட்டப்படும் ஒலியைக் கேட்டதும் தனக்கு ஒரு பூவாயினும் கிடைக்குமோ என்ற ஆவலுடன் பொபி கடைக்காரரைத் தேடினான். அவரைக் காணவில்லை. திடுக்குற்று சுற்றும் முற்றும் பார்த்தான். கடையில் யாரும் இல்லை அவன் மட்டும் தனியே நின்றிருந்தான். அந்த தனிமை அவனுக்கு சற்று பயமூட்டியது. மீண்டும் சுற்றும் முற்றும் பார்த்த போது திடீரென்று கடைக்காரர் உள்ளேயிருந்து counter க்கு வருவதைக் கண்டான். அவரது கைகளில் 12 நீண்ட காம்புகளுடன் கூடிய பிரகாசமான சிவப்பு நிற ரோஜாப்பூக்களை பொபி பார்த்தான். அவர் அவற்றுடன் பச்சைப் பசேல் என்றிருந்த இலைகளையும் வெள்ளைச் சிறு பூக்கள் கொண்ட ஓரிரு தண்டுகளையும் சேர்த்து அகலமான வெள்ளிநிற ரிபனால் கட்டுவதை கண்டான். பின்னர் அந்த பூங்கொத்தை கவனமுடன் ஒரு நீண்ட வெள்ளைப் பெட்டியில் வைத்தார். யாருக்கோ இந்த பூங்கொத்தை அவர் மிக அழகாகத் தயாரிப்பதைக் கண்ட போது பொபியின் மனது மீண்டும் ஏக்கம் கொண்டது.
இந்த பூங்கொத்து பத்து சதம் தம்பி, என்றவாறு கடைக்காரர் பத்து சதத்தை அவனிடமிருந்து வாங்க கையை நீட்டிய போது அவன் உணர்ச்சிகளின் பெருக்கத்தால் திக்குமுக்காடிப் போனான். பின்னர் மிகுந்த தயக்கத்துடன் பத்து சதத்தை அவரிடம் கொடுத்தான். இது உண்மையாக இருக்குமா? அவனால் நம்ப முடியவில்லை. பத்து சதத்திற்கு எதுவும் வாங்க முடியாது என்றுதானே அனைவரும் கூறினர். இப்போது 12 அழகான ரோஜாப்பூக்கள் பத்து சதமா? இது கனவில்லைதானே. பொபி தன் கையைத் தானே கிள்ளிப் பார்த்தான். பொபியின் தயக்கத்தைக் கண்ணுற்ற கடைக்காரர் அன்புடன் கூறினார். ஒரு மலிவு விற்பனையில் ஒரு டசின் ரோஜாப்பூக்கள் பத்து சதத்திற்குக் கிடைத்தது. உனக்கு இந்த பூங்கொத்து பிடித்திருக்கிறதா? பின்னர் பொபி தயங்கவில்லை. கடைக்காரர் பூங்கொத்தைக் கொண்ட அந்த நீண்ட வெள்ளைப் பெட்டியை அவனது கையில் கொடுத்த போது அது கனவல்ல உண்மை என்று பொபி புரிந்து கொண்டான். மிகுந்த நன்றியுடனும் அந்தப் பூக்கள் போல அழகாக மலர்ந்த முகத்துடனும் அவன் அதனைத் தனது கைகளில் வாங்கி தனது உளபூர்வமான நன்றியைத் தெரிவித்து கொண்டான். கடையின் வாசல் வரை வந்து அவனை வழியனுப்பி வைத்தார் கடைக்காரர்.  Merry கிறிஸ்மஸ் மகனே என்ற அவரின் வாழ்த்து வீதியில் இறங்கி நடக்கத் தொடங்கிய பொபியினது செவிகளில் கேட்டது. நன்றி என்று பதிலுக்கு சொல்லிவிட்டு பூங்கொத்து பெட்டியை கவனமாகப் பிடித்தபடி மனம் கொள்ளாத மகிழ்ச்சியுடன் அந்த ஆறு வயதுச் சிறுவன் தனது வீட்டை நோக்கி ஓடத் தொடங்கினான்.
கதை இத்துடன் முடிந்து போகவில்லை.  கடைக்காரர் கதவைப் பூட்டிக் கொண்டு உள்ளே திரும்பிய போது உள்ளேயிருந்து அவரின் மனைவி வந்தாள். யாருடன் அங்கே பேசிக் கொண்டிருந்தீர்கள்? சற்று முன்னர் நீங்கள் கட்டிய அந்த அழகான பூங்கொத்து எங்கே? என்று தொடர்ந்து கேள்விகளை அள்ளி வீசினாள். ஜன்னலுக்கு ஊடாக வெளியே உள்ள இருட்டைக் கண்கொட்டாது பார்த்த கடைக்காரர் தனது கண்களில் சுரந்த கண்ணீரை இமைகளை வெட்டி மறைத்துக் கொண்டே கூறினார். இன்று காலை ஒரு விசித்திரமான அனுபவம் எனக்கு ஏற்பட்டது. நான்  காலையில் வாங்கி வந்த பூக்களை அடுக்கி, கடையைத் திறக்க ஆயத்தம் செய்து கொண்டிருந்த போது, ஒரு விசேடமான பரிசுக்காக என்னிடமுள்ள மிகச் சிறந்த ஒரு டசின் ரோஜாப்பூக்களை ஒரு புறமாக வைக்கும் படி என்னுள்ளே ஒரு குரல் உறுதியாகக் கூறியது. அந்த நேரம் எனக்கு அது விளங்கவில்லை. எனது மனதில் ஏதோ கோளாறு ஏற்பட்டுவிட்டதோ என்று கூட சந்தேகப்பட்டேன். ஆயினும் அந்த பூக்களை ஒரு புறமாக எடுத்து வைக்க வேண்டும் என்று ஏனோ எனது மனம் அடம் பிடித்தது. எனவே மிக அழகான மிகவிலையுயர்ந்த 12 ரோஜாப்பூக்களை எடுத்து ஒரு புறமாக வைத்தேன். சிறிது நேரத்திற்கு முன்னர் மிக வறுமையான தோற்றம் கொண்ட ஒரு சிறுவன் பத்து சத நாணயத்துடன் தனது தாய்க்கு கிறிஸ்மஸ் பரிசாக ஒரு பூ வாங்க வந்திருந்தான். பல வருடங்களின் முன்னர் இவ்வாறு வறுமையில் வாடிய என்னையே நான் அவனில் கண்டேன். மிக வறுமையில் வாடிய என்னால் எனது தாய்க்கு ஒரு சிறு பரிசு கூட வாங்க முடியவில்லையே என்று நான் ஏங்கி நின்ற போது, தாடியுடன் கூடிய ஒரு மனிதர் என்னை வீதியிலே நிறுத்தி தான் எனக்கு 10 டொலர்கள் தர விரும்புவதாகக் கூறி அதனைத் தந்தார். நான் அவரை முன்னர் ஒருபோதுமே கண்டிருக்கவில்லை. அந்தப் பணம் அப்போது எனது மனதில் ஏற்படுத்திய மகிழ்ச்சி எனக்கு இன்றும் நினைவிருக்கிறது. இன்று அந்த சிறுவனைக் கண்ட போது காலையில் நான் கேட்ட குரலுக்கு அர்த்தம் எனக்கு விளங்கியது. அவனிடம் நான் பூங்கொத்தைக் கொடுத்த போது அவனது முகத்தில் ஏற்பட்ட மலர்ச்சி இருக்கிறதே அது என் வாழ்நாள் முழுவதும் என் நினைவில் கூட வரும். அவர் கூறியதைக் கேட்டு மகிழ்ச்சியால் உணர்ச்சி வசப்பட்ட கடைக்காரரின் மனைவி அவரைக் கட்டித் தழுவி கண்ணீர் பெருக்கினாள். கடையைப் பூட்டிக் கொண்டு அந்த இருவரும் வெளியே நடந்த போது மகிழ்ச்சியாலும் திருப்தியாலும் அவர்களது உள்ளம் நிறைந்திருந்தது. அந்த டிசம்பர் மாதக் கடுங்குளிரால் அவர்களை எந்த வகையிலும் பாதிக்க முடியவில்லை.
கஷ்டமான நேரங்களில் எமக்குக் கிடைக்கும் உதவிகளை நாம் ஒரு போதும் மறந்துவிடலாகாது. சந்தர்ப்பம் வரும் போது கஷ்டப்படுகிற இன்னொருவருக்கு நாம் அதனை திரும்ப வழங்காவிடின் நாம் மனிதர்களே அல்லர்.

2 comments: